ஜெயலலிதாவுக்கு கவர்னர் ரோசய்யா மலர்கொத்து அனுப்பி வாழ்த்து

0

எல்.கே.அத்வானி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்
சென்னை, மே.21- சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதை தொடர்ந்து, முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கவர்னர் கே.ரோசய்யா மலர்கொத்து அனுப்பி வாழ்த்து தெரிவித்தார். பா.ஜனதா தலைவர் எல்.கே.அத்வானி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்.

ரோசய்யா வாழ்த்து

தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதையொட்டி, முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு, தமிழக கவர்னர் கே.ரோசய்யா மலர்க்கொத்துடன் தனது வாழ்த்துகளை கடிதம் வாயிலாக தெரிவித்துக்கொண்டார்.

அந்தக் கடிதத்தில், ‘‘தமிழக சட்டசபை தேர்தலில் பெற்ற சரித்திர புகழ்வாய்ந்த வெற்றி பெற்றதற்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மக்கள் நலனில் உங்களுக்குள்ள உறுதிப்பாடு தான் உங்களை தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் 1984-ம் ஆண்டுக்கு பிறகு தொடர்ந்து மீண்டும் வெற்றி பெற செய்துள்ளது. உங்களது ஆற்றல் மிக்க தலைமையும், தன்னைவிட மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற உறுதிப்பாடும் மீண்டும் தமிழ்நாட்டை அனைத்து துறைகளிலும் இந்தியாவுக்கு வழிகாட்ட தயாராகிவிட்டது. தமிழ்நாட்டை இந்தியாவிலேயே முதல் மாநிலமாக்க வேண்டும் என்ற உங்கள் முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா நன்றி கடிதம்

கவர்னர் கே.ரோசய்யாவுக்கு நன்றி தெரிவித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா நன்றி கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், ‘‘தமிழக சட்டசபை தேர்தலில் எனது கட்சி பெற்ற சரித்திர வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து நீங்கள் அனுப்பிய கடிதத்துக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். உங்களது நல்வாழ்த்துக்களை நான் பெரிதும் மதிக்கிறேன். இந்த வாழ்த்துகள் தமிழ்நாட்டை எல்லா துறைகளிலும் வளர்ச்சியடைய செய்து முதல் இடத்துக்கு கொண்டுவர வேண்டும், மக்களின் நலனுக்காக அயராது பாடுபட வேண்டும் என்ற எனது உறுதியை மேலும் ஊக்குவிக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.

எல்.கே.அத்வானி வாழ்த்து

இதேபோல், பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டார்.

தனக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்த பா.ஜனதாவின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா தனது நன்றியினை தெரிவித்துக்கொண்டார்.