சென்னையில் பள்ளி மாணவர்களுக்கு கோடைக்கால முகாம்: அஞ்சல் துறை நடத்துகிறது

0

சென்னையில் பள்ளி மாணவர்களுக்கு கோடைக்கால முகாம்: அஞ்சல் துறை நடத்துகிறது

சென்னை, பள்ளி மாணவர்களுக்காக அஞ்சல்தலை சேகரிப்பது தொடர்பான கோடைக்கால முகாம், சென்னையில் நடைபெறவுள்ளது.  அண்ணா சாலையில் அமைந்துள்ள சென்னை தலைமை அஞ்சலக அலுவலகம் இந்த முகாமை ஏற்பாடு செய்துள்ளது. இந்த முகாமில் பங்கேற்பதன் மூலம், குழந்தைகள் அஞ்சல்தலை சேகரிப்பு மற்றும் கடிதம் எழுதும் திறனை மேம்படுத்திக் கொள்ள முடியும்.

     இம்முகாமின் இரண்டு தொகுப்புகள் ஏற்கனவே இந்த ஆண்டு வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள நிலையில், ஒவ்வொரு வாரமும் செவ்வாய் கிழமை முதல் வியாழக்கிழமை வரை நடைபெறவுள்ள இந்த முகாம், மே 7-9, மே 14-16, மே 21-23, மே 28-30 வரையிலும், அடுத்தடுத்து நடைபெறும்.  காலை 9.30 மணிக்குத் துவங்கி, பிற்பகல் 12.30 மணி வரை வகுப்புகள் நடைபெறும். ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் பயிலும்  விருப்பமுள்ள மாணவ-மாணவியர் இந்த முகாமில் பங்கேற்கலாம். முகாம் நடைபெறும் அண்ணாசாலை அஞ்சல் அலுவலகத்தில் மாணவர்கள் வந்து செல்வதற்கான ஏற்பாடுகளை பெற்றோர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

     அஞ்சல்தலை சேகரிப்பு தொடர்பான பயிற்சிகள், கடிதம் எழுதும் கலை போன்றவை இதில் கற்றுத்தரப்படும்.  சான்றோர்கள் எழுதிய கடிதங்களை பற்றி விவாதிக்கும் வகுப்புகளுடன், தமது தாத்தா-பாட்டி, நண்பர்களுக்கு தனிப்பட்ட கடிதங்களை எழுதுமாறும், அவற்றை அண்ணாசாலை அஞ்சலகத்தில் அஞ்சலில் சேர்க்குமாறும் மாணவர்கள் ஊக்கப்படுத்தப்படுவார்கள்.  ஒரு கடிதம் அஞ்சல் பெட்டியிலிருந்து உரிய முகவரிக்கு சென்று சேரும் வரை அதன் பயணம் பற்றி அவர்களுக்கு முழுமையாக எடுத்துரைக்கப்படும். மணியார்டர் அனுப்புவது, அஞ்சலகத்தில் பணம் செலுத்துவது உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் பற்றியும் பயிற்சியாளர்கள் சொல்லித் தருவார்கள்.

     இந்த கோடை வகுப்பில் சேருவதற்கு ஒரு மாணவருக்கு தலா ரூ.250 கட்டணம் செலுத்த வேண்டும்.  இத்தொகைக்கு ஈடான அஞ்சல்தலை வைப்பு கணக்கும், அஞ்சல்தலைகளும் அம்மாணவருக்கு அளிக்கப்படும். இந்த வகுப்பில் தமது மாணவர்களை சேர்க்க  விரும்பும் ஆசிரியர்களும், தலைமை ஆசிரியர்களும், பெற்றோர்களும் சென்னை அண்ணாசாலையில் உள்ள அஞ்சல் சேகரிப்பு மையத்தைத் தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண்கள்: 044-2854 3199, 99529 87591, 98405 95839 – மின்னஞ்சல் முகவரி: [email protected] என்று சென்னை மாநகர மண்டல தலைமை அஞ்சல் அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.