ஐயப்பன் பிரம்மச்சாரிதான்; ஆனால் பெண்களை வெறுப்பவர் அல்ல

0

சபரிமலையில் உள்ள ஐயப்பன் நிரந்தர பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிப்பவர்தான்; அதற்காக அவர் பெண்களை வெறுப்பவர் என்று அர்த்தம் இல்லை என கேரள மாநில பாஜக பொதுச் செயலாளர் கே.சுரேந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.

10 முதல் 50 வயதுக்குள்பட்ட, அதாவது மாதவிடாய் காலத்துக்குள்பட்ட பெண்களுக்கு சபரிமலை ஐயப்பன் கோயிலினுள் சென்று வழிபடுவதற்கு காலங்காலமாக அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

கடவுளின் முன்பு ஆண், பெண் பாகுபாடு கூடாது என்றும் மாதவிடாய் பருவத்து பெண்களையும் கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்றும் கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது.

IYAPPAN-1

பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் மரபு என்பதால் மாதவிடாய் பருவத்து பெண்களை அனுமதிப்பதில்லை என்பதில் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு உறுதியாக உள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவும், பலர் எதிர்ப்பும் தெரிவித்து வரும் நிலையில், அனைத்து வயது பெண்களையும் கோயிலினுள் அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு கேரள மாநில பாஜக பொதுச் செயலாளர் கே.சுரேந்திரன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் முகநூலில் வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:

ஐயப்பன் பிரம்மச்சாரி என்பதால் அவர் பெண்களுக்கு எதிரானவர் என்று அர்த்தம் அல்ல. சபரிமலையில் அவருக்குப் பக்கத்தில் மாளிகைபுரத்து அம்மனுக்கு ஐயப்பன் இடம் கொடுத்திருக்கும் உண்மையை நாம் மறந்து விடக் கூடாது.

பெண்களுக்கு மாதவிடாய் என்பது இயற்கையான விஷயமாகும். மனித இனம் உயிர் வாழ்வதற்கு அதுதான் காரணம் என்பதை மறுக்க முடியுமா?

அதேபோல் நவம்பர் முதல் ஜனவரி வரை, சபரிமலை ஐயப்பன் தரிசனத்துக்கு வருகை தரும் பக்தர்களின் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில், கோயில் நடை ஆண்டு முழுவதும் திறந்திருக்க வேண்டும் என்று சுரேந்திரன் தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

நடைத் திறப்பு குறித்து இதே கோரிக்கையை முதல்வர் பினராயி விஜயன் அண்மையில் எழுப்பினார். அதற்கு திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.