கபாலி ஜுரம்: இன்று முதல் முன்பதிவு தொடங்குகிறது

0

ரஜினி நடித்துள்ள ‘கபாலி’ படம் வருகிற 22–ந்தேதி (வெள்ளிக்கிழமை) வெளியாகிறது. இந்த படத்தை பா.ரஞ்சித் இயக்கியுள்ளார். கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார்.
கபாலி படத்துக்கான டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது. தமிழகம் முழுவதும் 700 தியேட்டர்களில் கபாலி படம் வெளியாகிறது. வெளி நாடுகளில் 400 தியேட்டர்களில் வெளியாகிறது. உலகம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் திரையிடப்பட உள்ளன.

கபாலி ரிலீஸ் அன்று பெங்களூரில் இருந்து சென்னைக்கு கபாலி ஸ்டில்கள் வரைந்த சிறப்பு விமானம் விடப்படுகிறது. அதில் டிக்கெட் எடுத்து பயணம் செய்யும் பயணிகளுக்கு சென்னையில் 22–ந் தேதி கபாலி சினிமா பார்ப்பதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படுகின்றன. உணவும் இலவசமாக வழங்கப்படுகிறது.

ரஜினி ரசிகர்களுக்காக கபாலி படம் சிறப்பு காட்சி திரையிடப்படுகிறது. இதற்கான டிக்கெட்டுகள் ரசிகர்களுக்கு வழங்கப்பட்டு விட்டன. வெளிநாடுகளில் கபாலி படம் பிரிமியர் ஷோ 21–ந்தேதி போடப்படுகிறது. இதற்கான டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டன.

நாளை முன்பதிவு தொடங்க உள்ள நிலையில் ரஜினி ரசிகர்களிடையே கபாலி ஜுரம் தொற்றியுள்ளது. எங்கும் கபாலி, எதிலும் கபாலி என்ற வகையில் கபாலி படம் பற்றி விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன.

சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் ஏராளமான சுவர்கள் கபாலி விளம்பரங்களுடன் காட்சியளிக்கின்றன. அதில் ரஜினியின் இளமை தோற்றம் மற்றும் முகத்தில் தாடியுடன் கூடிய ஸ்டைலான தோற்றங்கள் வரையப்பட்டுள்ளன.

மேலும் ரசிகர் மன்றம் சார்பில் கபாலி படத்தை பிரபலப்படுத்தும் வகையில் ஏராளமான பேனர்களும் வைக்கப்பட்டுள்ளன. அந்த பேனர்களில் ’உலகமே ரஜினியின் ராஜ்ஜியம், என்றுமே நாங்கள்தான் தமிழர்களின் அடையாளம், மாலையும் மரியாதையும் தேடி வருவது எங்கள் கபாலிக்கு மட்டும்தான்’ என்பது போன்ற வசனங்கள் இடம் பெற்றுள்ளன.

கார்கள் மற்றும் ஆட்டோக்களில் கபாலி பட ஸ்டில்கள் வரையப்பட்டுள்ளன. ரசிகர்கள் சிலர் தங்களது கார்களில் நம்பர் பிளேட்டுக்கான இடத்தில் கபாலி என்று எழுதி சென்னையில் வலம் வருகிறார்கள்.

இளைஞர்கள், இளம் பெண்கள் மற்றும் குழந்தைகள் இடையே கபாலிடா, நெருப்புடா என்ற வார்த்தைகளுக்கு மவுசு ஏற்பட்டுள்ளது. எல்லா இடங்களிலும் அவர்கள் அந்த வார்த்தைகளை உச்சரிப்பதை வழக்கமாக காண முடிகிறது.

படம் வெளியாக இன்னும் 5 நாட்களே இருக்கும் நிலையில் கபாலியை காண தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.