தனது கொள்கையில் சற்றும் மாறாத ரஜினி

0

ரஜினியை சினிமாவுக்கு முதன்முதலில் அறிமுகப்படுத்தியது இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் என்பது அனைவருக்கும் தெரியும். ரஜினி சிகரெட்டை ஸ்டைலாக தனது வாயில் தூக்கிப் போட்டு புகைப்பதை பார்த்தே கே.பாலச்சந்தர் அவருக்கு வாய்ப்பு வழங்கியதாக பல்வேறு பேட்டிகளில் அவரே தெரிவித்துள்ளார்.

அதேபோல், பெரும்பாலான படங்களில் ரஜினியின் இந்த ஸ்டைலை பார்க்கவே ரசிகர்கள் கூட்டம் கூடியது. ரஜினி ரசிகர்களும் அவரது ஸ்டைலையே பின்பற்றி சிகரெட்டை பிடிக்கத் தொடங்கினர். சினிமாவில் ஸ்டைலுக்காக ஆரம்பித்த விஷயம், ரசிகர்களிடையே விஸ்வரூபமாய் மாறியதை உணர்ந்த ரஜினி, ஒரு கட்டத்தில் புகைப் பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்தார்.

‘பாபா’ படத்தில்தான் ரஜினி கடைசியாக சிகரெட் பிடிக்கும் காட்சிகளில் நடித்திருந்தார். அதன்பிறகு, புகைப்பிடிப்பதில்லை, புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்த ரஜினி, தற்போதைய ‘கபாலி’ வரைக்கும் எந்த படத்திலும் ஒருகாட்சியில்கூட புகைப்பிடிப்பது போன்ற காட்சிகளில் தோன்றியதில்லை.

இதனால் அவரது ரசிகர்களில் பெரும்பாலானோர் புகைப்பிடிப்பதை தவிர்த்தனர். ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘கபாலி’ படத்தில் அவருடன் நடித்துள்ள தினேஷும் சமீபத்திய பேட்டி ஒன்றில், ரஜினியின் அறிவுரையை கேட்டு சிகரெட் பிடிப்பதை தவிர்த்துவிட்டதாக கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.