கொரோனாவுக்கு எதிரான தமிழக அரசின் ‘வார் ரூம்’ செயல்படுவது எப்படி?

0
7

கொரோனாவுக்கு எதிரான தமிழக அரசின் ‘வார் ரூம்’ செயல்படுவது எப்படி?

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கட்டளை மையம் எனப்படும் வார் ரூம் அமைக்கப்பட்டு, அதற்காக 6 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும் நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றின் இரண்டாவது அலை மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. நோய்ப் பரவலைத் தடுக்கவும், தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மருத்துவ அவசர நிலை என்று சொல்லக் கூடிய அளவுக்கு தொற்று பரவல் தீவிரமடைந்திருப்பதால், சுகாதாரத்துறை உள்ளிட்ட துறைகள் இணைந்து தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் வார் ரூம் எனப்படும் ஒருங்கிணைந்த கட்டளை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டளை மையத்திற்கு ஒருங்கிணைப்பாளராக தாரேஷ் அகமது நியமிக்கப்பட்டுள்ளார். கட்டளை மையத்தின் செயல்பாடு, தரம் குறித்து ஆய்வு செய்ய அழகுமீனா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், ஆக்ஸிஜன் இருப்பு, தேவையை கண்காணிக்க டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமாரும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை ஒருங்கிணைக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி உமா ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தொற்று பாதிப்பு அதிகமுள்ள சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மருத்துவமனைகளில் தேவையான படுக்கை மற்றும் ஆக்ஸிஜன் தேவையை கண்காணிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி வினித்தும், சென்னையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் கொரோனா மருத்துவமனைகளை கண்காணிக்க கார்த்திகேயனும் நியமனம் செய்யப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள ‘104’ சுகாதார சேவை மையத்துடன் இணைந்து, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் படுக்கை கிடைப்பது, தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் தேவைகளை நிர்வகிப்பது ஆகியவற்றுக்கான சிறப்பு மையமாக இது செயல்படும்.

தொடுதிரை வழியே 24 மணி நேரமும், மருத்துவ படுக்கை, ஆக்சிஜன் தேவை, தீவிர சிகிச்சை படுக்கைகள் உள்ளிட்ட தரவுகளை மாநிலம் முழுவதும் கட்டளை மையம் கண்காணிக்கிறது. இதன் மூலம் தேவையற்ற பதற்றத்தையும், தேவைக்கேற்ப திட்டமிடுதலையும் மேற்கொள்ள முடியும் என்கிறார்கள் கட்டளை மைய அதிகாரிகள்.

ஆக்சிஜன் தொடர்பாக 104 என்ற தொலைபேசி எண்ணிலோ, ட்விட்டரிலோ தொடர்புகொள்ளலாம் . இவ்வாறு சமூக வலைதளங்களில் வரக்கூடிய தகவல்கள் மற்றும் 104 எண்ணுக்கு வரக்கூடிய புகார்கள் மீது, தேவைகளை பூர்த்தி செய்ய நியமிக்கப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கையில் ஈடுபட்டு தீர்வு காண்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், வார் ரூம் தொடங்கப்பட்டிருப்பது நல்ல முன்னெடுப்பாகவே பார்க்கப்படுகிறது.