சென்னையில் வாக்கு எண்ணிக்கைக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார்: மாவட்ட தேர்தல் அதிகாரி பேட்டி

0

சென்னை: சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட ஓட்டுப்பதிவு எந்திரங்கள் 3 மையங்களில் பத்திரமாக ராணுவம் மற்றும் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. இன்று (வியாழக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இதில் ஈடுபட இருக்கும் பணியாளர்கள், சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இது குறித்து சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியும், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனருமான டாக்டர் பி.சந்திரமோகன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்நிலையில் உள்ளன. வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

வாக்கு எண்ணிக்கை பணியில் 900 பணியாளர்கள் ஈடுபடுகிறார்கள். கூடுதலாக 20 சதவீதம் பேர் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை மையங்களில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் மழையால் எந்தவித பாதிப்பும் ஏற்பட்டுவிடாமல் இருப்பதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மழைநீரால் கட்டிடம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக அங்கு ஒரு என்ஜினீயர் அமைக்கப்பட்டுள்ளார். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் அறையின் மேற்கூரையில் தண்ணீர் இறங்கிவிடாமல் இருப்பதற்காக ‘சீட்’ விரிக்கப்பட்டு இருக்கிறது.

வாக்கு எண்ணிக்கை மையங்களில் துணை ராணுவம், மாநில போலீசார் ஆகியோர் முழுவீச்சில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை முகவர் முன்னிலையில், ஒரு மேஜையில் ஒரு வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர், உதவியாளர், பார்வையாளர் ஆகியோர் இருப்பார்கள்.

மேலும் ஒரு அறைக்கு மத்திய பார்வையாளர் ஒருவர் நியமிக்கப்படுவார். ஒரு சுற்றுக்கு 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.