சென்னை அடையாறு புற்றுநோய் தலைவர் டாக்டர் சாந்தா மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

0
32

சென்னை அடையாறு புற்றுநோய் தலைவர் டாக்டர் சாந்தா மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

சென்னை, பிரபல புற்றுநோய் மருத்துவ நிபுணரும் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவருமான டாக்டர் சாந்தா, உடல்நலக்குறைவால் இறந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர். அதன் விபரம் வருமாறு:-

பிரதமர் நரேந்திர மோடி:- புற்றுநோய்க்கு தரமான சிகிச்சை அளிக்கப்படுவதற்கு பாடுபட்ட டாக்டர் வி.சாந்தா என்றும் எல்லாரது நினைவிலும் இருப்பார். ஏழை மற்றும் எளிய மக்களுக்கு சேவை செய்வதில், சென்னை அடையாறு புற்றுநோய் நிறுவனம் முன்னணியில் உள்ளது. 2018-ம் ஆண்டு அந்த மையத்திற்கு சென்றதை நினைவு கூர்கிறேன். .சாந்தா மறைவு வருத்தமளிக்கிறது. ஓம் சாந்தி.

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்:- டாக்டர் சாந்தா இப்போது நம்முடன் இல்லை. ஏழை எளியவர்களுக்கு சேவை எப்போதும் சேவை செய்வதற்காகவும், புற்றுநோயை முற்றிலும் குணமாக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்திலும் மருத்துவமனையில் உள்ள ஒரு அறையில் தங்கியிருந்தவர். ஒரு துறவி நம்மிடம் இல்லை.

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- டாக்டர் சாந்தாவை இழந்து வாடும் சென்னை அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். தமிழகம் மட்டுமின்றி இந்திய மக்கள் அனைவரின் மனதிலும் நீங்கா இடம்பிடித்த டாக்டர் சாந்தா புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையிலும், அன்னாரின் தன்னலமற்ற சேவையயை கவுரவிக்கும் விதமாகவும் இறுதி சடங்குகளின் போது, போலீஸ் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்.

தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்:- டாக்டர் சாந்தா மறைந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். புற்றுநோய் நோயாளிகளுக்காக தன் வாழ்நாள் முழுவதும் சேவையாற்றியவர். மருத்துவ சேவையை ஆலயமாக உருவாக்கி ஆலமரமாக வளர்த்தவர். மருத்துவ சேவைக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்தவர். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது பயனாளிகள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்து கொள்கிறேன்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்: டாக்டர் சாந்தா திடீரென மறைவெய்தினார் என்ற அதிர்ச்சியான செய்தி கேட்டு மிகுந்த வேதனைக்குள்ளானேன். அவரது மறைவுக்கு தி.மு.க. சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். புற்றுநோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தியதில் டாக்டர் சாந்தாவை போல் இன்னொருவரை இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்திலேயே காண்பது அரிது. உலகெங்கும் வாழ்வோருக்கு புற்றுநோய் சிகிச்சையளிக்கும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையை சர்வதேச தரத்துக்கு உயர்த்தி அந்த மருத்துவமனையில் கடந்த 66 ஆண்டுகளாக அர்ப்பணிப்பு மிகுந்த சேவையாற்றியவர். அங்குள்ள ஒவ்வொரு செங்கல்லும் டாக்டர் சாந்தாவின் புகழ் பாடும். மருத்துவமனையிலேயே தனது வாழ்க்கை முழுவதையும் கழித்த ஒரு மருத்துவர் இன்றைக்கு நம்மை விட்டு பிரிந்திருப்பதைத் தாங்கி கொள்ள இயலவில்லை.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:- டாக்டர் சாந்தா உடல் நலக்குறைவால் காலமான செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுக்க தன்னலமின்றி அர்ப்பணிப்போடு பணியாற்றியதால் அனைவரது பாராட்டுகளையும் பெற்றவர். அவரது மறைவு புற்றுநோய் துறைக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொண்டு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.

ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ:- புற்றுநோய் மருத்துவத்தில் அனைத்து இந்திய அளவில் முன்னோடிகளில் முதன்மையானவரும், தமிழக மகளிருக்கு பெருமை சேர்த்தவருமான டாக்டர் சாந்தா இயற்கை எய்திய செய்தி அறிந்து வருந்துகின்றேன். தமிழ்நாட்டில் யாருக்கேனும் புற்றுநோய் என்று தெரியவந்தால், உடனடியாக அவர்கள் நினைவுக்கு வருவது சாந்தா என்ற பெயர்தான். அந்த அளவிற்கு பொறுப்புடனும், கடமை உணர்வுடனும் தொண்டு ஆற்றினார். ஏழை எளிய மக்களும், எல்லோரும் எளிதில் அணுக கூடியவராக டாக்டர் சாந்தா திகழ்ந்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்:- டாக்டர் சாந்தா மறைவு மிகுந்த கவலையளிக்கிறது. தன்னலமில்லா மக்கள் தொண்டராக மருத்துவ துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பு மகத்தானது. எண்ணற்ற உயிர்களை காப்பாற்றியவர். அவருடைய மறைவு மருத்துவ உலகுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பினருக்குமான மாபெரும் இழப்பாகும். அவரது ஈடு இணையற்ற ஈகத்தையும், மருத்துவ பங்களிப்பையும் போற்றும் வகையில் இந்திய உயரிய விருதான பாரத ரத்னா விருதை வழங்கி சிறப்பிக்க வேண்டும்.

இதேபோல் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, த.மாகா. தலைவர் ஜி.கே.வாசன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்பட பல்வேறு தலைவர்களும் டாக்டர் சாந்தா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை, டாக்டர் சாந்தா மறைவு, தலைவர்கள் இரங்கல், பாரத ரத்னா விருது, Dr V Shanta, renowned Indian oncologist passes away,