‘கிராம பொருளாதாரத்தின் முதுகெலும்பு கூட்டுறவுத்துறை’ : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!
சென்னையில் 71-வது கூட்டுறவு வார விழாவில் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு ‘வேர்கள்’ – பணியாளர்களுக்கு ‘விழுதுகள்’, திருநர்களுக்கு ‘சிறகுகள்’ என 3 திட்டங்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மேலும் 180 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 2160 சகோதரிகளுக்கு 10.92 கோடி மதிப்பில் வங்கிக்கடன் இணைப்புகளை வழங்கினார்.அதேபோல், தொழில் முனைவ்வோர் கடன் கைம்பெண்கள் – மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோர் என 543 பயனாளிகளுக்கு ரூ. 22.75 கோடி அளவில் கடன் இணைப்புகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
இந்நிகழ்வில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,”கூட்டுறவு சங்கங்களுக்கும், திராவிட இயக்க தலைவர்களுக்கும் மிகப்பெரிய தொடர்பு உண்டு. தந்தை பெரிய ஈரோடு கூட்டுறவு வங்கியில் உறுப்பினராக இருந்தார். அதேபோல் அண்ணாவும், கலைஞரும் கூட்டுறவு வங்கிகளில் உறுப்பினராக இருந்துள்ளனர்.
கூட்டுறவு துறை சார்பில் 7,600 கோடி மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. ரூ.39 ஆயிரம் கோடி அளவில் வேளாண் பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. கடன் வழங்குவது மட்டுமின்றி மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும், விவசாயிகளுக்கும் சூழலை உணர்ந்து வெவ்வேறு காலங்களில் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
மக்களுடன் நேரடியாக தொடர்பில் இருப்பது கூட்டுறவுத் துறை தான். 35 ஆயிரம் நியாய விலை கடைகள் என்று மாபெரும் இந்த நெட்வொர்க் தான் அரசு திட்டங்கள் மக்களை சென்றடைய மிகப் பெரிய உதவியாக இருக்கிறது. வெள்ள காலங்களில் அத்தியாவசிய பொருள்களை, நிதி உதவிகளை அரசாங்கம் உடனடியாக கொண்டு சேர்க்க இந்த நெட்வொர்க் தான் உதவுகிறது.
இந்தியாவில் தமிழகத்தில் உள்ள அளவிற்கு கூட்டுறவுத்துறையில் மார்டனைஸ்டு சிஸ்டம் வேறு எங்கும் இல்லை.கிராமங்களில் ஒரு கூட்டுறவு துறை வங்கி ஏற்பட்டால் 10 தேசிய வங்கி வந்ததற்கு சமம். கிராம பொருளாதாரத்தின் முதுகெலும்பாக கூட்டுறவுத்துறை செயல்படுகிறது. கூட்டுறவுத்துறை மென்மேலும் சிறக்க தமிழக முதலமைச்சர் உடன் இருப்பார்” என தெரிவித்துள்ளார்.