சிலம்பொலி செல்லப்பனுக்கு இளங்கோவடிகள் விருது: முதல்வர் எடப்பாடி வழங்கினார்

0

சிலம்பொலி செல்லப்பனுக்கு இளங்கோவடிகள் விருது: முதல்வர் எடப்பாடி வழங்கினார்

சென்னை, பிப். 20– முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில், 2018-ஆம் ஆண்டுக்கான தமிழ்த்தாய் விருது, கபிலர் விருது, உவே.சா.விருது, கம்பர் விருது, சொல்லின் செல்வர் விருது, ஜி.யு.போப் விருது, உமறுப்புலவர் விருது, இளங்கோவடிகள் விருது, அம்மா இலக்கிய விருது, சிங்காரவேலர் விருது, சிறந்த மொழி பெயர்ப்பாளர் விருதுகளையும், 2017-ஆம் ஆண்டுக்கான முதலமைச்சர் கணினித் தமிழ் விருது மற்றும் 2018ஆம் ஆண்டுக்கான உலகத் தமிழ்ச் சங்க விருதுகள் மற்றும் தமிழ்ச் செம்மல் விருதுகள் என மொத்தம் 56 விருதுகளை விருதாளர்களுக்கு வழங்கிச் சிறப்பித்தார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழுக்கும், தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் பாடுபடும் சான்றோர்களையும், தமிழறிஞர்களையும் சிறப்பிக்கும் வகையில், ஆண்டுதோறும் சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விருதுகளை வழங்கிச் சிறப்பித்து வந்தார்.

அந்தவகையில், ஜெயலலிதாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசால், 2018-ஆம் ஆண்டிற்கான தமிழ்த்தாய் விருதிற்கு புவனேசுவர் தமிழ்ச் சங்கம் தெரிவு செய்யப்பட்டு, விருதுத் தொகை 5 லட்சம் ரூபாய்க்கான காசோலை, கேடயம், தகுதியுரை மற்றும் பொன்னாடை ஆகியவற்றை அச்சங்கத்தின் நிருவாகிகளுக்கும்;

மரபுச் செய்யுள் / கவிதைப் படைப்புகளை அளித்துத் தமிழுக்கு வளம் சேர்த்த மி. காசுமானுக்கு 2018-ஆம் ஆண்டிற்கான கபிலர் விருது;

கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள், அகழாய்வுத் துறை ஆகியவற்றில் சிறந்து பணியாற்றிய நடன. காசிநாதனுக்கு 2018-ஆம் ஆண்டிற்கான உ.வே.சா.விருது;

கவிச்சக்ரவர்த்தி கம்பர் பெருமானின் புகழ் பரப்பும் வகையில் தமிழ்தொண்டாற்றிய க.முருகேசனுக்கு 2018-ஆம் ஆண்டிற்கான கம்பர் விருது;

சிறந்த பேச்சாற்றலாலும், சொற்பொழிவாலும் தமிழ்ச் சமூகப்பணியை ஆற்றிவரும் ஆவடி குமாருக்கு 2018-ஆம் ஆண்டிற்கான சொல்லின் செல்வர் விருது;

சந்திரசேகரன் நாயகர் ஜி.யு.போப் விருது

அயல்நாட்டு மொழிகளில் தமிழ் இலக்கியங்களை மொழி பெயர்க்கும் சிறந்த தமிழ் மொழி பெயர்ப்பாளர் கு.கோ.சந்திரசேகரன் நாயருக்கு 2018-ஆம் ஆண்டிற்கான ஜி.யு.போப் விருது;

உமறுப்புலவர் தமிழுக்கு ஆற்றிய அருந்தொண்டை போற்றும் வகையில் தமிழுக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் தொண்டாற்றி வரும் தமிழ் அறிஞர் சா.நசிமாபானுவுக்கு 2018-ஆம் ஆண்டிற்கான உமறுப்புலவர் விருது;

சிலப்பதிகாரத்தின் பெருமைகளை தமிழ் மேடைகளில் பரப்பி தமிழ்த் தொண்டாற்றிவரும் சிலம்பொலி சு.செல்லப்பனுக்கு 2018-ஆம் ஆண்டிற்கான இளங்கோவடிகள் விருது;

பெண்ணியத்தின் பெருமைகளை மேடைகளில் பறைசாற்றியும், மகளிர் இலக்கியம் படைத்தும் தமிழ்ப்பணியாற்றி வரும் உலகநாயகி பழனிக்கு 2018-ஆம் ஆண்டிற்கான அம்மா இலக்கிய விருது;

சிங்காரவேலரைப் பற்றி ஆய்வு செய்தும், நூல்கள் படைத்தும் அறிவியல் கருத்துக்களைப் படைத்தும் சமுதாய முன்னேற்றத்திற்காக பல நூல்களைப் படைத்தும் தமிழுக்காகத் தொண்டாற்றிவரும் பா.வீரமணிக்கு 2018-ஆம் ஆண்டிற்கான சிங்காரவேலர் விருது;

கணினி யுகத்திற்கேற்ப தமிழில் சிறந்தத்தமிழ் மென்பொருளை உருவாக்கிய கார்க்கி ஆராய்ச்சி அறக்கட்டளை நிறுவனர் வை.மதன்கார்க்கிக்கு 2017-ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கணினித் தமிழ் விருது; என விருதாளர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப் பதக்கம், தகுதியுரை மற்றும் பொன்னாடை ஆகியவற்றை வழங்கி சிறப்பித்தார்.

மேலும் 2018-ஆம் ஆண்டிற்கான சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதுகள் யூமா வாசுகி, இலட்சுமண இராமசாமி, அரிமா மு.சீனிவாசன், க.குப்புசாமி, மருத்துவர் சே.அக்பர்கவுசர், ராசலட்சுமி சீனிவாசன்,

செ.செந்தில்குமார் (எ) ஸ்ரீகிரிதாரிதாசு, பழனிஅரங்கசாமி, சு.சங்கர நாராயணன், ச.நிலா ஆகியோருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை, தகுதியுரை மற்றும் பொன்னாடை வழங்கி சிறப்பித்தார்.

பிரான்ஸ் பாரதிதாசனுக்கு இலக்கண விருது

மேலும் 2018-ஆம் ஆண்டுக்கான உலகத் தமிழ்ச் சங்க விருதுகளான இலக்கிய விருதினை டென்மார்க் நாட்டைச் சேர்ந்த வி.ஜீவகுமாரனுக்கும், இலக்கண விருதினை பிரான்சு நாட்டைச் சேர்ந்த .கி.பாரதிதாசனுக்கும், மொழியியல் விருதினை பிரான்சு நாட்டைச் சேர்ந்த ச.சச்சிதானந்தனுக்கும், முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை, தகுதியுரை மற்றும் பொன்னாடை வழங்கிச் சிறப்பித்தார்.

மேலும், 2018-ஆம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருதுகள் யுஎஸ்எஸ்ஆர்.கோ.நடராசன் (சென்னை மாவட்டம்), அமுதா பாலகிருஷ்ணன் (திருவள்ளூர் மாவட்டம்), இதயகீதம் அ.இராமானுசம் (காஞ்சிபுரம் மாவட்டம்), ப. சிவராஜி (வேலூர் மாவட்டம்), ஆ.கவிரிஷி மகேஷ் (கிருஷ்ணகிரி மாவட்டம்), க.சம்பந்தம் (திருவண்ணாமலை மாவட்டம்), செ.வ.மதிவாணன் (விழுப்புரம் மாவட்டம்), இரா.சஞ்சீவிராயர் (கடலூர் மாவட்டம்), பெ.ஆறுமுகம் (பெரம்பலூர் மாவட்டம்), அ.ஆறுமுகம் (அரியலூர் மாவட்டம்), ஆ.கணபதி (சேலம் மாவட்டம்), பொ.பொன்னுரங்கன் (தருமபுரி மாவட்டம்), சி.தியாகராசன் (நாமக்கல் மாவட்டம்), வெ. திருமூர்த்தி (ஈரோடு மாவட்டம்), வெ.கருவைவேணு (கரூர் மாவட்டம்), மா.நடராசன் (கோயம்புத்தூர் மாவட்டம்), மு.தண்டபாணி சிவம் (திருப்பூர் மாவட்டம்), சோ.கந்தசாமி (நீலகிரி மாவட்டம்), வீ.கோவிந்தசாமி (திருச்சிராப்பள்ளி மாவட்டம்), மு.முத்து சீனிவாசன் (புதுக்கோட்டை மாவட்டம்), சே.குமரப்பன் (சிவகங்கை மாவட்டம்), .த.உடையார்கோயில்குணா (தஞ்சாவூர் மாவட்டம்), நா.சக்திமைந்தன் (திருவாரூர் மாவட்டம்), மு.மணிமேகலை (நாகப்பட்டினம் மாவட்டம்), க.சுப்பையா (இராமநாதபுரம் மாவட்டம்),

ரூ.25,000 காசோலை, தகுதியுரை

சு.இலக்குமணசுவாமி (மதுரை மாவட்டம்), ப.வதிலைபிரபா (திண்டுக்கல் மாவட்டம்), சு.குப்புசாமி (தேனி மாவட்டம்), க.அழகர் (விருதுநர் மாவட்டம்), பே.இராசேந்திரன் (திருநெல்வேலி மாவட்டம்), ப.ஜான்கணேஷ் (தூத்துக்குடி மாவட்டம்), கா.ஆபத்துக்காத்தபிள்ளை (கன்னியாகுமரி மாவட்டம்) ஆகிய விருதாளர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை, தகுதியுரை மற்றும் பொன்னாடை ஆகியவற்றை வழங்கி சிறப்பித்தார்.

இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத் துறை அமைச்சர் க.பாண்டியராஜன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறைச் செயலாளர் இரா.வெங்கடேசன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் மற்றும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் (பொறுப்பு) கோ.விசயராகவன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.