ஒரு வாரம் நடந்த இந்து ஆன்மிக சேவை கண்காட்சியை 10 லட்சம் பேர் பார்வையிட்டனர்

0

ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சியின் நிறைவு நாளான திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், இயற்கை வளம், விலங்குகள் பாதுகாப்புக்காக மாணவிகளுக்கு வழங்கப்பட்ட மரக்கன்றுகள்.

hindu anmeegam fair-3சென்னையில் ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் நடைபெற்று வந்த 8-ஆவது ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சி திங்கள்கிழமை (ஆகஸ்ட் 8) கோலாகலமாக நிறைவு பெற்றது.

மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரி மைதானத்தில் இந்தக் கண்காட்சியை ஆகஸ்ட் 2-இல் பதஞ்சலி யோகா பீடத்தின் நிறுவனர் பாபா ராம்தேவ் தொடக்கி வைத்தார். 8-ஆம் தேதி வரை 7 நாள்கள் நடைபெற்ற கண்காட்சியை சுமார் 10 லட்சம் பேர் பார்வையிட்டனர் என்று அதன் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

6 கருத்துகளை மையமாகக் கொண்டு…:இந்து ஆன்மிகத்தில் புதைந்துள்ள வனம், வனவிலங்குகளைப் பாதுகாத்தல், அனைத்து ஜீவராசிகளையும் பேணுதல், சுற்றுச் சூழலைப் பராமரித்தல், பெற்றோர்-ஆசிரியர்களை வணங்குதல், பெண்மையைப் போற்றுதல், நாட்டுப்பற்றை உணர்த்துதல் ஆகிய 6 கருத்துகளை மையமாகக் கொண்டு இந்தக் கண்காட்சி நடத்தப்பட்டது.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கருத்தை வலியுறுத்தி கன்யா வந்தனம், குரு வந்தனம், துளசி வந்தனம், பாரத மாதாவைப் போற்றுதல், பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களுக்கு ஆராதனை போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

வனம், விலங்குகளைப் பாதுகாக்க உறுதிமொழி: இறுதி நாளான திங்கள்கிழமை வனம், வன விலங்குகளைப் பாதுகாத்தல் என்ற கருத்தை முன்வைத்து விருக்ஷ வந்தனம், நாக வந்தனம் ஆகிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. விருட்ச வந்தன நிகழ்ச்சியில் பூவரச மரக்கன்றை பெண் குழந்தையாகப் பாவித்து அதற்கு ஆடை அணிவித்து பூஜை நடத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து, மாணவர்களுக்கு 3,000 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. மரக்கன்றுகளைப் பெற்றுக் கொண்ட மாணவர்கள், “இந்த மரக்கன்றைப் போலவே நாட்டின் வனங்களையும் பொறுப்புணர்வோடு பாதுகாப்போம்’ என உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

இதைத் தொடர்ந்து, நந்தலாலா சேவா சமிதி அறக்கட்டளையின் சார்பில் “இன்றைய நிலையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சாத்தியமா, சாத்தியமில்லையா?’ என்ற தலைப்பில் பட்டி மன்றம் நடைபெற்றது. டாக்டர் மஞ்சுளா தியாகராஜன் நடுவராகப் பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சி அறக்கட்டளையின் நிறுவனரும், தலைமை ஒருங்கிணைப்பாளருமான எஸ்.குருமூர்த்தி, கண்காட்சியின் அமைப்புக் குழுவின் துணைத் தலைவர் ஆர்.ராஜலட்சுமி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

7 நாள்கள் நடைபெற்ற கண்காட்சியில் சுமார் 10 லட்சம் பேர் கலந்துகொண்டு பார்வையிட்டதாக அதன் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

hindu anmeegam fair-2

ஹிந்து ஆன்மிக சேவைக் கண்காட்சியில் நடைபெற்ற இயற்கை வனம், விலங்குகள் பாதுகாப்பை வலியுறுத்தும் விருட்ச வந்தனம், நாக வந்தனத்தை தீபாராதனைக் காட்டி தொடங்கி வைத்த ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சித் தலைவர் எஸ். குருமூர்த்தி. உடன் (இடமிருந்து) ஜி.எம்.ஆர். குழுமத் தலைவர் பி.வி.என்.ராவ், டால்மியா சிமெண்ட் நிறுவன தலைவர் புனித்டால்மியா, டி.வி.எஸ். கேபிட்டல் தலைவர் கோபால் சீனிவாசன், சர்வதேச வள்ளலார் அறக்கட்டளை தலைவர் அருள்நந்திசிவம்.

கண்காட்சியின் சிறப்புகள்

ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சியையொட்டி கடந்த மாதம் 23-ஆம் தேதி 10,000 மாணவிகளுடன் பரத நாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமணியம், கர்நாடக இசைக் கலைஞர் அருணா சாய்ராம் ஆகியோர்

பங்கேற்ற இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

கடந்த 24-ஆம் தேதி மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் விவேகானந்தர் சிலையுடன் அலங்கரிக்கப் பட்ட 25 ரதங்களுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில்

உள்ள 1000-க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பள்ளிகளுக்குச் சென்றன.

இதேபோன்று 30-ஆம் தேதி மெரீனா கடற்கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விவேகானந்தர் போன்று

உடையணிந்த 20,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

இந்த பிரம்மாண்ட கண்காட்சியில் வாழும் கலை, ஈஷா மையம், பதஞ்சலி யோக பீடம், சங்கர மடம் உள்ளிட்ட பல்வேறு ஹிந்து அமைப்புகள், கோ மடங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கங்கள்

போன்றவை சார்பில் 370 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சி மற்றும் அதையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் மொத்தம் 388 அரசு, தனியார் பள்ளிகளிலிருந்து முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்கள் பங்கேற்றனர்.

கண்காட்சியையொட்டி, கடந்த ஜூலை மாதம் முதல் ஆன்மிகம், தனித்திறன், பாரம்பரிய விளையாட்டுகள், சுற்றுச்சூழல், இலக்கியம் உள்பட பல்வேறு பிரிவுகளில் 1,079 போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 1.2 லட்சம் மாணவர்கள் கலந்துகொண்டனர். மொத்தம் 28,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குபரிசுகள் வழங்கப்பட்டன.கண்காட்சி நடைபெற்ற 7 நாள்களில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் (ஆக.7) சுமார் 2.5 லட்சம் பேர் கலந்து கொண்டனர்.மொத்தம் 50,000 பேருக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டது.”துளசி வந்தனம்’ நிகழ்ச்சியில் 10,000 பேருக்கு இலவசமாக துளசிச் செடியும், “விருட்ச வந்தனம்’ நிகழ்ச்சியில் 3,000 பேருக்கு இலவசமாக பூவரசம் உள்ளிட்ட மரக்கன்றுகளும், ஆயிரக்கணக்கான மக்களுக்கு கங்கை நீரும் இலவசமாக விநியோகிக்கப்பட்டன.

கண்காட்சி குறித்து பார்வையாளர்கள் கருத்து

சீனு கிளமெண்ட், கல்லூரி மாணவர், திருவள்ளூர்: நான் கிறிஸ்துவ மதத்தைச் சார்ந்திருந்தாலும் எனது நண்பர்கள் கேட்டுக்கொண்டதால் இந்தக் கண்காட்சிக்கு வந்தேன். இங்கு அமைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான அரங்குகளைப் பார்வையிட்டபோதுதான் ஹிந்து மதம் எத்தகைய சிறப்பும், பெருமையும் வாய்ந்தது என்பதை உணர முடிந்தது. ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்கில் இடம்பெற்றிருந்த போதனைகள் என்னைப் பெரிதும் ஈர்த்தது.

ஜோதிலிங்கம், தொழிலாளி, மூலக்கடை, சென்னை: உழவாரப் பணிகள், இயற்கை உணவுகள் குறித்து அமைக்கப்பட்டிருந்த அரங்குகள் மூலம் பல்வேறு தகவல்களை அறிய முடிந்தது. ஹிந்து சமயத்தின் பாரம்பரியம், வழிபாட்டு முறைகள் குறித்து இதுவரை அறிந்திராத செய்திகளை இந்தக் கண்காட்சியின் மூலம் தெரிந்துகொண்டேன்.

அட்சயா, இல்லத்தரசி, தாம்பரம்: ஆன்மிகச் சிந்தனைகளை போதிக்கும் அரங்குகளால் மனதில் அமைதி நிலவியது. விவேகானந்தரின் பொன்மொழிகள், சடங்குகள் மேற்கொள்வதன் அவசியம் ஆகியவை உள்பட எந்த மாதிரியான வாழ்க்கையை நாம் வாழ வேண்டும் என்பதை ஒவ்வொரு அரங்கும் உணர்த்தியது.

ஆர்.சரண், கல்லூரி மாணவர், மாதவரம்: இந்தியாவில் உள்ள புகழ் பெற்ற கோயில்கள், கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்கள், ஆன்மிகம் குறித்து பல்வேறு மொழிகளில் வெளியான நூல்கள், யோகாவின் சிறப்புகள் என ஒவ்வொரு அரங்கிலும் பயனுள்ள தகவல்கள் இடம்பெற்றிருந்தன. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள கண்காட்சியில் ஹிந்து மதம் குறித்து தீவிர ஆராய்ச்சியில் ஈடுபடும் அறிஞர்களை இடம்பெறச் செய்தால் என்னைப் போன்ற இளைஞர்கள் அவர்களுடன் கலந்துரையாட ஏதுவாக இருக்கும். அமைதியையும், ஒற்றுமையையும் நிலைநாட்ட ஆன்மிகத்தால் மட்டுமே முடியும்.

முத்துக்குமார பாண்டியன், உசிலம்பட்டி: கடந்த பல நூற்றாண்டுகளாக உசிலம்பட்டி கருமாத்தூரில் பிறமலைக் கள்ளர் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் கழுவநாதர், விருமாண்டி, பேச்சி உள்ளிட்ட தெய்வங்களை வழிபட்டனர். அப்போதைய காலகட்டத்தில் ஊர்ப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக 8 நாடுகளாக வகுக்கப்பட்ட கிராமங்களுக்கு 6 பேர் ஊர்த் தலைவர்களாக இருந்தனர். எங்கள் முன்னோரின் சிறப்புகள் குறித்து இதுவரை அறியப்படாத செய்திகளை இந்தக் கண்காட்சியின் மூலம் வெளிப்படுத்தி வருகிறோம். இங்குள்ள புகைப்படங்களையும், சிலைகளையும் பொதுமக்கள் வழிபாடு செய்ததுடன், செல்லிடப்பேசிகளில் புகைப்படம் எடுத்துச் சென்றனர்.

ரவிராஜ், நிவாஷ், ஹிந்து ஒருங்கிணைப்பு மேம்பாட்டு இயக்கம்: இறைவன் நாமத்தைக் கூறி மானசீகமாக பூஜை செய்தால் பலன் கிடைக்கும் என்பது நமது மரபு. இதனால் எங்கள் அமைப்பின் சார்பில், என்னென்ன மந்திரங்களை உச்சரிக்க வேண்டும் என்ற தகவல்கள் அடங்கிய ஸ்டிக்கர்களை தமிழகத்தில் உள்ள வீடுகளின் கதவுகள், ஆட்டோக்களில் இலவசமாக ஒட்டி வருகிறோம். இதுவரை எங்கள் இயக்கத்தைச் சேர்ந்த 300 தன்னார்வலர்கள் 15 லட்சம் ஸ்டிக்கர்களை இவ்வாறு ஒட்டியுள்ளோம். கடந்த 7 நாள்களாக நடைபெற்ற கண்காட்சியில் எங்கள் அரங்கத்தை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பார்வையிட்டு மந்திரங்கள் குறித்துக் கேட்டறிந்தனர்.