சென்னை ஐகோர்ட்டில் தனி நபர்கள் நேரில் ஆஜராகி வாதாட புதிய நடைமுறை

0

சென்னை ஐகோர்ட்டில் தனி நபர்கள் நேரில் ஆஜராகி வாதாட புதிய நடைமுறை

சென்னை, நவ.11- சென்னை ஐகோர்ட் மற்றும் மதுரை ஐகோர்ட் கிளையில் தனிநபர்கள் பலர் பொதுநல வழக்கிற்காகவோ அல்லது தங்கள் சொந்த வழக்கிற்காகவோ வக்கீல்களை நியமிக்காமல் தாங்களே நேரில் ஆஜராகி வாதாடி வருகின்றனர். அதுபோன்ற நபர்கள், எந்தவித நிபந்தனையும் இன்றி தங்கள் கோரிக்கை தொடர்பான மனுவை தாங்களே ஐகோர்ட்டில் தாக்கல் செய்து வழக்கு விசாரணையின் போது நேரடியாக ஆஜராகி வந்தனர். இதை ஒழுங்குபடுத்துவதற்காக சென்னை ஐகோர்ட் தற்போது புதிய நடைமுறைகளை கொண்டு வந்துள்ளது.

அந்த புதிய நடைமுறை அரசிதழில் வெளியாகி உள்ளது.

அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

ஒரு வழக்கிற்காக ஐகோர்ட்டில் நேரில் ஆஜராகி வாதாட விரும்புபவர்கள் முதலில் அதற்கு அனுமதி கோரி மனு அளிக்க வேண்டும். அந்த மனுவில் நோட்டரி வக்கீல் அல்லது வக்கீல் ஆணையர் சான்றொப்பம் இட வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட நபர் தனது வழக்கிற்காக ஏன் வக்கீல் ஒருவரை நியமிக்க விரும்பவில்லை? என்பதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும்.

அதேவேளையில், அந்த நபர் தொடர்ந்த வழக்கிற்காக நீதிமன்றத்துக்கு உதவ வக்கீல் ஒருவரை ஐகோர்ட் நியமிக்கும்பட்சத்தில் எந்தவித நிபந்தனையும் இன்றி அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். தனி நபர்கள் ஆஜராகி வாதாடுவதை ஒழுங்குபடுத்த ஒரு கமிட்டி ஏற்படுத்த வேண்டும். இந்த கமிட்டி, சம்பந்தப்பட்ட நபர் இலவசமாக சட்ட உதவி பெற தகுதி பெறும் நபராக இருக்கும்பட்சத்தில் இலவச சட்ட உதவிகளை அளித்து வரும் வக்கீல்கள் மூலம் மனுவை தாக்கல் செய்ய பரிந்துரைக்க வேண்டும். முன் அனுமதி கோரிய மனு, பிரதான மனு ஆகியவை இந்த கமிட்டியால் பரிசீலிக்கப்பட வேண்டும். தனி நபர்களை நேரில் ஆஜராகி வாதாட அனுமதிக்கும் பட்சத்தில் சட்ட விதிகளுக்கு உட்பட்டு தான் பேச வேண்டும் என்றும், தகாத வார்த்தைகள் எதையும் பயன்படுத்தக்கூடாது என்றும் கமிட்டி அறிவுறுத்த வேண்டும். இதுதொடர்பாக அவர்களிடம் இருந்து உத்தரவாதம் பெற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.