சட்டப்படி, மனசாட்சிப்படி தேர்தல் பணியை செய்துள்ளேன் – மனம் திறக்கிறார் ராஜேஷ் லக்கானி

0

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் பிறந்து 23 வயதில் ஐஏஎஸ் அதிகாரியாக தமிழகத்துக்கு பயிற்சிக்கு வந்தவர் ராஜேஷ் லக்கானி. தருமபுரியில் பயிற்சி பெற்று, பெரம்பலூர், தேனி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக பணியாற்றி இருந்தாலும் சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்தபோது தான் மக்களிடம் பிரபலமானார். பல்வேறு துறைகளில் செயலாளராகவும் பதவி வகித்துள்ளார். ஐஏஎஸ் பணியில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், தற்போது தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியாக பொறுப்பேற்று சட்டப்பேரவைத் தேர் தலை அமைதியாக நடத்தி முடித்த திருப்தியில் உள்ளார்.

அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதி களின் தேர்தல், 232 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை என பிஸியாக இருக்கும் நேரத்தில் அவரை சந்தித்த போது, பல கருத்துகளை நம்முடன் பகிர்ந்து கொண்டார். அவரது பேட்டி யில் இருந்து:

உங்கள் குடும்பம் பற்றி சொல்லுங் களேன்?

தந்தை பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர். தாய் 10-ம் வகுப்பு வரை படித்த குடும்பத்தலைவி. நான், எனது தம்பி என இரு பிள்ளைகள். தம்பி தற்போது வெளிநாட்டில் இருக்கிறார். நான் ராய்ப்பூர் என்ஐடியில் பிஇ முடித்து விட்டு, டெல்லி ஐஐடியில் எம்.டெக்., ரேடார் சிஸ்டம் முடித்தேன். அதன்பின் ஐஏஎஸ் முடித்து, தமிழகம் வந்தேன். 25 ஆண்டுகளாக தமிழகத்தில் உள்ளேன். மனைவி தனியார் மருத்துவமனையில் குழந்தைகள் நல மருத்துவராக உள் ளார். இந்த ஆண்டு மகன் பிளஸ் 2 வகுப்புக்கும் மகள் 9-ம் வகுப்புக்கும் செல்கின்றனர்.

தலைமைத் தேர்தல் அதிகாரி என்ற பொறுப்பை உங்கள் குடும்பத்தினர் எப்படி பார்க்கின்றனர்?

அலுவலக பணியை வீட்டுக்குள் கொண்டு செல்வதில்லை. இதை 25 ஆண்டுகளாக பின்பற்றுகிறேன். அவரவர் பணியை செய்கின்றனர். ஆனால், அம்மாவுக்கு மட்டும் பயம் இருக் கிறது. தேர்தல் அதிகாரி என்பது சென் சிடிவ் பணி. பெரிய தலை வர்களுடன் தொடர்புடையது என்பதால் அவர் பயப்படுகிறார்.

வீட்டில் இருக்கும் நேரம் குறைவு என்பதால் குடும்பத்தினரிடம் உங்கள் மீது வருத்தம் இருக்கிறதா?

தினமும் காலை 8 மணிக்கு புறப் பட்டு அலுவலகத்துக்கு வந்துவிடுவேன். வீட்டுக்கு இரவு 11 மணிக்கு செல்வேன். தேர்தல் பணி 2 மாதம்தானே, அதற்கு பிறகு வீட்டில் இருக்க அதிக நேரம் கிடைக்கும் என நினைத்து விட்டு வைத் துள்ளனர். குழந்தைகளை பொறுத்த வரை அப்பா வீட்டில் இல்லாத நேரம் எப்போதும் ஜாலியாகத்தான் இருக்கும்.

தெளிவாக தமிழ் பேசுகிறீர்கள். தமிழ் கற்றுக் கொண்டது எப்படி?

இங்கு வந்து 25 ஆண்டுகள் ஆகி விட்டன. பணியில் சேர்ந்து நான்கரை ஆண்டுகளில் தமிழ் தேர்வு எழுத வேண்டி கற்றுக் கொண்டேன். அதன் பின் ஆர்வத்தின் காரணமாக தொடர்ந்து படித்ததால் தற்போது என்னால் பேச, படிக்க முடிகிறது.

தேர்தல் பணி திருப்தி அளிக்கிறதா?

என் வேலையை சட்டப்படியும் மன சாட்சிப்படியும் செய்துள்ளேன். அதுவே போதும்.

அதிக விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வாக்குப்பதிவு குறைந்து விட்டதே?

வாக்குப்பதிவை அதிகரிக்க இளம் தலைமுறையினருக்காக கொஞ்சம் சமூக ஊடகங்களை பயன்படுத்தினோம். நிறைய நடிகர், நடிகைகளை வைத்து விழிப்புணர்வு வீடியோ தயாரித்தோம். அவர்களே முன்வந்து பணம் வாங்காமல் நடித்துக் கொடுத்தனர். பெரிய வர்த்தக நிறுவனங்கள் அளிக்கும் பைகள், ஆவின் பால் பாக்கெட்கள், ஏடிஎம் இயந்தி ரங்களில் ஸ்கிரீன் சேவர்களாக விழிப் புணர்வு வாசகங்கள் இடம் பெற்றன. கல்லூரிகளுக்கு சென்று வாக்காளர் பட்டியலில் மாணவர்கள் பெயரை சேர்த்தோம். முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள், ஊர் ஊராக சென்று விடுபட்ட மாற்றுத் திறனாளிகள் பெயர்களை பதிவு செய்து அவர்கள் வாக்களிக்க தேவையான வசதிகளை செய்து கொடுத்தோம். இப்படி நிறைய முயற்சிகள் செய்தோம். ஆனால், எதிர்பார்த்த அளவு இல்லை.

வாக்குப்பதிவு குறைவுக்கான காரணமாக எதை கருதுகிறீர்கள்?

அடுத்த ஆய்வு அதுதான். ஒரு வாரத்தில் ஆய்வு செய்யப்படும். என்ன காரணத்தால் வாக்கு சதவீதம் குறைந் தது, யார் யார் வாக்களிக்க வரவில்லை. எந்த பகுதியில் குறைவாக உள்ளது என்பதை கண்டறிய வேண்டும். என்ன செய்தால் அவர்கள் வாக்களிக்க வரு வார்கள் என ஆலோசிப்போம்.

வாக்குப்பதிவை கட்டாயமாக்கினால் சதவீதம் அதிகரிக்குமா?

கட்டாயம் என கூறுவது எவ்வளவு சாத்தியம் என்பது தெரியவில்லை. மருத்துவமனையில் இருப்பவர் எப்படி வாக்களிப்பார். அவர் விளக்கம் அளிக்க வேண்டிவரும். சொந்த ஊருக்கு, வெளிநாட்டுக்கு அவசரமாக செல் பவர்களுக்கு சிக்கல் ஏற்படும்.

சென்னையில் குறைவான வாக்குப் பதிவுக்கு பின்னணி இருக்குமா?

ஓட்டு போட வராதவர்கள், விழிப் புணர்வு அளித்தால் வருவார்கள் என நினைத்தோம். அதன் பின்னும் வரவில்லை என்றால் காரணத்தை அறிய வேண்டும். அவர்கள் ஏன் வரவில்லை என்பதை ஆய்வு செய்ய வேண்டும். ஒருவாரத்தில் சர்வே செய்யும்போது தெரிந்து விடும். அதற்கு தகுந்தபடி நடவடிக்கை எடுக்க முயற்சிப்போம்.

தேர்தல் துறையினரின் குழு பணி எந்த அளவுக்கு கைகொடுத்தது?

இங்குள்ள ஊழியர்கள் சிறப்பாக பணியாற்றினர். நான்கூட இரவில் வீட்டுக்கு சென்றுவிடுவேன். கம்ப் யூட்டர் பிரிவில் இருக்கும் அசோக் உள்ளிட்டவர்கள் இரவில் இங்கேயே தூங்கி, பகலில் வீட்டுக்கு சென்று, சில மணி நேரத்தில் மீண்டும் அலு வலகம் வந்து பணியாற்றினர். 2, 3 மாதங்களாக அனைவரும் கடுமை யாக உழைத்துள்ளனர். தேர்தலை அமை தியாக நடத்தி முடிக்க எனக்கு ஒத் துழைத்த அனைத்து பணியாளர் களுக்கும் பாராட்டுகளையும் நன்றியை யும் உணர்வுபூர்வமாக தெரிவித்துக் கொள்கிறேன்.

விமர்சனங்களை எப்படி எடுத்துக் கொண்டீர்கள்?

விமர்சனங்கள் வரும்போது மனதுக் குள் போராட்டம் இருந்து கொண்டுதான் இருந்தது. அதே நேரம் அமைதியாக இருந்து பணியாற்றினால்தான் சரியாக வேலை நடக்கும். விமர்சனங்களை நாம் என்ன செய்ய முடியும். ஆங்கிலத்தில் ‘கீப் யு கூல்’ என்று சொல்வதை மனதில் வைத்திருந்தேன்.

தேர்தலுக்காக ஒதுக்கிய தொகை எவ்வளவு? பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்திய போதும் செலவு கட்டுக்குள் இருந்ததா?

மொத்தம் ரூ.200 கோடி ஒதுக்கப் பட்டது. பணியாளர்கள் சம்பளத்துக்கே ரூ.140 கோடி சென்றுவிட்டது. விழிப் புணர்வு பணிகளை பொறுத்தவரை, தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களிலும் ஒரே மாதிரியான விளம்பரங்களை பயன்படுத்தினோம். வெளியில் பெரிய அளவாக விளம்பரம் தெரிந்தாலும் கூடுதலாக செலவு செய்யவில்லை. ஆண்டுதோறும் மத்திய அரசு ஒதுக்கிய தொகையை மட்டுமே செல வழித்துள்ளோம்.

தேர்தல் பணிகளில் உங்களுக்கு வேறு வகையான அழுத்தங்கள் இருந்ததா?

அரசியல் ரீதியாகவும், அரசியல் அல்லாத வகையிலும் எந்த அழுத் தங்களும் எனக்கு இல்லை.

அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பு எப்படி இருந்தது?

அரசியல் கட்சிகளை பொறுத்தவரை, நாம் சொல்லும் விஷயம் தேர்தல் ஆணையத்தின் உத்தரவு என்பதால் அவர்கள் எதையும் எதிர்க்கவில்லை. சரியாக ஒத்துழைப்பு அளித்தனர்.

வாக்குக்கு பணம் அளிப்பதை தேர்தல் ஆணையத்தால் தடுக்க முடியவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளதே?

அதனால்தான் 2 தொகுதிகளில் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிகளில் பொதுமக்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது தொடர்பான நேரடி ஆவணங்கள் சிக்கியுள்ளன. தகவல் தொழில்நுட்ப உதவியுடன் வருமான வரித்துறையினர் தமிழகம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆய்வு நடத்தி யுள்ளனர். மொத்தமாக ரூ.105.2 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் தொழில்நுட்பம் புதி தாக செய்தது என்ன?

புகார் அளிக்கும் முறையைத்தான் தொழில்நுட்ப ரீதியாக மாற்றினோம். புகார் அளித்தால் அதன்பேரில் நட வடிக்கை எடுக்க வேண்டுமா, இல்லையா என்பதை முன்பு மாவட்ட ஆட்சியர் அல்லது தேர்தல் நடத்தும் அதிகாரி ஆய்வு செய்ய வேண்டும். தற்போது அந்த முறை இல்லை. இணையம், முகநூல் என எந்த வகையில் புகார் வந்தாலும் உடனுக்குடன் சம்பந்தப்பட்ட பகுதி பறக்கும் படை யினருக்கு தகவல் சென்றது. அவர் களையும் நாங்கள் ஜிபிஎஸ் மூலம் கண்காணித்தோம்.

தேர்தல் முடிந்தது. தொடர்ந்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?

தொடர்ந்து ராஜ்யசபா தேர்தலை நடத்தி முடிப்போம். அதன்பின் மீண் டும் வாக்காளர் சேர்ப்பு, திருத்தம் உள்ளிட்ட பணிகள் தொடர்ந்து நடக்கும். அதற்கு முன்பாக வாக்குப் பதிவு குறைந்தது தொடர்பான சர்வே நடக்கும்.