ஜெயலலிதா பெயரில் சிறப்பு கலைமாமணி விருதுகள் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

0

ஜெயலலிதா பெயரில் சிறப்பு கலைமாமணி விருதுகள் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

இவ்விழாவில் மூத்த கலைஞர்களுக்கான உதவித்தொகை ரூ.2000-லிருந்து, ரூ.3000-மாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார்.

2011 முதல் 2018 வரையிலான கலைமாமணி விருது பெறும் கலைஞர்களின் பெயர் பட்டியலை தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்டது. தற்போது அவர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பட்டியலில் இடம் பெற்றவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தினார்.

சினிமாத்துறையில், ஆர்.ராஜசேகர், பாண்டு, குட்டி பத்மினி, பிரசன்னா, நளினி, வேல்முருகன், கார்த்தி, சரவணன், பொன் வண்ணன் உள்ளிட்ட பலருக்கு வழங்கப்பட்டுள்ளது.

விழாவில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

பொதுமக்களை மகிழ்விக்கும் கலைஞர்கள் எப்போதும் தங்கள் வாழ்வில் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்ற நோக்கத்தில், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலங்களில் பல்வேறு நலத்திட்டங்களையும், விருதுகளையும் அறிவித்து, அவர்களை ஊக்கப்படுத்தி வந்தார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.

அந்த வகையில், இயல், இசை, நாடகம், நாட்டியம், திரைப்படம், சின்னத்திரை, கிராமியக் கலை மற்றும் இதர கலைத் துறைகளில் சிறந்து விளங்கும் 201 கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்கியதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இதில் 72 வகையிலான கலைப் பிரிவுகளில் சிறந்து விளங்கும் கலைஞர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன.

கலைஞர் பெருமக்கள் சில கோரிக்கைகளை வைத்திருக்கிறார்கள். இங்கே கலைமாமணி விருது வழங்குகின்றபொழுது இந்த கோரிக்கைகளை நீங்கள் நிறைவேற்றி தரவேண்டும் என்று அன்பு வேண்டுகோள் விடுத்தார்கள். அதனை ஏற்று அ.தி.மு.க. அரசால் சில அறிவிப்புகளை வெளியிட விரும்புகிறேன்.

அதாவது, கலைமாமணி விருது 3 பவுனுக்கு பதிலாக இனி 5 பவுன், அதாவது 40 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கங்களாக வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் ஜெயலலிதா பெயரில் 3 சிறப்பு கலைமாமணி விருதுகள் சிறப்பு விருதுகளாக இனி வழங்கப்படும். இவையும் தலா 5 பவுன் எடையுள்ள பொற்பதக்கங்களாக வழங்கப்படும். நலிந்த மூத்த கலைஞர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் உதவித்தொகை ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.