சத்தியபாமா கல்விக்குழுமங்களின் தலைவர் ஜேப்பியார் மரணம்

0

சென்னை, ஜூன்.19- சத்தியபாமா கல்விக்குழுமங்களின் தலைவரும், சத்தியபாமா பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஜேப்பியார் (வயது 85) சோழிங்கநல்லூரில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். வயோதிகம் காரணமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட ஜேப்பியார் சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு ஜேப்பியார் மரணம் அடைந்தார். ஜேப்பியார் உடல் சத்தியபாமா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அவருடைய இல்லத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது. அங்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) சத்தியபாமா கல்விக்குழுமங்களை சேர்ந்த ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள், உறவினர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்படுகிறது. அதன் பின்னர் இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.மரணம் அடைந்த ஜேப்பியார் ஒருங்கிணைந்த சென்னை மாவட்டத்தின் அ.தி.மு.க. செயலாளராகவும், எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் தமிழக சட்டமேலவை அரசு கொறடாகவும் இருந்தவர். சென்னை பெருநகர் குடிநீர் வாரிய தலைவராகவும் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.