சாதனைகளை முறியடித்த மகாத்மா காந்தியின் அபூர்வமான மூக்கு கண்ணாடி

0
228

சாதனைகளை முறியடித்த மகாத்மா காந்தியின் அபூர்வமான மூக்கு கண்ணாடி

லண்டன்: மகாத்மா காந்தி வட்ட வடிவ மூக்கு கண்ணாடி அணிவது வழக்கம். அவரது, தங்க பிரேம் போட்ட மூக்கு கண்ணாடி ஒன்று இங்கிலாந்து நாட்டின் தென்மேற்கு பகுதியில் ஹன்ஹாம் என்ற இடத்தில் உள்ள ஈஸ்ட் பிரிஸ்டல் ஆக்சன்ஸ் ஏல மையத்தில் ஆன்லைன் மூலம் ஏலம் விடப்பட்டது.

இந்த கண்ணாடி 10 ஆயிரம் பவுண்டு முதல் 15 ஆயிரம் பவுண்டு வரை ஏலம் போகலாம் என்று அந்த நிறுவனம் எதிர்பார்த்தது. ஆனால் அனைத்து சாதனைகளையும் முறியடிக்கும் வகையில் அந்த மூக்கு கண்ணாடி 2 லட்சத்து 60 ஆயிரம் பவுண்டுக்கு (சுமார் ரூ.2 கோடியே 55 லட்சம்) ஏலம் போய் உள்ளது. அபூர்வமான இந்த மூக்கு கண்ணாடி நம்பமுடியாத விலைக்கு விற்பனையாகி இருப்பதாக அதை ஏலம் விட்ட ஈஸ்ட் பிரிஸ்டல் ஆக்சன்ஸ் ஏல மையத்தைச் சேர்ந்த ஆன்டி ஸ்டோவ் தெரிவித்தார்.

இங்கிலாந்தில் உள்ள மங்கோட்ஸ்பீல்டு என்ற இடத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் இந்த மூக்கு கண்ணாடியை ஏலத்தில் வாங்கி உள்ளார். ஆனால் அவரது பெயர் விவரம் வெளியிடப்படவில்லை.

ஏலம் விடுவதற்கு முன் இந்த மூக்கு கண்ணாடி இங்கிலாந்தைச் சேர்ந்த முதியவர் ஒருவரிடம் இருந்தது. தங்கள் உறவினர் ஒருவர் 1910-ம் ஆண்டு முதல் 1930-ம் ஆண்டு வரை தென் ஆப்பிரிக்காவில் இங்கிலாந்து பெட்ரோலிய நிறுவனத்தில் வேலை பார்த்ததாகவும், அப்போது இந்த மூக்கு கண்ணாடியை அவருக்கு மகாத்மா காந்தி பரிசாக கொடுத்ததாகவும் அந்த முதியவர் கூறியதாக, ஏலத்தின் போது தெரிவிக்கப்பட்டது.