கப்பலோட்டிய தமிழன் மற்றும் செக்கிழுத்த செம்மல் என பிரபலமாக அழைக்கப்படும் வ.உ. சிதம்பரம் பிள்ளை

0

PROF N.RAJENDRANகாந்தியடிகளின் சம்பாரன் சத்தியாகிரகத்திற்கு முன்பாகவே, வ.உ.சிதம்பரனார் உழைக்கும் மக்களுக்கான இயக்கத்திற்கு தலைமை தாங்கியதன் மூலம் இவ்வகையில் அவர் காந்தியடிகளுக்கு முன்னோடியாக விளங்குகிறார்.

* பேராசிரியர் என்.இராஜேந்திரன்

கப்பலோட்டிய தமிழன் மற்றும் செக்கிழுத்த செம்மல் என பிரபலமாக அழைக்கப்படும் வள்ளிநாயகம் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை, (வ.உ.சி.), சிறந்த ஒருங்கிணைப்பாளராகவும் மற்றும் கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் தேசிய நலனுக்காக மக்களை திரட்டுவதில் நம்பிக்கையுள்ள தனிநபராகவும் திகழ்ந்தவர். தூத்துக்குடியில் வ.உ. சிதம்பரம் பிள்ளை வந்த பின்பே திருநெல்வேலி மாவட்டத்தில் சுதேசி இயக்கம் உத்வேகம் பெற தொடங்கியது.
வ.உ. சிதம்பரம் பிள்ளை (வ.உ.சி.), புகழ்பெற்ற வழக்கறிஞர் உலகநாதன் பிள்ளை மற்றும் பரமாயி அம்மாள் ஆகியோருக்கு 1872-ம் ஆண்டு செப்டம்பர் 5ந் தேதி தமிழ்நாட்டில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஓட்டப்பிராத்தில் பிறந்தார். அவர் தனது சட்டப்படிப்புகளை துவங்குவதற்கு முன்பாக, தாலுக்கா அலுவலகத்தில் எழுத்தராக பணிபுரிந்தார். 1900-ஆம் ஆண்டு தூத்துக்குடியில் நீதிபதியுடன் உண்டான மோதல் அவரை புதிய வாய்ப்புகளை தேட வைத்தது. 1905-ஆம் ஆண்டு வரை, அவரது சக்தியை தொழில் மற்றும் பத்திரிக்கை செயல்கள் எடுத்துக் கொண்டன.
வங்காளப் பிரிவினையைத் தொடர்ந்து 1905-ஆம் ஆண்டு வ.உ.சி. அரசியலில் நுழைந்தார். 1905-ஆம் ஆண்டு இறுதியில், வ.உ.சி. சென்னைக்கு சென்று பாலகங்காதர திலகர் மற்றும் லாலா லஜபதி ராய் ஆகியோரால் துவங்கப்பட்ட சுதேசி இயக்கத்தில் ஈடுபட்டார். ராமகிருஷ்ண மிஷனால் ஈர்க்கப்பட்ட வ.உ.சி. க்கு சுப்பிரமணிய பாரதி மற்றும் மாண்டயம் குடும்பத்தாருடன் தொடர்பு ஏற்பட்டது.
வரலாற்றில், தமிழ்நாட்டில் தூத்துக்குடி முக்கிய துறைமுகமாக திகழ்கிறது, தற்போது நவீன காலத்திலும் சென்னைக்கு அடுத்தப்படியாக இரண்டாவது இடத்தில் உள்ளது. தூத்துக்குடியின் வணிகர்கள் இலங்கையுடன் வணிகத்தில் மிகுந்த ஈடுபாட்டுடன் நடத்தி வந்தபோதும், பயணிகள் போக்குவரத்து மற்றும் சரக்கு சேவைகளை, உதாரணமாக, தூத்துக்குடி மற்றும் கொழும்பிற்கு இடையே தொடர் கப்பல் சேவையினை பிரிட்டிஷ் இந்தியன் ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி லிமிடெட் போன்ற ஐரோப்பிய கப்பல் நிறுவனங்களால் மட்டுமே நடத்தப்பட்டு வந்தது. பிரிட்டிஷ் இந்தியன் ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி லிமிடெட் அலுவலர்கள் இந்தியர்களை நியாயமற்ற வகையிலும், தரக்குறைவாகவும் நடத்தி வந்தனர்.
1906-ம் ஆண்டில், வ.உ.சி., சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனியை (எஸ்.எஸ்.என்.கோ.) துவங்குவதற்கான உத்திக்கு தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி வணிகர்கள் மற்றும் தொழிலதிபர்களின் ஆதரவை பெற்றார். இதன் மூலம், ஆங்கிலேய அதிகாரிகள் துயரம் மற்றும் சினம் கொள்ளும் வகையில் – அவர் திருநெல்வேலி மாவட்டத்தை தேசிய அரசியலில் பரபரப்பான இடமாக மாற்றினார். அக்டோபர் 16, 1906 அன்று முறையாக பிறந்த சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி (எஸ்.எஸ்.என்.கோ.), வ.உ.சி.யின் தனிப்பட்ட சாதனையாகும். இதனிடையே, சுதேசி கப்பல் கம்பெனி வலுவாக காலுன்றும் விதமாக திருநெல்வேலி, மதுரை மற்றும் தமிழ்நாட்டில் பிற நகரங்களில் உள்ள முன்னணி வணிகர்களை அவர் ஒருங்கிணைத்தார்.
எஸ்.எஸ்.என்.கோ. – விற்கு விரைவாக கிடைத்த போதுமான ஆதரவு பிரிட்டிஷ் நிறுவனத்தை பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வைத்தது. இருப்பினும், வ.உ.சி. மற்றும் பிற சுதேசி தலைவர்களுக்கு பி.ஐ.எஸ்.என்.கோவின் மிகுந்த வளஆதாரங்கள் மற்றும் அரசின் உதவி ஆகியவற்றை எதிர்க்கொள்ள மக்களின் ஆதரவை பெறுவதில் அடங்கியிருந்தது. வ.உ.சி., மற்றொரு சிறந்த தமிழ் அறிஞரான சுப்பிரமணிய சிவாவின் ஆதரவை பெற்றார். வ.உ.சி. மற்றும் சிவாவின் முயற்சிகளுக்கு சுதேசி சங்கம், அல்லது ‘தேசிய தன்னார்வலர்கள்’ என்ற அமைப்பினை நிறுவ திருநெல்வேலியை சேர்ந்த எண்ணற்ற வழக்கறிஞர்கள் உதவினார்கள்.
தூத்துக்குடி கோரல் மில்கள் வேலைநிறுத்தம் சுதேசிய இயக்கத்தின் துவக்க முகமாக அமைந்தது. இது தமிழ்நாட்டில் தேசிய இயக்கம் எத்தகைய வகைப்பாட்டை கொண்டது என்பதை வெளிப்படுத்தியது. இந்த மில்களில் பணிச்சூழல்கள் மிகவும் மோசமாக இருந்தன. 1908-ஆம் ஆண்டில், ஆங்கிலேயருக்கு சொந்தமான கோரல் மில்களில் இருந்த 1695 தொழிலாளர்களில், 59 சதவீதத்தினர் 14-16 வயதுடையவர்கள். விடியற்காலை 5 மணிக்கு பணியை துவக்கும் அவர்கள், மாலை ஏழு மணி வரை பணியாற்றினர். பணிநேரம் குறைப்பு மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக கோரல் மில்களில் பணியாற்றிய தொழிலாளர்கள் 27 பிப்ரவரி, 1908 அன்று வேலைநிறுத்தத்தை துவக்கினர். தொழிலாளர்களின் நலனில் மிகுந்த அக்கறை உள்ள வ.உ.சி. இத்தொழிலாளர்களின் பிரச்சினையை கையில் எடுத்துக் கொள்ள, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு தூத்துக்குடி மக்களின் அனுதாபமும், ஆதரவும் கிடைத்தது. காந்தியடிகளின் சம்பாரன் சத்தியாகிரகத்திற்கு முன்பாகவே, வ.உ.சி உழைக்கும் மக்களுக்கான இயக்கத்திற்கு தலைமை தாங்கியதன் மூலம் அவர் காந்தியடிகளுக்கு முன்னோடியாக இதில் விளங்குகிறார்.
1908 மார்ச் முதல் வாரத்தில், வ.உ.சி., சிவா மற்றும் பத்மநாப அய்யங்கார் ஆகியோரரின் தொடர் வீரமூட்டும் பேச்சுக்கள் தூத்துக்குடி மக்களின் உணர்ச்சியை தூண்டின. தூத்துக்குடி மக்களின் பெரும் ஆதரவோடு, பிபின் சந்திர பால் சிறையிலிருந்து விடுதலை பெற்றதை கொண்டாடும் வகையிலும், ஸ்வராஜ் கொடியை ஏற்றிடவும் மிகப் பெரிய ஊர்வலத்தை 09 மார்ச், 1908 அன்று நடத்திட இந்த தேசிய தலைவர்கள் முடிவு செய்தனர். மாவட்ட ஆட்சியர் வின்ச், சுதேசிகள் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுவிட்டதாகவும், வரும் திங்கள் அன்று அடுத்த கூட்டத்தை நடத்த உள்ளர்கள், அதை எப்படியும் தடுத்தாக வேண்டும் என்றும் மதராஸ் அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார். மார்ச் 12 அன்று, வ.உ.சி., சிவா மற்றும் பத்மநாப அய்யங்கார் ஆகியோர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர். சட்டத்தை துஷ்பிரயோகம் செய்து தங்களது தலைவர்களை சிறையில் அடைக்கப்பட்டதை கண்டு திருநெல்வேலி மக்கள் வெகுண்டெழுந்தனர் மற்றும் மாவட்டம் எங்கும் வன்முறை வெடித்தது.
செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி பின்ஹே சிவாவிற்கு 10 வருட சிறை தண்டனை விதித்ததோடு, வ.உ.சி.க்கு அதிகபட்சமாக வாழ்நாள் சிறை தண்டனை விதித்தார். 2வது செஷன்ஸ் வழக்கில், வ.உ.சி. மீது மட்டும் ‘பிரிவினை’ குற்றங்கள் சுமத்தி, இரண்டாவது முறையாக வாழ்நாள் சிறை தண்டனை, முதல் தண்டனையோடு இணைந்து அனுபவிக்க உத்தரவிட்டது. எனினும், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு தண்டனைகளை குறைக்க வழிசெய்தது. வ.உ.சி.யின் வாழ்நாள் சிறை தண்டனை ஆறு வருடங்களாகவும் மற்றும் நான்கு வருடங்களாகவும் இணைந்து அனுபவிக்க குறைக்கப்பட்டது. வ.உ.சி. மற்றும் சிவா தங்களது கடுங்காவல் சிறை தண்டனையை முழுவதுமாக அனுபவித்தனர்.
பாளையங்கோட்டை சிறையிலிருந்து பின்னர் கோயம்புத்தூர் மத்திய சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட வ.உ.சி., ஜெயிலர்களாலும், குறிப்பாக, ‘கோணையன்’ என்ற வார்டராலும் பெரிதும் துன்புறுத்தப்பட்டார், கோணையன் முதலில் வ.உ.சி.யை சணல் சுத்தம் இயந்திரத்தை வெற்றுக் கையினால் இயக்கும் பணியை ஒதுக்கினான்; இரு கைகளின் தோல்களும் விரைவில் உரிந்து வ.உ.சி.யின் கைகளில் ரத்தம் வடிய தொடங்கியது. அவர் இதை ஜெயிலரின் கவனத்திற்கு எடுத்து சென்றதும், அவர் மிகவும் அன்பாக, ‘எருதுக்கு பதிலாக வ.உ.சி.யை கொடும் வெயிலில் எண்ணை ஆட்டும் செக்கை இழுக்க வைத்தார்’. புகழ்பெற்ற வழக்கறிஞர் மற்றும் தேசியத் தலைவர் தற்போது ‘கைகளிலும் கால்களிலும் சங்கிலியால் பிணைக்கப்பட்டு, மிருகம் போல செக்கு இழுத்தார்’. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் அவரது தண்டனையை குறைத்த பின் அவர் டிசம்பர் 24ந் தேதி, 1912 ஆம் ஆண்டு அன்று விடுதலையானார்.
வறுமை வ.உ.சி.யின் தேசிய போராட்டத்தை தடுக்கவில்லை; காந்தியின் மேல் அவர் கொண்ட பற்று அவரது வறுமையை புறந்தள்ளியது. காந்தியடிகளுக்கும், வ.உ.சி.க்கு 1915-16-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற கடிதப் போக்குவரத்துகள், வ.உ.சி.யின் தன்னிகரற்ற தேசப்பற்றினை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
வ.உ.சி. தனது கடைசி காலத்தை (1930களில்) கோவில்பட்டி பெருத்த கடன் சுமையுடன், அன்றாட பிழைப்பிற்காக தனது சட்ட புத்தகங்ளை விற்கும் நிலையில், இருந்தார். வ.உ.சி. அவர் விரும்பிய வண்ணம் தூத்துக்குடியில் உள்ள இந்திய தேசிய காங்கிரஸ் அலுவலகத்தில் 18 நவம்பர் 1936 அன்று உயிர் பிரிந்தது.
வ.உ.சி. மிகச் சிறந்த ஞானி ஆவார். அவர் சிறையிலிருந்த போது தமிழில் எழுதத் தொடங்கிய சுயசரிதை 1912-ம் வருடம் விடுதலை பெற்ற பின் நிறைவடைந்தது. அவர் திருக்குறளுக்கு பொழிப்புரை எழுதியுள்ளதோடு, தமிழ் இலக்கணமான, தொல்காப்பியத்தை தொகுத்தார். அவர் ஜேம்ஸ் ஆலன் புத்தகங்களை மொழிபெயர்த்து புகழ் பெற்றார். மெய்யறம் மற்றும் மெய்யறிவு ஆகிய நுால்களை இயற்றினார் அவரது தனித்துவமான நடைக்காக போற்றப்பட்டதுடன், சிறந்த தன்னகற்ற மொழிபெயர்ப்பை வெளிப்படுத்தியது.
வ.உ.சி.யின் ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்திற்கு எதிரான தொடர் போராட்டங்கள், ஆங்கில வரலாற்று ஆசிரியர்கள், தேசிய இயக்கத்தின்போது அரசியல் தமிழ்நாடு அரசியல் ரீதியில் செயல்படாமல் இருந்தது என பொதுவாக கூறி வந்ததை பொய்யாக்கியது. வ.உ.சி. மற்றும் அவரது திறன்மிக்க தளபதிகள் விட்டுச் சென்ற போரட்டத்தின் உருவங்கள் மற்றும் தேசிய உணர்வு ஆகியவை வருங்கால சந்ததியினருக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும்.

* கட்டுரை ஆசிரியர், பேராசிரியர் என்.ராஜேந்திரன், முன்னாள் பேராசிரியர் மற்றும் வரலாற்றுத் துறையின் தலைவர், பாரதிதாசன் பல்கலைகழகம், திருச்சிராப்பள்ளி. (தமிழ்நாடு) ஆவார்.