சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவுக்கு ‘திடீர்’ மாரடைப்பு டாக்டர்கள் தீவிர சிகிச்சை

0

சென்னை, அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதல்-அமைச்சருமான ஜெய லலிதா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் கடந்த செப்டம்பர் மாதம் 22-ந் தேதி இரவு அனுமதிக்கப்பட்டார்.

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை

அவருக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர் சிவக்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தனர்.

மேலும், லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே, டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி டாக்டர்கள் கில்நானி, அஞ்சன் டிரிக்கா, நிதிஷ் நாயக் ஆகியோர் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வந்து ஜெயலலிதாவுக்கு சிறப்பு சிகிச்சை அளித்தனர். தொடர் சிகிச்சையின் பயனாக ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அவருக்கு ஏற்பட்டிருந்த நுரையீரல் தொற்று முழுமையாக அகற்றப்பட்டது.

தனி அறைக்கு மாற்றம்

எனவே, ஜெயலலிதாவின் உடலுக்கு அசைவு பயிற்சி கொடுப்பதற்காக, அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை தேவைப்பட்டது. இதற்காக, சிங்கப்பூரில் இருந்து பிசியோதெரபி நிபுணர்கள் மேரி சியாங், சீமா, ஜூடி ஆகியோர் சுழற்சி முறையில் வந்து அவருக்கு சிகிச்சை அளித்தனர்.

உடல் அசைவு பயிற்சிக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா முழு ஒத்துழைப்பு அளித்தார். சுவாசமும் அவர் இயல்பாக மேற்கொள்ள தொடங்கியதால், ‘டிரக்கியாஸ்டமி’ சிகிச்சையும் அவருக்கு நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், கடந்த மாதம் (நவம்பர்) 19-ந் தேதி அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டில் உள்ள தனி அறைக்கு மாற்றப்பட்டார்.

பிசியோதெரபி சிகிச்சை

அதன் பிறகு, தினமும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பிசியோதெரபி சிகிச்சை மட்டும் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, நேற்று முன்தினம் சென்னை வந்த டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள் 3 பேரும் ஜெயலலிதாவின் உடல்நிலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஆராய்ந்தனர். பின்னர், அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், 74-வது நாளான நேற்றும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு வழக்கம்போல் பிசியோதெரபி சிகிச்சை மட்டும் அளிக்கப்பட்டது. நேற்று காலை 7.40 மணிக்கு பிசியோதெரபி நிபுணர்கள் சீமா, ஜூடி ஆகியோர் அப்பல்லோ ஆஸ்பத்திரி வந்து ஜெயலலிதாவுக்கு பிசியோதெரபி சிகிச்சை அளித்தனர்.

திடீர் மாரடைப்பு

ஆனால், முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நேற்று மாலை திடீரென பின்னடைவு ஏற்பட்டது. அதனால், உடனடியாக அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். உடனடியாக டாக்டர்கள் குழுவினர் வந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கத் தொடங்கினர்.

இதுகுறித்து அப்பல்லோ மருத்துவமனை சார்பில் டாக்டர் சுப்பையா விஸ்வநாதன் வெளியிட்ட மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவருக்கு மாரடைப்பு தொடர்பான சிகிச்சையை அப்பிரிவை சேர்ந்த டாக்டர்கள் வழங்கி வருகின்றனர். டாக்டர்கள் குழு அவரது உடல்நிலையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மாரடைப்பு மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள மூச்சுத் திணறல் சிகிச்சையையும் அவசர பிரிவில் உள்ள டாக்டர்கள் வழங்கி வருகின்றனர்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தொண்டர்கள் குவிந்தனர்

இதற்கிடையே, முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து தகவல் பரவியதை தொடர்ந்து, அப்பல்லோ ஆஸ்பத்திரி முன்பு அ.தி.மு.க. தொண்டர்கள் குவியத் தொடங்கினார்கள். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, பாதுகாப்பு பணிக்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அப்பல்லோ ஆஸ்பத்திரி வளாகம் பரபரப்பாகவும், பதற்றமாகவும் காணப்பட்டது.