கரூர் அன்புநாதனிடம் பணம் பறிமுதல் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் பேச்சு

0

கரூர்:கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் பணப்பட்டுவாடா புகாரை தொடர்ந்து அங்கு தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி தேர்தல் வருகிற 23-ந் தேதி நடக்கிறது. இந்த தொகுதியில் தி.மு.க. சார்பில் கே.சி.பழனிசாமி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து நேற்று மாலை கரூரை அடுத்த வேலாயுதம்பாளையத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

நாளைக்கு (இன்று) நீங்கள் (பொதுமக்கள்) மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கக்கூடிய நாள். காலை 8 மணி அளவில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளை தவிர்த்து 232 தொகுதிகளில் வாக்குகள் எண்ண தொடங்கி கருணாநிதி 6-வது முறையாக முதல்-அமைச்சராக பதவி ஏற்கிறார் என்ற செய்தி உறுதியாக போகிறது. அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தலை தள்ளி வைக்க வேண்டிய அவசியம் ஏன்? என்ன காரணம். ஆளும் கட்சி ஜனநாயகத்தை நம்பாமல், ஜனநாயகத்தை படுகுழிக்கு தள்ளி பணநாயகத்தை நம்பி அதற்கான செயலில் ஈடுபட்டார்கள். அதுவும் விஞ்ஞான ரீதியாக வாக்காளர்களுக்கு எப்படியாவது பணம் கொண்டு போய் கொடுக்க வேண்டும் என்று திட்டமிட்டு செயல்பட்டனர். அதற்கு போலீஸ் அதிகாரிகள் துணை போய் இருக்கிறார்கள்.

எந்தெந்த அதிகாரிகள் துணைபோனார்கள் என்ற பட்டியல் எங்களுக்கு ஏற்கனவே வந்துவிட்டது. கரூரில் இருக்க கூடிய அன்புநாதன் யார்? என்பது உங்களுக்கு தெரியும். அன்புநாதன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருக்கிறார்கள்.

கைப்பற்றப்பட்டு இருக்கக்கூடிய நிலைகள் என்ன? நான் இட்டுக்கட்டி, கற்பனை செய்து சொல்லவில்லை. எதையும் புள்ளி விவரமாக சொல்வேன். ஜெயலலிதா போல் பொதுவாக பேச மாட்டேன். கருணாநிதி மகன் நான். வாய்க்கு வந்தபடி பேசிட மாட்டேன். ஆதாரத்தோடு சொல்கிறேன்.

இந்திய தேர்தல் ஆணையத்தில் 3 தேர்தல் ஆணையர்கள் சேர்ந்து போட்ட உத்தரவில் அனைத்து விவரங்களும் உள்ளன. கடந்த 14-ந் தேதி அவர்கள் போட்ட உத்தரவில், 3-வது பாராவில் அன்புநாதன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி ரூ.4 கோடியே 77 லட்சம் கைப்பற்றினர். 2-வது அப்போது முக்கிய சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதில் அ.தி.மு.க. முக்கிய அமைச்சர்களுக்கும், அன்புநாதனுக்கும் உள்ள கூட்டணி பற்றியும் அறிய முடிந்தது. 3-வது ரூ.1 கோடியே 30 லட்சத்திற்கு வேட்டி-சேலைகள் வாங்கியதற்கான ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

4-வது பணம் என்னக்கூடிய பல எந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 5-வது பணம் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட பதிவு எண் இல்லாத ஆம்புலன்சு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் கரூரில் பிடிபட்டது ரூ.4 கோடியே 77 லட்சம் என்கிறது. ஆனால் ரூ.280 கோடி கைப்பற்றப்பட்டதாக செய்தி வந்து இருக்கிறது. இதுதேர்தல் அதிகாரிகள் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க கூடிய வேலை செய்து இருக்கிறார்கள். எனவே கரூர் அன்புநாதனிடம் பணம் பறிமுதல் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்.

அ.தி.மு.க. அமைச்சர்கள் அனைவர் மீதும் லஞ்ச புகார்கள் உள்ளன. ஊழல் நடக்க கூடாது என்று தான் கருணாநிதி தேர்தல் அறிக்கையில் லோக்-ஆயுக்தா சட்டம் கொண்டு வரப்படும். வேலாயுதம்பாளையம் தனி தாலுகாவாக அறிவிக்கப்படும் என்பது உள்பட பல்வேறு திட்டங்கள் அரவக்குறிச்சி தொகுதியில் நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறியுள்ளார். எனவே அரவக்குறிச்சி தொகுதியில் கே.சி.பழனிசாமிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து மாபெரும் வெற்றியை தேடி தரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து அரவக்குறிச்சி தொகுதியில் பல்வேறு இடங்களுக்கு வேனில் சென்று அவர் பிரசாரம் செய்தார். வேட்பாளர் கே.சி.பழனிசாமி மற்றும் நிர்வாகிகள் உடன் சென்றனர்.