கொரோனா தடுப்பு மருந்து: ரஷிய தடுப்பூசி குறித்து உலக சுகாதார அமைப்பு கருத்து

0
301

கொரோனா தடுப்பு மருந்து: ரஷிய தடுப்பூசி குறித்து உலக சுகாதார அமைப்பு கருத்து

கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணி, உலகம் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தடுப்பை மருந்தை முதலாவதாக கண்டுபிடித்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இதன் பரிசோதனை வெற்றிகரமாக அமைந்ததாகவும், இதில், மருந்து பாதுகாப்பாக இருப்பது தெரியவந்துள்ளதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது. இதற்கு ஸ்புட்னிக்-5 என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதனை தனது மகள்களில் ஒருவருக்கு செலுத்தியிருப்பதாகவும், மருந்து பாதுகாப்பாக இருப்பதாகவும் அதிபர் விளாதிமிர் புதின் நேற்று அறிவித்தார். ஆனால், மனிதர்களுக்கு செலுத்தி சோதிக்கும் பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை. மூன்றாவது கட்டமாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு செலுத்தி மேற்கொள்ளப்படும் இறுதிகட்ட சோதனை இன்றுதான் தொடங்குகிறது.

மேலும், ரஷ்யா அறிவித்துள்ள தடுப்பு மருந்தின் பாதுகாப்பு தன்மை குறித்து விரிவாக ஆய்வு நடத்த வேண்டியிருப்பதாக விஞ்ஞானிகளும், உலக சுகாதார அமைப்பும் தெரிவித்துள்ளன. இந்நிலையில், ஸ்புட்னிக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தடுப்பு மருந்து உற்பத்திப் பணிகள், அடுத்த மாதத்தில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவிலான உற்பத்தி மற்றும் விற்பனைக்கான நடவடிக்கைகளை ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் மேற்கொள்கிறது. சவூதி அரேபியா, யூஏஇ, பிரேசில், இந்தியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் மூன்றாவது கட்ட சோதனைகளை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த மருந்தை வாங்க இந்தியா, சவூதி அரேபியா, யூஏஇ, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட குறைந்தபட்சம் 20 நாடுகள் ஆர்வம் காட்டி வருவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் ரஷ்யாவில் 3 கோடி மருந்துகள் உள்பட உலகம் முழுவதும் 20 கோடி மருந்துகளை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

5 நாடுகளில் ஆண்டுதோறும் 50 கோடி பேருக்கான மருந்துகளை தயாரிக்க ரஷ்யா தயாராக இருப்பதாக ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தின் தலைவர் கிரில் டிமிட்ரியேவ் தெரிவித்துள்ளார்.இதனிடையே, தடுப்பை மருந்து குறித்து முடிவெடுப்பதற்காக நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர் வி.கே.பால் தலைமையிலான குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்தக் குழுவின் கூட்டம், டெல்லியில் இன்று நடைபெறுகிறது. அப்போது, கொரோனா தடுப்பு மருந்தை வாங்குவது, கொண்டுவருவது மற்றும் மக்களுக்கு செலுத்துவது ஆகிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதில், ரஷ்யா அறிவித்துள்ள தடுப்பு மருந்து குறித்து விவாதித்து முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.