கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழக ஆசிரியர்களுக்கு “விலங்கு பேரிடர் மேலாண்மை” பயிற்சி

0

கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழக ஆசிரியர்களுக்கு “விலங்கு பேரிடர் மேலாண்மை” பயிற்சி

சென்னைபிப்ரவரி 04, 2020

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழக கால்நடை விரிவாக்க கல்வித் துறை, சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி ஆகியவை, புதுதில்லி உலக விலங்கு பாதுகாப்பு அமைப்பு மற்றும் தமிழ்நாடு பேரிடர் இழப்புக் குறைப்பு நிறுவனத்துடன் இணைந்து, குறித்து கால்நடை அறிவியல் பல்கலைக் கழக ஆசிரியர்களுக்கு “விலங்கு பேரிடர் மேலாண்மை” பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்துள்ளன.

மூன்று நாட்கள் நடைபெறும்  இந்த பயிற்சியை தமிழக அரசின் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் கட்டுப்பாட்டுத் துறை ஆணையர் டாக்டர் ஜே ராதாகிருஷ்ணன் இன்று (04.02.2020) தொடங்கி வைத்தார்.  மேலும், நாமக்கல், ஒரத்தநாடு, திருநெல்வேலியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் அமைக்கவுள்ள “கால்நடை அவசரப் பாதுகாப்புப் பிரிவு“-க்கான (VERU) கால்நடை முதலுதவிப் பெட்டியை வழங்கிய அவர், மாநில பேரிடர் மேலாண்மை நிலையான இயக்க நடைமுறை என்ற நூலையும் வெளியிட்டார்.

தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் முன்னாள் உறுப்பினர் திரு கே எம் சிங், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி இயக்குநர் சிசிலியா ஜோசப், விரிவாக்க கல்வி இயக்குநர் திரு சுதிப் குமார், சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியின் கால்நடை விரிவாக்க கல்வித் துறை தலைவர் திரு பா குமாரவேல் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினர்.

பேரிடர் மற்றும் அவசர காலங்களில் கால்நடைகள் மற்றும் விலங்குகளை எவ்வாறு பாதுகாப்பது மற்றும் புதிதாக ஏற்படக்கூடிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்து, இந்த பயிற்சி முகாமில் விளக்கம் அளிக்கப்படுகிறது.

தமிழகத்தின் புவியியல் அமைப்பு மற்றும் தட்பவெப்பநிலை, சுனாமி, வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட பேரிடர்கள் மற்றும் இயற்கை சீற்றங்களை சந்திக்கும் வகையில் உள்ளதால்,  அவசர சூழ்நிலைகளில் கால்நடைகளுக்கு உதவும் வகையில் இந்த பயிற்சி மற்றும் அவசர கால்நடை பாதுகாப்புப் பிரிவுக்கு ஏற்பாடு செய்துள்ளதாக தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.