தமிழகத்தில் நிலவும் நிச்சயமற்ற அரசியல்: தமிழக அரசை வசப்படுத்திக் கொள்ள பாஜக முயல்வது ரகசியமானதல்ல

0

தமிழகத்தில் நிலவும் நிச்சயமற்ற அரசியல்: தமிழக அரசை வசப்படுத்திக் கொள்ள பாஜக முயல்வது ரகசியமானதல்ல

தமிழகத்தில் நிலவும் நிச்சயமற்ற அரசியல் தன்மையைப் பயன்படுத்திக் கொண்டு அதிமுகவையும், தமிழக அரசையும் வசப்படுத்திக் கொள்ள பாஜக முயல்வது ரகசியமானதல்ல என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
தலைமைச் செயலர் ராமமோகன் ராவ் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்திய வருமான வரித் துறையினர் தங்கம், ரொக்கப் பணம், ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளனர். நேர்மையான ஐஏஎஸ் அதிகாரிகள் முக்கியமற்ற துறைகளுக்கு அனுப்பி முடக்கப்படுவதும், முக்கியமான துறைகளுக்குத் தேர்வு செய்யப்படும் அதிகாரிகள் ஏற்கெனவே குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களாக இருப்பதும் தமிழகத்தில் பெரிதும் விமர்சனத்துக்கு உள்ளாகும் நடவடிக்கைகளாகும். இதில், ராமமோகன ராவ் இயற்கை வளக் கொள்ளைக்கு துணை போனதாக ஏற்கெனவே குற்றச்சாட்டுக்கு ஆளானவர். அவர் மீதான புகார்களை உரிய விசாரணை செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வருமான வரித் துறை, மத்திய புலனாய்வுத் துறை போன்ற அமைப்புகள் ஊழல் நடவடிக்கைகளை தடுக்க எடுக்கும் நடவடிக்கைகள் வெளிப்படையான நோக்கத்தில் அமைந்தால் பாராட்டத்தக்கது. ஆனால், மத்திய அரசின் விருப்பத்துக்கு ஏற்ப எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை அச்சுறுத்தி அடிபணிய வைக்கும் கருவிகளாக இந்த அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. அதுபோல, தமிழகத்தில் நிலவும் நிச்சயமற்ற அரசியல் தன்மையைப் பயன்படுத்தி அதிமுகவையும், தமிழக அரசையும் வசப்படுத்திக் கொள்ள பாஜக முயல்வது ரகசியமானதல்ல. எனவே, மாநில உரிமைகள் உறுதியுடன் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.