சென்னையில் கொரோனா ‘ரெட் அலர்ட்’ இல்லை – மாநகராட்சி அறிவிப்பு

0

சென்னையில் கொரோனா ‘ரெட் அலர்ட்’ இல்லை – மாநகராட்சி அறிவிப்பு

சென்னையின் எந்த பகுதிக்கும் கொரோனா வைரஸ் காரணமாக  ரெட் அலர்ட் அறிவிக்கப்படவில்லை என மாநகராட்சி விளக்கமளித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நேற்று வரை 50 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகம் பாதித்த இடங்களில் சென்னை முக்கிய பங்காற்றுகிறது.

இந்நிலையில், சென்னைக்கு கொரோனாவுக்கான ரெட் அலர்ட்  விடுக்கப்படவுள்ளதாக சில தகவல்கள் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வதந்திகளாக பரவியுள்ளன. குறிப்பாக சில பகுதிகளுக்கு மட்டும் இந்த ரெட் அலர்ட் உத்தரவு பிறப்பிக்கப்படலாம் எனவும் தவறான தகவல்கல் பரவியதாக தெரிகிறது.

இதுதொடர்பாக தற்போது சென்னை மாநகராட்சி தரப்பிலிருந்து உரிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், தற்போது வரை அரும்பாக்கம், புரசைவாக்கம், சாந்தோம், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம், போரூர், ஆலந்தூர் மற்றும் கோட்டூர்புரம் ஆகிய பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இந்த பகுதிகளில் கொரோனா கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன. பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளுக்கு ஏற்றவாறு கூடுதல் கண்காணிப்பு செய்யப்படுகின்றது. அதேசமயம் சென்னையின் எந்த பகுதிக்கும் மாநகராட்சி  ரெட் அலர்ட் அறிவிக்கவில்லை. எனவே மக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.