சிலருக்கு வெற்றி கிடைக்கும், சிலருக்கு தோல்வி கிடைக்கும், இதுதான் வாழ்க்கை சக்கரம் : நடிகை குஷ்பு

0

சென்னை, மே.22-சட்டமன்ற தேர்தல் முடிவு பற்றி நடிகை குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார். அ.தி.மு.க. உள்பட வெற்றி பெற்ற கட்சிகளுக்கு அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகையும், காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்பு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரம் செய்தார். தி.மு.க. கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்று நம்பிக்கையும் வெளியிட்டார். ஆனால் தேர்தல் முடிவுகள் அவரது கணிப்புக்கு எதிராக அமைந்து விட்டன.

அ.தி.மு.க வென்று ஆட்சியை தக்கவைத்து இருக்கிறது. இது குஷ்புவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தேர்தல் முடிவு குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறி இருப்பதாவது:-

‘‘சிலருக்கு வெற்றி கிடைக்கும். சிலருக்கு தோல்வி கிடைக்கும். இதுதான் வாழ்க்கை சக்கரம். தேர்தலில் வென்ற அ.தி.மு.க. வுக்கு வாழ்த்துக்கள். மேலும் தேர்தலில் வெற்றிபெற்ற மம்தா, நரேந்திர மோடி, கேரள இடதுசாரி கட்சிகளுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

நான், பலர் உயரத்துக்கு போனதை பார்த்து இருக்கிறேன். உயரத்தில் இருந்து கீழே விழுந்து விடாமல் உங்களை காத்துக்கொள்ளுங்கள். வாழ்த்துக்கள். உங்களுக்கு பதில் சொல்லிக்கொண்டு இருப்பதை விட என் குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவது எனக்கு முக்கியம். எனது குழந்தைகளுடன் வெளிநாட்டுக்கு கிளம்புகிறேன். அவர்கள் விடுமுறையில் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். குழந்தைகளுடன் நேரத்தை செலவிடப்போகிறேன்.’’

இவ்வாறு டுவிட்டரில் குஷ்பு கூறியுள்ளார்.