‘கொரோனா’ தடுப்புக்கு ரூ.9000 கோடி: பிரதமருக்கு எடப்பாடி கோரிக்கை

0

‘கொரோனா’ தடுப்புக்கு ரூ.9000 கோடி: பிரதமருக்கு எடப்பாடி கோரிக்கை

சென்னை, உயிர்க்கொல்லி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மத்திய அரசு ரூ.9 ஆயிரம் கோடி நிதியை தமிழ்நாட்டுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

எங்களின் இந்த கோரிக்கையை ஏற்று, மிகவும் நெருக்கடியான இந்த காலக்கட்டத்தில் நாட்டின் நலனை கருதி துணிச்சலான முடிவை, சம்பிரதாயத்துக்கு மாறான முடிவை எடுப்பீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன். எங்களின் இந்த விசேஷ கோரிக்கையை ஏற்று உடனடியாக தகுந்த அவசியமான நடவடிக்கைகளை எடுப்பீர்கள் என்றும் நம்புகிறேன் என்றும் கூறியுள்ளார்.

இது சம்பந்தமாக பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி இன்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி இருக்கிறார்.

உயிர்க்கொல்லி கொரோனா நோயை நாடு முழுவதும் அடியோடு கட்டுப்படுத்தி, நாட்டு மக்களின் உயர் நலன் காக்கும் போர்க்கால நடவடிக்கைகளுக்காக மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் மனம் திறந்து பாராட்டி, அதற்கு நெஞ்சார்ந்த நன்றியை எடப்பாடி பழனிசாமி தெரிவித்துக்கொண்டுள்ளார்.

இந்திய பொது நிதி திட்ட முறையின்கீழ் ரிசர்வ் வங்கியிடமிருந்து தான், தங்கு தடையின்றி தாராளமாக நிதியை கடனாக பெற முடியும். உயிர்க் கொல்லி கொரோனா எதிரொலியாக நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, இப்போது தடை உத்தரவும் 21 நாட்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக பொருளாதாரத்தில் இதுவரை யாரும் எதிர்பார்த்திராதபடி, மிகக் கடுமையான அளவுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும். இத்தகைய மிகவும் நெருக்கடியான சிரமமான காலக்கட்டங்களில் சம்பிரதாயத்தை மீறி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிலைமைக்குத் தள்ளப்படலாம். இது பொருளாதாரத்தை சீரமைப்பதற்கான ஒரு நடவடிக்கை.

அதற்காக வழக்கமாக நாம் மேற்கொண்டு வரும் சம்பிரதாயமான கொள்கை, கோட்பாடு திட்டங்களை தற்காலிகமாக ஓரம் ஒதுக்கிவிட்டு மாற்று ஏற்பாட்டை கைக்கொள்ளலாம்.

இந்நிலையில் உயிர்க்கொல்லி கொரோனா பரவி வரும் இந்த காலக்கட்டத்தில் அதை ஒடுக்குவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காகவும், அதற்கு பின்னால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளுக்காகவும், மாநில அரசுகளுக்கு விசேஷ மானியமாக மொத்தமாக குறைந்தபட்சம் 1 லட்சம் கோடியை கூடுதலாக கடனாகப் பெறுவதற்கு அனுமதிக்கலாம். மத்திய பட்ஜெட்டில் ஏற்கனவே அறிவித்திருக்கும் நிதி ஒதுக்கீட்டுத் தொகையை விட கூடுதலாக கேட்கும் தொகை இது என்பது அவசியமாகிறது. ரிசர்வ் வங்கியிடமிருந்து பெற்று மத்திய அரசு மாநிலங்களுக்கு இந்தக் கூடுதல் தொகையை வழங்கலாம்.

நாட்டின் தேசிய ஒட்டு மொத்த உற்பத்தியில், மொத்த மாநில ஒட்டுமொத்த உற்பத்தி அளவு என்னவோ அதைக் கணக்கிட்டு, அதன் பங்குக்கு இணையாக மருத்துவத்துக்கு இந்த நிதி உதவி அளிக்கப்பட வேண்டும். இதன் மூலம் சரிந்த பொருளாதாரத்தை சீரமைக்க முடியும். ஆகவே இந்த விசேஷ நிதி ஒதுக்கீட்டின் கீழ் தமிழ்நாட்டுக்கு ரூ.9 ஆயிரம் கோடியை உடனடியாக ஒதுக்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்தக் கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.