சீன அதிபருக்கு பிரமாண்ட வரவேற்பு

0

சீன அதிபருக்கு

பிரமாண்ட வரவேற்பு

சென்னை, ‘ஏர் சைனா’ விமானம் மூலம் சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று மதியம் 2.13 மணி அளவில் சென்னை வந்தார்.
சென்னை விமான நிலையத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு மேள தாளம் முழங்க தமிழக பாரம்பரிய முறைப்படி மிக பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
கவர்னர், முதல்வர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
அண்டை நாடுகளாக விளங்கும் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் எல்லை தகராறு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் உள்ள போதிலும், பரஸ்பர நல்லுறவும், வர்த்தக, கலாசார தொடர்புகளும் இருந்து வருகின்றன. சீனாவுடன் நல்லுறவை பேணுவதில் இந்திய பிரதமர் மோடி மிகுந்த ஆர்வம் காட்டுகிறார். இதேபோல் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இந்தியாவுடனான உறவை வலுப்படுத்த விரும்புகிறார். இது தொடர்பாக இரு தலைவர்களும் ஏற்கனவே சிலமுறை சந்தித்து பேசி உள்ளனர்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கும் இடையிலான முறைசாரா சந்திப்பு கடந்த ஆண்டு சீனாவின் வுஹான் பகுதியில் நடந்தது. அதைத்தொடர்ந்து, இரண்டாவது முறைசாரா சந்திப்பு
இதில் பங்கேற்பதற்காக சீன அதிபரின் தனி விமானம் இன்று மதியம் 1.59 மணிக்கு சென்னை விமான நிலைய ஓடுபாதையில் தரையிறங்கியது. அதற்கு முன்னதாக பாதுகாப்பு அதிகாரிகள் பல்வேறு ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.
சீன அதிபர் பிரத்யேக விமானம் தரையிறங்குவதற்கு முன்பு மற்றொரு சிறிய விமானம் முதலில் தரையிறங்கியது. அதை தொடர்ந்து சீன அதிபரின் விமானம் தரையிறங்கியது.
தொடர்ந்து 2.13 அளவில் விமானத்தில் இருந்து சீன அதிபர் இறங்கினார். 2.18 வரை அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பை ஏற்றுக்கொண்டார்.
சீன அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை கபாலீஸ்வரர் கோவிலை சேர்ந்த 5 குருக்கள் பூரண கும்ப மரியாதை அளித்தனர்.
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர், கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் ப.தனபால், தமிழக தலைமை செயலாளர் சண்முகம், டி.ஜி.பி. திரிபாதி, சீன தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.
சீன அதிபருக்கு மேள தாளம் முழங்க தமிழக பாரம்பரிய முறைப்படி மிக பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. மயிலாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், கரகம், பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு தமிழக பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளை நடத்தி வரவேற்பு அளித்தனர். அந்த நிகழ்ச்சிகளை சீன அதிபர் மெதுவாக நடந்து சென்று பார்வையிட்டப்படி கை அசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
சீன அதிபர் வருகையையொட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டன. விமானத்திற்கு அருகிலேயே கலைநிகழ்ச்சிகள் நடத்தி வரவேற்பு கொடுக்கப்பட்டது. விமான நிலையத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான மாணவ–மாணவிகள் சீன அதிபருக்கு வரவேற்பு கொடுத்தனர்.

வரவேற்பு நிகழ்ச்சி முடிந்த பின்னர் சீன அதிபர் அவரது விசேஷ காரில் கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலுக்கு புறப்பட்டு சென்றார்.
வழிநெடுக அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சீன – இந்திய கொடிகளை காண்பித்து வரவேற்பு அளித்தனர்.
சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் மோடியை வரவேற்க சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சீன அதிபரை வரவேற்கும் விதமாக பழைய விமான நிலையத்தின் 5-வது நுழைவு வாயில் அருகே வாழை மரம் மற்றும் கரும்பால் அலங்கார தோரணம் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த பகுதியில் புதிதாக பசுமை புல்வெளியுடன் பூங்காவும் அமைக்கப்பட்டு இருந்தன. விமான நிலையம் முதல் கிண்டி நட்சத்திர ஓட்டல் வரை ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள மேடைகளில் பள்ளி மாணவர்கள் நின்று சீன அதிபரை வரவேற்றனர்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து கிண்டி நட்சத்திர ஓட்டல் வரையிலும், இதேபோல் அந்த ஓட்டலில் இருந்து மாமல்லபுரம் வரையிலும் 34 இடங்களில் ஜின்பிங்குக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கவனிக்க சிறப்பு அதிகாரிகளாக 10 பேரையும், ஒருங்கிணைப்பு அதிகாரிகளாக 34 பேரையும் தமிழக அரசு நியமித்திருந்தது.
இரு பெரும் தலைவர்களின் வருகையையொட்டி மாமல்லபுரம் விழாக்கோலம் பூண்டு உள்ளது. சாலைகள், புராதன சின்னங்கள் அமைந்துள்ள பகுதிகள் மற்றும் முக்கிய இடங்கள் சீரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் விளங்குகின்றன. மோடி-–ஜின்பிங்கை வரவேற்று மாமல்லபுரத்தில் பனை ஓலையால் பின்னப்பட்ட பிரமாண்டமான அலங்கார வளைவு அமைக்கப்பட்டு உள்ளது.
பஞ்சரதம் அருகே தோட்டக்கலைத் துறை சார்பில் பிரமாண்டமான அலங்கார வாயில் அமைக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 18 வகையான காய்கனிகள், பழங்கள் மூலம் இந்த வாயில் உருவாக்கப்பட்டுள்ளது. இது கண்கொள்ளா காட்சியாக அமைந்துள்ளது. ஜின்பிங்கை வரவேற்று தமிழ், இந்தி, சீன மொழி வாசகங்களுடன் கூடிய பேனர்களும் வைக்கப்பட்டு உள்ளன.
தோட்டக்கலையை சேர்ந்த ஏறக்குறைய 200 பணியாளர்கள், சுமார் 10 மணிநேரம் பணியாற்றி இந்த பிரம்மாண்ட அலங்கார வளைவை தயார் செய்துள்ளனர். சுமார் 18 வகையான காய்கறிகள் மற்றும் பழங்களைக் கொண்டு இந்த அலங்கார வளைவு அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக காய்கறிகள் மற்றும் பழங்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளன.
இது பற்றி தோட்டக்கலை கூடுதல் இயக்குனர் தமிழ்வேந்தன் கூறுகையில், இந்த அலங்கார வளைவு அமைக்க பயன்படுத்திய காய்கறிகள் மற்றும் பழங்களில் பெரும்பாலானவை இயற்கை முறையில் வளர்க்கப்பட்டு, பண்ணைகளில் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டவை. இது தவிர பாரம்பரியமான வாழை மரங்கள், கடற்கரை கோயில் அருகே வைக்கப்பட்டுள்ளது. அலங்காரத்திற்காக சிவப்பு மற்றும் வெள்ளை நிற ரோஜாக்களும் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றார்.