தமிழகத்தில் தாமரை மலருமா? தமிழக பாஜக அடுத்த தலைவர் யார்?

0

தமிழகத்தில் தாமரை மலருமா?

தமிழக பாஜக அடுத்த  தலைவர் யார்?

தமிழக பாஜக தலைவரின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில், அடுத்த தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

மிழகத்தை திராவிட கட்சிகள் ஆட்சி புரியத்துவங்கி, ஏறத்தாழ 50 ஆண்டுகள் நெருங்கி விட்டது. இந்த 50 ஆண்டுகளில் திராவிட கட்சிகளுக்கு நேரடி போட்டியாக கூட தேசிய கட்சிகள் இருந்ததில்லை. இன்னும் சொல்லப்போனால் தேசிய கட்சிகளுக்கு துளி வாய்ப்பை கூட தமிழகம் வழங்கி விடவில்லை. கடந்த 50 ஆண்டுகளும் திராவிட கட்சிகளுக்கிடையேயான ஆட்சிதான் நடந்து வருகிறது. திராவிட கட்சிகளுடன் கூட்டணி அமைத்துதான் தேசிய கட்சிகள் பயணித்து வருகின்றன. தமிழகத்தில்  தேசிய கட்சிகள் பெரிய அளவில் வளர்ச்சி பெற்று விடவில்லை.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தமிழகத்தில் பின்னடைவை சந்தித்தது. இதனால் தமிழக பாஜக தலைவரான தமிழிசை சவுந்தரராஜன் மாற்றப்படுவார் என்று தகவல் வெளியாகியிருந்தது.

தேசிய அளவிலும் தமிழகத்திலும் அரசியல் கட்சிகள் கட்சியின் உட்கட்டமைப்பில் கவனம் செலுத்த தொடங்கி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராகுல் விலகியது, திமுகவில் உதயநிதிக்கு புதிய பதவி, அதிமுகவில் ஒற்றை தலைமை, அமமுக முக்கிய நிர்வாகிகள் மாற்றம், என அரசியல் கட்சிகள் அனைத்துமே புதிய மாற்றத்தை சந்தித்து வருகின்றன.

இந்த மாற்றத்திற்கான பட்டியலில் தமிழகத்தில் அதிக விமர்சனத்திற்கு உள்ளாகும் கட்சியான பாஜக இணைய உள்ளது.

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் பதவிக்கு விரைவில் தேர்தல் வர இருக்கிறது. தற்போது தலைவராக இருக்கும் தமிழிசையின் பதவி காலம் சில மாதங்களில் முடிய இருப்பதால் தமிழக பாஜகவின் புதிய தலைவர் யார் என்று அக்கட்சி உள்ளேயும் அரசியல் வட்டாரத்திலும் பரவலாக விவாதிக்க பட்டு வருகிறது.

தமிழிசை சௌந்தரராஜன்

கடந்த ஐந்தரை வருடங்களாக தமிழக பாஜகவின் தலைவராக இருந்து வருபவர் தமிழிசை சௌந்தரராஜன். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மற்ற மாநிலங்களில் பாஜக மிக பெரிய வெற்றியை பெற்று இருந்தாலும் தமிழகத்தில் அக்கட்சி ஒரு இடம் கூட வெற்றி பெற முடியாமல் தோல்வியை சந்தித்தது. தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்த மத்திய பாஜக தமிழகத்தில் கட்சியை வளர்ப்பதற்கான திட்டங்களை வகுத்துள்ளது. கட்சியின் உள்கட்டமைப்பை வலுபடுத்தும் முதல் நடவடிக்கையை மாநில தலைவர் பதவியில் இருந்து துவங்க உள்ளது.

இது குறித்து தமிழக பாஜக நிலவரங்களை நன்கு அறிந்த  கட்சி நிர்வாகி ஒருவரிடம் பேசிய போது, மற்ற மாநிலங்களை விட தமிழக அரசியல் நிலவரம் என்பது   வித்தியாசமானது. தமிழக பாஜக தலைவர் பதவி என்பது ஒரு முள்கிரீடம் போன்றது என்பதை மத்திய பாஜகவுக்கும் தெளிவா புரிஞ்சு இருக்கு.

மக்களவை தேர்தல் தோல்வியால் தொண்டர்கள் மத்தியில் உற்சாகம் இல்லாமல் காணப்படுகிறது. தமிழகத்தில் பாஜக தன்னை நிலை நிறுத்துக்கொள்ள, தொண்டர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தி கட்சிக்கு புது ரத்தம் புகுத்த வேண்டிய அவசியம் உள்ளதால் ஒரு நல்ல தலைமையை தமிழகத்துக்கு அமைத்து கொடுக்க வேண்டுமென  மத்திய பாஜக விரும்புகிறது.

புதிதாக தேர்ந்து எடுக்கபடும் மாநில தலைவருக்கு பெரிய பொறுப்புகள் இருப்பதால் அதற்கு தகுதியான நபரா அவர் இருக்கணும்னு தலைமை விரும்புகிறது .தமிழக பாஜக மூத்த தலைவர்கள் யாரும் மக்களை கவரும் முகமா இல்லை. அதுமட்டும் இல்லாமல் கட்சியில் அனைவரையும் அனுசரித்து செல்பவராகவும், தமிழகத்தில் பாஜகாவுக்கு  என்று ஒரு முகம் வேண்டுமென்றும், யாருமே எதிர்பார்க்காத ஒருவரை தலைவராக அறிவிக்க ஒருசிலரை மத்திய தலைமையே தயார் செய்தும் வைத்து இருக்கிறது.

தற்போது வரைக்கும் தமிழக பாஜக தலைவருக்கான தலைமை பதவிக்கு சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி ஸ்ரீனிவாசன், கே.டி.ராகவன். ஏ.பி.முருகானந்தம், மதுரை ஸ்ரீனிவாசன் இந்த ஐந்து பேரும் பட்டியல்ல இருக்கின்றனர்.

சி.பி.ராதாகிருஷ்ணன்

இவர்களில் யாருக்கு வாய்ப்பு இருக்குன்னு பார்த்தால், சி.பி.ராதாகிருஷ்ணன் பொறுத்த வரைக்கும் ஏற்கனவே ஒரு முறை தலைவரா இருந்து இருக்கிறார். இது மட்டும் இல்லாம பல வருடங்களா கட்சியில் இருந்தாலும் மக்கள் செல்வாக்கு மிக்க தலைவரா அவர் மாறல. மக்களவை தேர்தலில் தனக்கு  கட்டாயமா சீட் வேணும்ன்னு சண்டை போட்டு வாங்கியும் அவரால் ஜெயிக்க முடிய வில்லை. தேர்தல் காலங்களில் மட்டுமே முகம் காட்டுபவர்  என்ற குற்றசாட்டும் அவர் மீது இருக்கிறது. அதனால சி.பி.ராதாகிருஷ்ணனுக்கான வாய்ப்புகள் குறைவுதான்.

வானதி ஸ்ரீனிவாசன்

வானதி ஸ்ரீனிவாசனை பொறுத்த வரைக்கும் இந்த  தேர்தலில் கோவையில் நிற்க சீட் கேட்டிருந்தார். ஆனால் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தரப்பட்டுவிட, அவரால் சீட் வாங்க முடியாத நிலையில்  தான் இருக்கிறார். அது மட்டுமில்லாம ஏற்கனவே பெண் ஒருத்தர் தலைவரா இருப்பதால் மீண்டும் பெண் தலைவருக்கு வாய்ப்பு இல்லை.

கே.டி.ராகவன்

கே.டி.ராகவன் தொலைகாட்சி மூலமா ஓரளவு தெரிந்த முகமா இருந்தாலும், கட்சி தொண்டர்களோட அவருக்கு எந்த தொடர்பும் கிடையாது. அதவிட அவருக்கு பெரிய மைனஸ் ஜாதி. ஏற்கனவே பாஜகவிற்கு ஒரு  உயர்சாதி பிம்பம் இருப்பதால் அந்த ஜாதியை சார்ந்தவரை தலைவராக்கினால் தேவையில்லாத சர்ச்சை ஏற்படும்.

ஏ.பி. முருகானந்தம்

ஏ.பி.முருகானந்தம் கட்சியின் புதுமுகம். இளையவர் மோடி, அமித்ஷா நேரடி பார்வையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில்  தேர்தல் பணியாற்றியவர். பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்களின் போரட்ட குழு தலைவராக செயல்பட்டவர். முக்கியமா மேற்கு வங்கம், கேரளா போன்ற மாநிலங்களில் போரட்டங்களை வெற்றிகரமா நடத்தி காட்டி தலைமையின் பாராட்டை பெற்றவர். தமிழகத்தில் கட்சியில் உழைப்பவர்களுக்கு பொறுப்பு வழங்கனும்னு சொல்லி இங்குள்ள சில மூத்த தலைவர்களிடம் கொஞ்சம் கடினமாகவே கோரிக்கை வைத்தவர். அதனால் சிலர் இவருக்கு முட்டுகட்டை போடலாம். ஆனா  இளைஞர், புதியவர் ஒருவரை தலைவராக கொண்டுவர வேண்டும் என்று மத்திய தலைமை முடிவு எடுத்தால் அடுத்த தமிழக பாஜக மாநில தலைவராவதற்கு முருகானந்ததிற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.

மதுரை பேராசிரியர் ஸ்ரீனிவாசன்

இந்த ரேசில் கடைசியில் இருப்பவர் மதுரை பேராசிரியர் ஸ்ரீனிவாசன். கட்சி விதியின்படி தலைவர் பதவிக்கு போட்டியிடணும்னா கட்சி உறுப்பினர் ஆகி ஆறு வருஷம் முடிஞ்சு இருக்கனும். மதுரை சேர்ந்த ஸ்ரீனிவாசன் கட்சிக்குள்ள வந்ததே 2016ல தான்.

புதிய மாநில தலைவர் தேர்வுக்கு அப்புறம் கட்சிக்குள் பல்வேறு அதிரடி மற்றங்கள் இருக்கும். இனிமேல் தமிழகத்தில் பாஜக புது ரூட்ல பயணிக்கும் என்று சொல்லி முடித்தார்.

சவால்கள்

உலகிலேயே மிக கடினமான பதவி என்றால் அது தமிழக பாஜகவின் தலைவர் பதவி தான். நடை, உடை, பேச்சு, என அவர்களின் அத்தனை நடவடிக்கையும் கேலிக்குள்ளாக்கபடும் தமிழகத்தில், அத்தனையும் மீறி வெறுப்புகளை புறம் தள்ளி மக்கள் மனதில் தாமரையை மலர செய்வது என்பது தான் தமிழக பாஜகவின் புதிய தலைவருக்கு முன் உள்ள சவால்கள்.

தற்போது அனைவரும் பா.ஜ.க.வை உற்று நோக்க துவங்கியுள்ளனர். இந்திய அளவிலும் கூட பாஜக மெல்ல மெல்ல வளர்ந்துதான், மத்தியில் அதிகாரத்துக்கு வந்தது என்பதையும் நாம் மறந்து விட முடியாது.