கன்னியாகுமரியில் இருந்து திருவள்ளுவர் சிலை கங்கை பயணம்

0

பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்

கன்னியாகுமரி, ஜூன்.19- கன்னியாகுமரியில் இருந்து திருவள்ளுவர் மாதிரி சிலை வாகனம் மூலம் கங்கைக்கு எடுத்து செல்லப்படுகிறது. இதனை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று தொடங்கி வைத்தார்.

TIRUVALLUVAR-2திருவள்ளுவருக்கு உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் 12 அடி உயரத்தில் 4ணூ டன் எடை கொண்ட சிலை வருகிற 29-ந் தேதி நிறுவப்படுகிறது. இந்த சிலையை ஸ்தபதி சக்தி கணபதி வடிவமைத்துள்ளார். நாமக்கல் பகுதியில் இது வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இதனை இந்திய மக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் சிலையின் மாதிரி கன்னியாகுமரியில் இருந்து முக்கிய மாநிலங்கள் வழியாக ஹரித்துவாருக்கு கொண்டு செல்லப்படும் என தருண் விஜய் எம்.பி. அறிவித்தார். அதன்படி திருவள்ளுவர் சிலை கங்கை பயணம் தொடக்க விழா, கன்னியாகுமரியில் நேற்று நடந்தது.

இதையொட்டி நடந்த நிகழ்ச்சியில் கடல் நடுவே அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலையின் பாதத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தருண் விஜய் எம்.பி., பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மலர் தூவினார்கள்.

இதைத்தொடர்ந்து திருவள்ளுவர் சிலை பயண வாகனம் காந்தி மண்டபம் முன் கொண்டு வரப்பட்டது. அதில் அனைவரும் பார்க்கும் விதத்தில் 7 அடி உயர திருவள்ளுவர் மாதிரி சிலை இருந்தது. அருகில் பூமி உருண்டை, இமயமலையின் தோற்றம் போன்றவையும் வடிவமைக்கப்பட்டு இருந்தன. இந்த வாகனத்தின் யாத்திரையை தருண் விஜய் எம்.பி. முன்னிலையில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பாராளுமன்றத்தில் திருக்குறளை வாசித்த நாகர்கோவில் பள்ளி மாணவி ஆஸ்மி ஜெனிபர், திருவட்டார் பள்ளி மாணவி மேத்தா ஆகியோர் பாராட்டப்பட்டனர். சிலையை வடிவமைத்த சிற்பி சக்தி கணபதியும் கவுரவிக்கப்பட்டார்.

திருப்பயண யாத்திரையை தருண் விஜய் எம்.பி. வழிநடத்திச் சென்றார். இந்த திருப்பயணம் நெல்லை, மதுரை, கோவை, ஈரோடு, சேலம், வேலூர், காஞ்சீபுரம் வழியாக 22-ந் தேதி சென்னையை அடைகிறது.

இதுகுறித்து தருண் விஜய் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டிளித்தபோது கூறியதாவது:-

திருவள்ளுவர் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளும் உலக பொதுமறையைத் தந்தவர். அவரது உருவச்சிலையை வருகிற 29-ந் தேதி கங்கை நதி கரையோரத்தில் திறக்க உள்ளோம். இந்த திருப்பயணத்துக்கு பிரதமர் நரேந்திரமோடி, பா.ஜனதா தலைவர் அமித்ஷா ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

திறப்பு விழாவில் பங்கேற்பதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் சம்மதம் தெரிவித்துள்ளன. புண்ணிய தலங்களான கன்னியாகுமரியையும், கங்கையையும் இணைக்கும் நட்பு பாலமாக இந்த விழா இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.