சுவாதி கொலை: செங்கோட்டையில் குற்றவாளி ராம்குமார் கைது?

0

பொறியாளர் சுவாதி கொலை வழக்கில், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் சந்தேக நபர் வெள்ளிக்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டார்.

சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் சுவாதி, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24-இல் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கை ரயில்வே போலீஸார் விசாரித்ததில் முன்னேற்றம் ஏற்படாததால், விசாரணை சென்னை காவல்துறைக்கு திங்கள்கிழமை மாற்றப்பட்டது.

தனிப்படைகள் அமைத்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்றது. இதில், சுவாதியின் குடும்பத்தினர், தோழிகள், நண்பர்கள் ஆகியோரிடம் முதல் கட்ட விசாரணையை முடித்தனர். சில முக்கியத் தகவல்கள் போலீஸாருக்கு கிடைத்தன.

இதற்கு அடுத்ததாக சுவாதி செல்லும் வழியில் வீடுகள், தனியார் நிறுவனங்கள் பொருத்தியிருக்கும் 20 கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சியை ஆய்வு செய்தனர்.

இதில், 5 கண்காணிப்பு கேமராவில் சுவாதியை கொலை செய்ததாக கருதப்படும் சந்தேக நபர் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.

இதுதொடர்பாக சுமார் 300 பேரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, சுவாதியை ஒரு மாதமாக மர்ம நபர் பின் தொடர்ந்து சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, சூளைமேடு பகுதியில் சந்தேக நபரின் புகைப்படத்தை காட்டி வீடு, வீடாகச் சென்று விசாரணை செய்தனர்.

இந்த நிலையில், சூளைமேட்டில் ஒரு மேன்சனில் பல மாதங்களாக தங்கியிருந்த திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ராம்குமார் (24) என்பவர்தான் சுவாதியை பின் தொடர்ந்து சென்றவர் என்பது தெரியவந்தது. இவர்தான் சந்தேக நபர் என தெரியவந்தது.

இதையடுத்து, அவரிடம் விசாரணை செய்ய செங்கோட்டைக்கு போலீஸார் வெள்ளிக்கிழமை சென்றனர். அதை தெரிந்துக் கொண்ட ராம்குமார் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றாராம்.

இதைப் பார்த்த போலீஸார், கழுத்தில் காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த அவரை மீட்டு, தனியார் மருத்துவமனைக்கு கொண்டுச்சென்று சிகிச்சை அளித்துள்ளனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குற்றவாளிக்கு பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை என்பதால் அவரது உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது மயக்க நிலையில் இருக்கும் ராம்குமார் கண் விழித்து பேசினால் மட்டுமே கொலைக்கான காரணம் தெரியவரும்.

ராம்குமாரின் தந்தை, தாய் மற்றும் தங்கையிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் இந்த கொலையில் ராம்குமாருக்கு அவரது நண்பர் ஒருவர் உதவி செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.

விசாரணையில் ராம்குமார் திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி பி.இ.படித்திருப்பதும், வேலை தேடி சென்னை வந்தவர் தனியார் மேன்சனில் தங்கியிருந்து, 3 மாதங்களாக ஒரு தலையாக சுவாதியை காதலித்து வந்ததும் தெரியவந்தது.

கடந்த ஒரு வாரமாக தமிழகத்தை கதி கலங்கச் செய்த இந்தச் சம்பவத்தில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.