கந்த சஷ்டி விழா: சூரசம்ஹார விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்

0

முருகன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

சென்னை, கந்த சஷ்டி விழாவையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்டர்கள் பால் காவடி, புஷ்ப காவடி எடுத்து வந்து நேர்த்திகடன் செலுத்தினர்.

திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹார விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

tcr-2

முருகபெருமானின் அறுபடை வீடுகளின் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 31-ந்தேதி தொடங்கியது. விழா தொடங்கிய நாளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவில் வளாகத்தில் தங்கியிருந்து விரதம் கடைப்பிடித்து வருகின்றனர். 6-ம் திருநாளான இன்று (சனிக்கிழமை) மாலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடக்கிறது. இதையொட்டி இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயராட்சை தீபாராதனை நடந்தது.

tcr-1

மாலை 4.30 மணிக்கு கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபதுமனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து சந்தோ‌ஷ மண்டபத்தில் சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி- அம்பாள் புஷ்ப சப்பரத்தில் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து, 108 மகாதேவர் சன்னதி முன்பு சாயாபிஷேகம் (கண்ணாடியில் தெரியும் சுவாமியின் பிம்பத்துக்கு அபிஷேகம்) நடக்கிறது. 7-ம் திருநாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவில் சுவாமி- தெய்வானை அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது.

tcr-4

சூரசம்ஹார விழாவையொட்டி, திருச்செந்தூரில் காவல்துறையினரின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன.  கந்தசஷ்டி விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூருக்கு வந்த வண்ணம் உள்ளனர். பக்தர்கள் கோவில் வளாகம், மண்டபங்கள், விடுதிகளில் தங்கியிருந்து வழிபடுகின்றனர். சூரசம்ஹாரம் நடைபெறும் கடற்கரை பகுதியில் நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பு கம்பு வேலிகள், கண்காணிப்பு உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னிஸ் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும், முதன்முறையாக திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்ச்சியில் பறக்கும் ஹெலி கேமரா மூலமும் கண்காணிக்கப்பட்டது.

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றத்தில் கந்த சஷ்டி விழாவையொட்டி இன்று மாலை 6 மணியளவில் சன்னதி தெருவில் உன்ன சொக்கநாதர் கோவில் முன்பாக “சூரசம்ஹாரம்’ நடக்கிறது. இதையொட்டி திரளான பக்தர்கள் கோவிலில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
வட பழனி

சென்னை வடபழனியில் உள்ள முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து கந்த சஷ்டி லட்சார்ச்சனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர், செயல் அலுவலர், தக்கார் ச.சிவக்குமார் மற்றும் கோவில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

இதே போல் சென்னை கந்தக்கோட்டத்தில் உள்ள முருகன் கோவிலில், திருத்தணி முருகன் கோவில், திருப்போரூர், வல்லக்கோட்டை, சிறுவாபுரி முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதே போல் சென்னை மேற்கு மாம்பலம் ஓம் முருகாஸ்ரமம் திருக்கோவிலில் கந்த சஷ்ட விழாவையொட்டி பால்குட ஊர்வலம் எடுத்துச் செல்லப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பால் காவடி மற்றும் புஷ்ப காவடி எடுத்து வந்து வழிபாடு நடத்தினர்.
இதே போல் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளிலும் மற்றும் தமிழகத்தில் உள்ள முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த பூஜையில் பக்தர்கள் குடும்பம் குடும்பமாக சென்று சாமி தரிசனம் செய்தனர்.