கோவையில் ரூ.239 கோடியில் திட்டங்கள்: எடப்பாடி துவக்கினார்

0

கோவையில் ரூ.239 கோடியில் திட்டங்கள்: எடப்பாடி துவக்கினார்

கோவை, ஜூன் 25–

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்துத் துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

கொரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கை, அத்திக்கடவு -– அவிநாசி திட்டம் உள்பட பல்வேறு திட்டங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 10.30 மணிக்கு கோவை வந்தார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கலெக்டர் கு.ராசாமணி உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து முதல்வரை வரவேற்றனர்.

தொடர்ந்து முதல்வர் தலைமையில் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு பணிகள் குறித்து அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

பில்லூர் குடிநீர் திட்டம்

முன்னதாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ரூ.166 கோடி மதிப்பீட்டில் பில்லூர் மூன்றாம் குடிநீர் அபிவிருத்தி திட்டம் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் சுரங்கப்பாதை அமைக்கும் பணிக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

கோயம்புத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் சிறப்பு ஏற்பாடாக 10 லட்சம் குடும்பங்களுக்கு கபசுரக் குடிநீர், வைட்டமின் மாத்திரைகள், ஜிங்க் மாத்திரைகள், ஆர்சானிக் ஆல்பம் ஆகியவை அடங்கிய நோய் எதிர்ப்பு சக்தி தொகுப்பு பெட்டகத்தை பயனாளிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி துவக்கி வைத்தார். அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டப் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கலெக்டர் ராசாமணி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.

பூங்காக்கள்

மேலும் பொலிவுறு நகரத் (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் கோவை உக்கடம் பெரியகுளத்தில் ரூ.39.74 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவையும், வாலாங்குளத்தில் ரூ.23.83 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பூங்காவையும் காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்.

வருவாய் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் ரூ.2 கோடியே 68 லட்சம் மதிப்பீட்டில் அன்னூர் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் குடியிருப்புக் கட்டிடத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.

மேலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் 2 கோடியே 85 லட்சம் மதிப்பீட்டில் ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்திற்குப் புதிய கட்டிடத்தையும் திறந்து வைத்தார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் ரூ.2 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புதிய கட்டிடத்தையும் முதல்வர் திறந்து வைத்தார்.

ஆரம்ப சுகாதார மையம்

மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 60 லட்சம் மதிப்பீட்டில் செட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார மையக் கட்டிடத்தை காணொலிக் காட்சி மூலமாக முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.

இதையடுத்து, அனைத்து அரசுத் துறை அலுவலர்களுடன் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்தும், வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்தும் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தொழில் கூட்டமைப்பினருடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார்.

கோவை மாவட்டம் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம். பெரும் தொழில்கள், சிறு தொழில்கள் அதிகம் உள்ள மாவட்டம் இது. டெக்ஸ்டைல் தொழிலில் முதன்மை மாவட்டமாக திகழ்கிறது. தொழிற் கூட்டமைப்பினர் பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளனர். இதுகுறித்து அரசு பரிசீலிக்கும் என்று முதல்வர் எடப்பாடி கூறினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் அம்மன் கே. அர்ச்சுணன், பி.ஆர்.ஜி. அருண்குமார், ஆறுக்குட்டி, கந்தசாமி, எட்டிமடை சண்முகம், கஸ்தூரி வாசு, மாநகராட்சி ஆணையர் ஷ்ரவண் குமார் ஜடாவத், மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யா, மாநகர காவல் ஆணையர் சுமித் சரண், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.