தந்தையை இழந்த துயரமான தருணத்திலும் – நிவாரண நிதி அளித்த சிறுமி : கனிமொழி MP நெகிழ்ச்சி!

0
0

தந்தையை இழந்த துயரமான தருணத்திலும் – நிவாரண நிதி அளித்த சிறுமி : கனிமொழி MP நெகிழ்ச்சி!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவைக் கட்டுப்படுத்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, அனைத்துத் துறை அதிகாரிகளும் கொரோனா தடுப்பு பணியில் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா நோய்த் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக, தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்குமாறு என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

மேலும், கொரோனா நிவாரண பணிக்காக, தொழிலதிபர்கள் நிதி வழங்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில், கூலித் தொழிலாளர்கள், குழந்தைகள் எனப் பலரும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தங்களால் முடிந்த பணத்தை வழங்கி வருகின்றனர்.

அந்தவகையில், தந்தையை இழந்த துயரமான தருணத்திலும், தான் சேமித்து வைத்திருந்த ரூ.1970ஐ முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக வழங்கியுள்ளார் கோவில்பட்டி சிறுமி ரிதானா.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் ரிதானா. இவர் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா சிறப்பு நிவாரண நிதி வழங்கும் பணியை மேற்கொண்ட தி.மு.க மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பியை சந்தித்து, தனது நிவாரணத் தொகையையும் கடிதம் ஒன்றையும் வழங்கினார்.

இதுதொடர்பாக தி.மு.க மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “கோவில்பட்டி சிறுமி ரிதானா தன் தந்தையின் மருத்துவ செலவிற்காக தான் சேமித்து வைத்திருந்த ரூ.1970ஐ முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக என்னிடம் வழங்கினார்.

தந்தையை இழந்த இத்துயர தருணத்திலும் ரிதானாவின் இச்செயல் இப்பேரிடரை நாம் அனைவரும் ஒன்றிணைந்து வெல்வோம் என்ற நம்பிக்கையை வலுப்படுத்தியது. மனிதநேயம் மட்டுமே மானிடத்தை காக்கும்.” எனத் தெரிவித்திருந்தார். மேலும் சிறுமி ரிதானா அளித்த கடித்ததையும் ட்விட்டரில் பகிர்ந்திருந்தார்.