தமிழகத்தின் அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளி மாணவர் மற்றும் ஆசிரியர்களுக்கு ‘புரட்சியாளர் விருதுகள்’ அறிவிப்பு!

0
தமிழகத்தின் அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளி மாணவர் மற்றும் ஆசிரியர்களுக்கு ‘புரட்சியாளர் விருதுகள்’ அறிவிப்பு!
  • தன்னார்வத் தொண்டு நிறுவனங்களான “யூ ஆர் லவுட்” மற்றும் “அம்மா கல்வியகம்” இணைந்து ஏற்பாடு!
  • 67 மாணவர்கள் மற்றும் 33 ஆசிரியர்களுக்கு தமிழக அமைச்சர் திரு எஸ்.பி. வேலுமணி வழங்குகிறார்!
  • ஆகஸ்ட் 31ம் தேதி கோவையில் உள்ள கே.பி.ஆர். பொறியியல் கல்லுரியில் நடைபெறுகிறது! 

சென்னை,

சென்னையைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டு நிறுவனங்களான ‘யூ ஆர் லவுட்’ (You are Loved) மற்றும் “அம்மா கல்வியகம்’, கோவையில் உள்ள கே.பி.ஆர். இன்ஸ்டிட்யூட் ஆஃப் என்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி (KPR Institute of Engineering &Technology)-யுடன் இணைந்து, 4-ஆவது ஆண்டாக இந்த ‘புரட்சியாளர் விருது’களை வழங்க உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே இருந்து, இந்த விருதுக்கானவர்களை தேர்வு செய்துள்ளனர். நடப்பு ஆண்டுக்கான விருது வழங்கும் விழா, 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதி, கோவை, கே.பி.ஆர். இன்ஸ்டிடியூட் ஆஃப் என்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி வளாகத்தில் நடைபெற உள்ளது. அதில் மாண்புமிகு தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் திரு எஸ்.பி. வேலுமணி சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு இந்த விருதுகளை வழங்க உள்ளார்.

தன்னார்வ தொண்டு நிறுவனங்களான ‘யூ ஆர் லவுட்’ மற்றும் ‘அம்மா கல்வியக’த்தைப் பொறுத்தவரையில் இந்த விருது வழங்கும் நிகழ்வு தனிச் சிறப்பு மிக்கது. பெருமைக்குரிய நிகழ்வும் கூட. தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் படிக்கும் திறமையான மாணவர்கள், பணியாற்றும் சிறந்த ஆசிரியர்கள், பெற்றக் குழந்தைகளுக்காக தன்னலமின்றி பணியாற்றும் பெற்றோர், சமூகத்தின் பல நிலைகளில் குழந்தைகளை மேம்படுத்தும் பொதுப் பணியில் பங்கேற்று மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக உள்ள தனிநபர் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஆகியோர் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்குத்தான் இந்த விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இதற்காக, யூஆர் லவுட் மற்றும் அம்மா கல்வியகம் இரண்டும் – தமிழகத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கத்துடன் இணைந்து, அவர்களது உதவியுடன் இந்த புரட்சியாளர் விருதுக்குத் தகுதியான நபர்களைத் தேர்வு செய்து வருகின்றனர். இதன்படி, நடப்பு ஆண்டுக்கு, தமிழகத்தின் 33 வருவாய் மாவட்டங்களில் இருந்து, தலா ஒரு ஆசிரியர் என 33 பேரும், 67 கல்வி மாவட்டங்களில் இருந்து தலா ஒருவர் என 67 மாணவர்களும் விருது பெற உள்ளனர்.  மேலும் 2பெற்றோர்கள்,  2 தன்னார்வ அமைப்புகளும் இவ்விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

சிறந்த மாணவர்களுக்கான விருது, ‘மாணவப் புரட்சியாளர் விருது’ எனவும், சிறந்த ஆசிரியர்களுக்கான விருது ‘ஆசிரியர் புரட்சியாளர் விருது’ எனவும், சிறந்த பெற்றோருக்கான விருது ‘பெற்றோர் புரட்சியாளர் விருது’ எனவும், தன்னார்வத் தொண்டு செய்யும் நபர் அல்லது அமைப்புக்கான விருது ‘சமூகப் புரட்சியாளர் விருது’ எனவும் குறிப்பிடப்படுகிறது.

புரட்சியாளர் விருதுகள் குறித்து செய்தியாளர்களிடையே பேசிய ‘யூ ஆர் லவுட்’ தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் செயல் இயக்குனர் திரு.டேனியல் ஜேக்கப், “இந்த விருது வழங்குவதன் முக்கிய நோக்கம், மாணவர்களை அரசுப் பள்ளிகளைத் தேர்வு செய்து பயில வைப்பதும், ஆசிரியர்களை அரசுப் பள்ளியைத் தேர்வு செய்து அங்கு பணியாற்றச் செய்வதும்தான். தமிழக அரசுப் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவர்கள், திறமை மற்றும் புத்திசாலித்தனத்தில் மற்ற யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. இது, இன்று வரை உண்மையாகத் தொடர்கிறது. இந்நிலையில், இதுபோன்ற விருதுகளும், அங்கீகாரமும், அரசுப் பள்ளி மாணவர்களை மேலும் தன்னம்பிக்கை கொள்ளச் செய்வதுடன், அவர்களது முடிவு சரியானது தான் என்பதை உறுதி செய்வதாகவும் அமையும். குறிப்பாக, கிராப்புற ஏழை மாணவர்களையும் பொருளாதாரத்திலும், சமூகப் பின்னணியிலும் அடித்தட்டில் உள்ள குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களையும் நம்பிக்கை கொள்ளச் செய்து, அவர்களிடையே ஒரு சாதகமான, முன்னேற்றம்… வளர்ச்சி நோக்கிய மனநிலையை உண்டாக்க இந்த விருதுகள் உதவும்” எனத் தெரிவித்தார்.

இந்த விருதுகளின் ஒவ்வொரு பிரிவுக்கான அம்சங்களும் தனித்தன்மை வாய்ந்தவை. இந்த ஒவ்வொரு விருதுக்கும் பரிசீலிக்கப்படும் நபர்களின் தன்மை, பின்னணி, எதிர்பார்க்கப்படும் தகுதி என ஒவ்வொன்றும் மாறுபடுவதால், அதற்கேற்பவே இந்த அம்சங்களும் அமையுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த விருது குறித்து அம்மா கல்வியகத்தின் நிறுவனர் ‘ஆஸ்பையர்’ திரு. கே. சுவாமிநாதன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இந்த விருதுக்குப் பரிசீலிக்கப்படும் அரசுப் பள்ளி மாணவர்கள் பொருளாதார ரீதியில் அடித்தட்டினராக, ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம். அவர்களுக்கு போதுமான விவரங்கள் எட்டாத நிலையும், அவற்றை எப்படி பெறுவது என்ற வழிகள் தெரிந்திராதவராகவும் கூட இருக்கலாம். இது போன்ற பிரச்னைகளால், அவர்களில் சிலர் தவறான வழிகாட்டலில் சிக்கி, தடம் மாறிப் போகும் வாய்ப்புகளும் உள்ளன. மாணவர்கள் அவ்விதம் பாதை மாறிப் போகாமல், தடுத்துப் பாதுகாப்பதும், அவர்களுக்கு நல்வழி காட்டுவதும் நமது கடமை. இப்படியான வழிகாட்டுதல் இல்லாததால், திக்கு தெரியாமல் பயணித்து சிக்கலில் மாட்டிக் கொண்டவர்கள் பலர். எனவே, அவர்களை உரிய நேரத்தில் அணுகி, அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து நமது கடமையை நாம் சரியாகச் செய்வதன் மூலம் இந்த மாணவர்களை நமது நாட்டின் நல்ல குடிமகன்களாக உருவாக்க முடியும். இதில் கல்வி ஒரு மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. எனவே, நல்ல ஆலோசனைகளின் மூலம், வளர்ந்துவரும் இந்த மாணவர்களை, நாளைய இந்தியாவின் தூண்களாக உருவாக்கி விட முடியும் என நாங்கள் நம்புகிறோம். அதற்காக எங்களால் முடிந்த அனைத்து வழிகளிலும் முயன்று வருகிறோம்” எனக் குறிப்பிட்டார்.

இந்த விருதுக்கான மாணவர்களும், ஆசிரியர்களும் 7 வெவ்வேறு பிரிவுகளில் அதாவது, அறிவியல் மற்றும் கண்டுபிடிப்பு, இலக்கியம், தலைமை பண்பு, சமூகப் பணி, விளையாட்டு, மாற்றுத் திறனாளி மற்றும் இசை போன்ற பிரிவுகளின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

இந்த விருதுக்கானவர்களாக இவ்வாண்டு, சென்னைக் கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த 15 மாணவர்களும், 3 ஆசிரியர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இன்றைய நிலையில் தமிழகத்தில் மட்டும், சுமார் 45 ஆயிரம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. அவற்றில் 3 லட்சத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.  இவர்களிடம் 70 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பிரம்மாண்ட எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு பார்க்கையில், இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி ஒரு எளிய தொடக்கமாகவே தெரிகிறது. இந்தபாதையில் பயணிக்க வேண்டிய தூரம் மிக அதிகம் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இருக்க வாய்ப்பில்லை.