சிறுமி டானியா, மாற்றுத்திறனாளி அனுசுயா ஆகியோருக்கு புதிய வீடு.. சாவியை வழங்கி முதலமைச்சர் வாழ்த்து!

0
87

சிறுமி டானியா, மாற்றுத்திறனாளி அனுசுயா ஆகியோருக்கு புதிய வீடு.. சாவியை வழங்கி முதலமைச்சர் வாழ்த்து!

தான்யா அவர்களின் தாயார் சௌபாக்யா அவர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம் பாக்கம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட வீட்டிற்கான சாவி மற்றும் மாற்றுத்திறனாளி அனுசுயா அவர்களுக்கு தானியங்கி சக்கர நாற்காலி – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (4.1.2025) தலைமைச் செயலகத்தில், முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு, முகசீரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொண்ட தான்யா அவர்களின் தாயார் சௌபாக்யா அவர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம் பாக்கம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட வீட்டிற்கான சாவியினை வழங்கினார். மேலும், திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பானவேடு தோட்டம் கிராமத்தை சார்ந்த மாற்றுத்திறனாளி அனுசுயா அவர்களுக்கு தானியங்கி சக்கர நாற்காலியை வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மோரை ஊராட்சி வீராபுரம் பகுதியைச் சார்ந்த சௌபாக்யா மற்றும் ஸ்டீபன் ஆகியோரின் மகளான தான்யா என்பவர் முகச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டு அவதியுற்ற நிலையில் தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தன்னிலை குறித்து தெரிவித்ததன் அடிப்படையில் முதலமைச்சர் அவர்கள், சிறுமி தான்யாவின் உடல் நிலையினை கருதி அறுவை சிகிச்சை செலவு முழுவதையும் ஏற்றதுடன் சிறுமி கேட்டுக் கொண்டதன் பேரில் அவர்களின் பெற்றோருக்கு இலவச வீட்டு மனையினை வழங்கி அரசின் மூலம் வீடு கட்டித்தர ஆணையிட்டார்.

அதனை தொடர்ந்து, திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம், பாக்கம் கிராமத்தில் 3 சென்ட் வீட்டு மனை அரசின் சார்பில் வழங்கப்பட்டது. மேலும், அந்த மனையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வீடுகட்டி முடிக்கப்பட்டு, அவ்வீட்டிற்கான சாவியினை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் சௌபாக்யா அவர்களிடம் வழங்கினார். தனக்கு மறுவாழ்வு அளித்து இலவச வீடு வழங்கியதற்காக சிறுமி தான்யா மற்றும் அவரது பெற்றோர் முதலமைச்சர் அவர்களுக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

மாற்றுத்திறனாளி அனுசுயா அவர்களுக்கு தானியங்கி சக்கர நாற்காலி. அதனைத் தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பானவேடு தோட்டம் கிராமத்தை சார்ந்த அனுசுயா என்னும் மாற்றுத்திறனாளி தனது உடல்நிலை குறித்து தெரிவித்து தானியங்கி சக்கர நாற்காலி வழங்கிட வேண்டி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

அவரது கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அனுசுயா அவர்களுக்கு இன்றையதினம் தானியங்கி சக்கர நாற்காலியை வழங்கினார். அதனை பெற்றுக் கொண்ட அனுசுயா அவர்கள் முதலமைச்சர் அவர்களுக்கு தனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.

இந்நிகழ்வின்போது, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் எஸ்.எம்.நாசர், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், இ.ஆ.ப., ஆகியோர் உடனிருந்தனர்.