ஏழை மாணவர்களின் படிப்புக்கு உதவ முன்வந்த விஷால்

0

நல்ல மதிப்பெண்கள் எடுத்தும் வசதி இல்லாத காரணத்தினால் நல்ல கல்லூரியில் சேர்ந்து படிக்க முடியாத நிலைமை இன்று தமிழகத்தில் நிறைய மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமையை உணர்ந்த சில நடிகர்கள் சொந்தமாக அறக்கட்டளை தொடங்கி, அவர்களின் படிப்புக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறன்றனர்.

சூர்யா, ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட சில நடிகர்கள் நலிவடைந்த மாணவர்களின் கல்விக்கு உதவி செய்து வருகின்றனர். அந்த வரிசையில் நடிகர் விஷால், தற்போது வெளிவந்துள்ள பிளஸ்-2 தேர்வு முடிவுகளில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தும், பணம் இல்லாத சூழ்நிலையில் நல்ல கல்லூரியில் சேர முடியாத மாணவ, மாணவிகளுக்கு பணஉதவி செய்து அவர்களின் படிப்புக்கு உதவி செய்ய முன்வந்துள்ளார்.

விஷால் தனது அம்மா பெயரில் தொடங்கியுள்ள தேவி அறக்கட்டளை மூலமாக இந்த உதவியை செய்யவுள்ளார். யாராவது தங்கள் பகுதிகளில் இதுபோன்று மேல்படிப்புக்கு கஷ்டப்படும் மாணவர்கள் பற்றிய விவரங்களை விஷாலுக்கு தெரியப்படுத்தினால், அவர் அந்த மாணவர்கள் பற்றிய விவரங்களை கேட்டறிந்து, அவர்களுக்கு உதவுவார். மேலும், விவரங்கள் அறிந்துகொள்ள 8754009846 என்ற எண்ணுக்கு தொடர்புகொண்டு பேசலாம்.

விஷால் தற்போது மதுரவாயல் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து நல்ல மதிப்பெண்களை பெற்ற 16 மாணவ, மாணவிகளின் படிப்புக்கு உதவி செய்ய முன்வந்துள்ளார். அவர்கள் பற்றிய விவரம் வருமாறு: பத்மபிரியா 1137/1200, புவனேஸ்வரி 1128/1200, சக்தி 1082/1200, கோபிநாத் 1068/1200, பிரகதி 1044/1200, கங்காதேவி 1039/1200, ரியாஸ் அகமது 1027/1200, மனிஷா 1016/1200, மனோ 1010/1200, ஏ.பிரியா 966/1200, எஸ்.பிரியா 923/1200, உமா மகேஷ் 994/1200, பூவிழி கண்ணை 956/1200, மாரிமுத்து 971/1200, நவீன்குமார் 979/1200, அமரா 951/1200.