ஜனநாயக கடமையாற்றிய முக்கிய தலைவர்கள்!

0

ஜனநாயக கடமையாற்றிய முக்கிய தலைவர்கள்!

நாடாளுமன்ற இரண்டாம் கட்டத் தேர்தல் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய பிரமுகர்கள் பலரும் காலையிலேயே வாக்குச்சாவடிகளுக்கு சென்று, தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.

சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனது வாக்கினை பதிவு செய்தார். நீண்ட வரிசையில் நின்று அவர் தனது வாக்கினை பதிவு செய்தார்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சென்னை தேனாம்பேட்டையில் மனைவி துர்காவுடன் சென்று வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி புதுச்சேரியில்
தனது வாக்கினை பதிவு செய்தார். புஸ்ஸி வீதி உள்ள பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் அவர் வாக்களித்தார்.

சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட காரைக்குடியில் உள்ள வாக்குச்சாவடியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் முதல் வாக்காளராக தனது வாக்கினை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் மாற்றத்தை விரும்புவதால், தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என கூறினார்.

மக்கள் நீதி மையத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் சென்னை ஆழ்வார்பேட்டையில் வாக்களித்தார். தனது மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசனுடன் வாக்குச்சாவடிக்கு வந்த அவர், வரிசையில் நின்று வாக்களித்தார்.

பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விருகம்பாக்கத்தில் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என குறிப்பிட்டார்.

தூத்துக்குடி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் கனிமொழி, சென்னை மயிலாப்பூர் புனித அப்பாஸ் மேல்நிலைப்பள்ளியில் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படுவதாகக் குற்றம் சாட்டினார்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். அப்போது நமது செய்தியாளரிடம் பேசிய அவர், காங்கிரஸ் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.