தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சியை அமைப்போம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

0
6

தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சியை அமைப்போம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

மதுரை: மதுரை பாண்டிகோவில் திடலில் அ.தி.மு.க.- பாரதிய ஜனதா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பங்கேற்ற பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

வருகிற சட்டமன்ற தேர்தலில் இன்றைக்கு சிறப்பாக நடைபெற்று வரும் அம்மாவின் அரசு தொடர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.

அந்த வகையில் அ.தி.மு.க., பாரதிய ஜனதா கூட்டணி அருமையாக அமைந்துள்ளது. இந்த கூட்டணி வெற்றி கூட்டணி.

234 தொகுதிகளில் போட்டியிடும் இந்த கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிப்போம். மக்களுக்கு நன்மை செய்யக்கூடிய அரசு மத்தியிலும், மாநிலத்திலும் அமைந்துள்ளது.

தமிழகத்தில் புரட்சித் தலைவி அம்மாவின் வழியில் நடைபெறும் அரசு மத்தியில் பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைந்துள்ள அரசு மக்களுக்கான திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

தமிழகத்தின் வளர்ச்சியில் மத்திய அரசு முக்கிய பங்காற்றி பல்வேறு வகைகளில் உதவிகளை செய்து வருகிறது.

கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று பரவிய நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பாக நடவடிக்கையை மேற்கொண்டார்.

ஒரே ஆண்டில் கொரோனா வைரசை தடுக்கும் தடுப்பூசியை கண்டுபிடிப்போம் என்று வாக்களித்தார். அவர் கூறியது போல ஒரே ஆண்டில் உலகமே வியக்கும் வகையில் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்து நமது நாட்டுக்கு பிரதமர் நரேந்திரமோடி உலக அளவில் பெருமையை சேர்த்தார்.

வல்லரசு நாடுகள் கூட கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்காத நிலையில் பிரதமரின் தலைமையில் மருத்துவ நிபுணர்களின் அயராத உழைப்பால் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது. இதற்கு பாரத பிரதமர் அளித்த ஊக்கம் காரணமாக கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி போடும் நிலை நடந்து வருகிறது.

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் ஆற்றல் மிக்க, திறமை மிக்க பிரதமராக நரேந்திர மோடி விளங்கி வருகிறார்.

கொரோனா தொற்று காலத்தில் மக்கள் விழிப்புடன் இருக்க மத்திய- மாநில அரசுகள் எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் மக்கள் மீது பிரதமருக்கு எவ்வளவு அக்கறை என்பதை நிரூபித்துக் காட்டியது.

கொரோனா தடுப்பில் ஒரு முதன்மை பணியாளராக பிரதமர் நரேந்திரமோடி சிறப்பாக செயல்பட்டார் என்பதை இந்த நேரத்தில் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மதுரை பாண்டிகோவில் சாலையில் உள்ள அம்மா திடலில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார் அப்போது, மீனாட்சி சுந்தரேஸ்வரரை தரிசித்தேன், நான் ஆசீர்வதிக்கப் பட்டவனாக உணர்கிறேன் என்று கூறினார்.

தமிழகத்தில் பல்வேறு திட்டங்கள் தந்தபோது கேட்கிற நிதியை மத்திய அரசு நமக்கு தந்தது. இதனால் தமிழகத்திலும் பல்வேறு வளர்ச்சி பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் கோடி மதிப்பில் சாலை மேம்பாட்டு பணிக்காக மத்திய அரசு நிதி தந்தது. மேலும் தமிழகத்தில் நடைபெற்ற உலக தொழில் முனைவோர் மாநாடு மூலம் 314 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் கோடி மதிப்பிலான தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. அவற்றில் பல்வேறு பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் புதிது, புதிதாக தமிழகத்தில் தொழில்கள் வந்து சேர்ந்துள்ளன.

2006-2011 வரை தி.மு.க. ஆட்சியில் கடுமையான மின்வெட்டு தமிழகத்தில் நிலவியது. தொழிற்சாலைகள், தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்.

2011-ல் ஆட்சிக்கு வந்த புரட்சி தலைவி அம்மா 3 ஆண்டுகளில் தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றிக் காட்டுவேன் என்றார். அவர் கூறியது போல தமிழகம் மின்மிகை மாநிலமாக திகழ்ந்து வருகிறது.

தி.மு.க. ஒரு குடும்ப கட்சி. வாரிசு அரசியல் நடைபெறும் கட்சி. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி. இங்கிருந்த பல பேர் அங்கே சேர்ந்து தற்போது தேர்தலில் போட்டியிடுகிறார்கள். மக்களுக்கு சேவை செய்யும் எண்ணம் தி.மு.க.வுக்கு கிடையாது. ஆனால் மக்கள் சேவையை செய்கின்ற இயக்கம் அ.தி.மு.க. மற்றும் பாரதிய ஜனதா உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் தான் மக்களுக்காக சேவை செய்கின்ற, உழைக்கின்ற கட்சிகள் ஆகும்.

அ.தி.மு.க., பாரதிய ஜனதா உள்ளிட்ட கூட்டணி கட்சிகளால் தான் தமிழகம் ஏற்றம் பெறும். மக்கள் வளர்ச்சி அடைவார்கள்.

எனவே வருகிற தேர்தலில் அ.தி.மு.க.- பாரதிய ஜனதா உள்ளிட்ட கூட்டணி கட்சி வேட்பாளர்களை அமோக வெற்றி பெறச் செய்து மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைய மக்கள் துணை நிற்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.