கொரோனா தடுப்பு பணிகள்- மருத்துவ குழுவினருடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
சென்னை: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக, 24-5-2021 முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இத ஊரடங்கு ஜூன் 7 வரை நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் 36,000 என்கிற நிலையில் உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு ஊரடங்கு காரணமாக குறைந்து 25,000க்கும் கீழ் வந்து உள்ளது.
சென்னையில் 6,500க்கு மேல் இருந்த தொற்று எண்ணிக்கை 2,450 என குறைந்து உள்ளது. ஆனாலும் பல்வேறு மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை குறையாமல் உள்ளது
இதைக் கருத்தில் கொண்டு ஊரடங்கை நீட்டிப்பதா? அல்லது தளர்வுகளுடன் அமல்படுத்துவதா? அல்லது நீக்குவதா என்பது குறித்து முதல்-அமைச்சர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலர் இறையன்பு, சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன், டிஜிபி திரிபாதி, உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம், சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி தாமரைக்கண்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மற்றும் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
ஊரடங்கினால் தொற்று எண்ணிக்கை குறைந்தாலும் அது பெருமளவில் குறையாத நிலையில் ஊரடங்கை நீட்டிப்பதா? தளர்வுகளை அதிகப்படுத்தி நீட்டிப்பதா? என்பது குறித்து முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது.