ஜுன் 21-ம் தேதி ஐ.நா.சபையில் சத்குரு ஜக்கி வாசுதேவ் தலைமையில் யோகாசன முகாம்

0

நியூயார்க்: பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் பேசும்போது, யோகாவின் பெருமைகள் மற்றும் பயன் பற்றி குறிப்பிட்டு, சர்வதேச அளவில் யோகா தினம் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதைத்தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21–ந்தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படும் என்று ஐ.நா.சபை கடந்த டிசம்பர் மாதம் அறிவித்தது.

இதையடுத்து, டெல்லி ராஜபாதையில் 21-6-2015 அன்று 5 ஆயிரத்துக்கும் அதிகமான பள்ளி குழந்தைகள் உள்பட சுமார் 35 ஆயிரம் பேர் பங்கேற்ற மாபெரும் யோகாசன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் டெல்லியில் உள்ள 152 வெளிநாட்டு உயர் தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட பல வெளிநாட்டினரும் கலந்து கொண்டனர்.

அன்றைய யோகாசன நிகழ்ச்சியில் 35 ஆயிரத்து 985 பேர் பங்கேற்றதாக கணக்கிட்டுள்ள கின்னஸ் நிறுவனம், உலகிலேயே முதன்முதலாக அதிக நபர்கள் ஒரே இடத்தில் பங்கேற்ற யோகாசன நிகழ்ச்சி என்ற உலக சாதனையில் அன்றைய நிகழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

இதேபோல், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அலுவலகத்தில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், ஆன்மிக குரு ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கி மூன் மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோர் பங்கேற்ற மாபெரும் யோகா நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இந்நிலையில், அடுத்த (ஜுன்) மாதம் 21-ம் தேதியன்று இரண்டாவது சர்வதேச யோகா தினத்தையும் சிறப்பாக நடத்த ஐக்கிய நாடுகள் சபை ஏற்பாடு செய்யப்படுகிறது. ‘நிலைத்த முன்னேற்ற இலக்கு’ என்னும் தலைப்பில் நடைபெறும் இந்த சிறப்பு யோகாசன முகாமில் ‘இஷா’ ஆன்மிக மையத்தின் நிறுவனரான சத்குரு ஜக்கி வாசுதேவ் தலைமையில் மாபெரும் யோகாசன முகாமை நடத்த ஐ.நா.சபைக்கான இந்தியாவுக்கான நிரந்தர மையம் விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறது.