என்னுடைய நேர்மையைக் காப்பாற்றுவதற்காகத் தேர்தலில் நிற்கிறேன்: விஷால்

0

என்னுடைய நேர்மையைக் காப்பாற்றுவதற்காகத் தேர்தலில் நிற்கிறேன்: விஷால்

பொதுச்சொத்தைக் காப்பாற்ற வேண்டும். எனவே, நடிகர் சங்கத் தேர்தலில் இருந்து பின்வாங்க மாட்டேன் என உறுதியுடன் தெரிவித்துள்ளார் விஷால்.

2019 – 2022 ஆம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல், வருகிற 23-ம் தேதி நடைபெற உள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன், தேர்தல் அதிகாரியாக இருந்து இந்தத் தேர்தலை நடத்துகிறார்.

விஷால் தலைமையிலான ‘பாண்டவர் அணி’யில் தலைவர் பதவிக்கு நாசரும், பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலும், பொருளாளர் பதவிக்கு கார்த்தியும், துணைத் தலைவர்கள் பதவிக்கு கருணாஸ் மற்றும் பூச்சி முருகனும் போட்டியிடுகின்றனர்.

‘பாண்டவர் அணி’யை எதிர்த்து தலைவர் பதவிக்கு இயக்குநர் கே.பாக்யராஜ் போட்டியிடுகிறார். செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷும், துணைத் தலைவர் பதவிக்கு குட்டி பத்மினி, உதயா ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், விஷால் உள்ளிட்ட ‘பாண்டவர் அணி’யினர், இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த விஷால், “கடந்த முறை போட்டியிட்ட அதே ‘பாண்டவர் அணி’, இம்முறையும் போட்டியிடுகிறது. கடந்த தேர்தலில் நாங்கள் என்னவெல்லாம் சொன்னோம், என்னவெல்லாம் செய்தோம், சொன்னதற்கு மேலும் என்னென்ன செய்தோம். இன்னும் 6 மாதங்களுக்குள் திறப்பு விழா காணக்கூடிய அளவுக்கு கட்டிட வேலைகள் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன. இந்தத் தேர்தலில் ஏன் எதிரணி? என்ற கேள்வி எழும். இந்தக் கட்டிடம் கட்டுவதைத் தடுக்க யாராக இருந்தாலும் முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர், செய்வார்கள். கட்டிடம் கட்டுவதைத் தடுப்பதாக இருந்தால், எக்காரணம் கொண்டும் ஒப்புக்கொள்ள மாட்டோம்.
எங்களுடைய நேர்மை, உழைப்பு பற்றிய கேள்விகளுக்கு, இந்தத் தேர்தலில் நாங்கள் பதில் சொல்வோம். இந்தக் கட்டிடம் கண்டிப்பாக வரவேண்டும். யாரும் அதற்குத் தடையாக இருக்கக் கூடாது. இந்தக் கட்டிடம் மூலம் வருகிற நிதியை, நடிகர் சங்க உறுப்பினர்களின் கல்வி, மருத்துவம் மற்றும் ஓய்வூதியத்தொகை என எல்லாவற்றையும் உயர்த்துவோம். குறிப்பாக, நாடக நடிகர்களின் நலன் பேணப்படும்.

நீதிமன்றத்துக்குச் சென்று கட்டிடத்தைத் தடுப்பது எஸ்.வி.சேகர் என்பது ஊர் உலகத்துக்கே தெரியும். கட்டிடம் கட்டவிடாமல் தடுக்க இன்னும் முயற்சி செய்து கொண்டிருக்கிறார். தடை விதிக்கப்படாமல் நீதிமன்றத்தில் நாங்கள் நியாயமாகத் தீர்ப்பு வாங்கினோம். அந்தக் காலதாமதத்தில், 4 மாதங்களுக்கு கட்டிடப் பணிகள் நடைபெறவில்லை. அதுமட்டும் நடக்கவில்லையென்றால், இந்நேரம் கட்டிட வேலை முடிந்திருக்கும். அந்தக் கட்டிடத்தில் தேர்தலை நடத்தலாம் என்றுதான் முன்னர் நினைத்திருந்தோம்.
இந்தத் தேர்தலில் இரண்டு அணிகளாகப் போட்டியிடுவோம் என்று எதிர்பார்த்தோம். ஆனால், உடன் இருந்தவர்கள் எதிர் அணியில் நிற்பது ஆச்சரியமாக இருந்தது. நாங்கள் அவர்களை மதிக்கிறோம். அவர்கள் ஏன் எதிரணிக்கு மாறினர் என்ற விஷயத்தை அவர்களிடம்தான் கேட்க வேண்டும். அவர்கள் எங்களுடன் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில்தான் பட்டியலில் பெயரை எழுதினோம். ஆனால், அதில் அவர்களுக்கு உடன்பாடு இல்லை எனும்போது, ஏன் என்று கேட்கக்கூடாது. யார் யார் எங்கிருக்க வேண்டும் என்பது அவரவர்களின் விருப்பம்” என்றார்.

‘இந்தத் தேர்தலே நடக்காது என எஸ்.வி.சேகர் கூறியுள்ளாரே…’ என்ற கேள்விக்குப் பதிலளித்த விஷால், “தேர்தல் நடக்காது என்றால், சென்னையில் முழு அடைப்பா? நீதிபதிதான் இதுகுறித்து முடிவெடுக்க முடியுமே தவிர, எஸ்.வி.சேகர் எடுக்க முடியாது. அது அவருடைய தனிப்பட்ட கருத்து. யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். நான் அதையெல்லாம் ஒரு பொருட்டாக நினைப்பதில்லை” என்றார்.
‘ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டி இந்தத் தேர்தலை சந்திக்கிறீர்கள் என்று சொல்லலாமா?’ என்ற கேள்விக்கு, “எனக்கு என்ன சந்தோஷம் என்றால், இங்குள்ள யாருமே அவர்கள் கட்சி சார்ந்த கொடியையோ, உடையையோ பயன்படுத்தவில்லை. கட்டிடம் என்று வரும்போது, நாங்கள் வேலைசெய்யப் போவது கட்சி ரீதியாக இல்லை. ‘நானும் ஒரு நடிகன்/நடிகை’ என மனசார வேலைசெய்யப் போகிறோம். கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளில், நடிகர் சங்கக் கட்டிடம் தவிர்த்து மற்ற அனைத்தையும் நிறைவேற்றி விட்டோம்” என்று பதில் அளித்தார் விஷால்.

‘நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பாக உங்களுக்கு மிரட்டல் வந்ததாமே…’ என்ற கேள்விக்குப் பதில் அளித்த விஷால், “மிரட்டல் எனக்குப் புதிதல்ல. நான் குடியிருக்கும் வீட்டின் அசோசியேஷன் தேர்தலில் நின்றால் கூட எனக்கு மிரட்டல் வரும். அந்த மாதிரி ஆகிவிட்டது” என்றார்.
‘உங்களுக்கு எதிராகப் போட்டியிடும் ஐசரி கணேஷைச் சந்திப்பில் நடந்தது என்ன?’ என்ற கேள்விக்கு, “ஐசரி கணேஷைச் சந்தித்து, நான் என்ன காரணத்துக்காகத் தேர்தலில் நிற்கிறேன் என்று சொன்னேன். அவர் என்ன காரணத்துக்காக நிற்கிறார் என்றும் கேட்டேன். இரண்டு காரணங்களும் வெவ்வேறாக இருந்தன. அந்த சமயத்தில், ‘சார் இது தேர்தல். இதற்கு மேல் நாம் பேசக்கூடாது. நாம் எல்லோரும் குடும்ப நண்பர்கள். ஆனால், தேர்தல் என்று வரும்போது போட்டி இருக்கத்தான் செய்யும்.

என்னைப் பொறுத்தவரை, என்னைச் சார்ந்த பொதுச்சொத்தைக் காப்பாற்றுவதற்கு, என்னுடைய நேர்மையைக் காப்பாற்றுவதற்காகத் தேர்தலில் நிற்கிறேன். அவர் தேர்தலில் நிற்பதற்கான காரணத்தை நான் சொல்லக்கூடாது. இது தேர்தல் நேரம். இரண்டு ஓட்டுகள் கூடுதலாக வாங்குவதற்காக அவரை கொச்சைப்படுத்தக் கூடாது. தேர்தலை முன்னிட்டு முதல்வர் மற்றும் துணை முதல்வரிடம் ஆசி பெறுவதற்காக சந்திக்க நேரம் கேட்கப் போகிறோம். கூடிய விரைவில் கட்டிடம் தயாராகப் போகிறது. அதன் திறப்பு விழா உள்ளிட்ட விவரங்களை முன்கூட்டியே சொல்லிவிடுவோம். ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன். இது, பொதுச்சொத்தைக் காப்பாற்றுவதற்காக மேற்கொண்ட ஒரு முயற்சி. இதில் நான் பின்வாங்க மாட்டேன்” எனத் தெரிவித்தார் விஷால்.

On behalf of ‘Pandavar Ani’ actors and actress filed their nomination papers to Mr.Mohan, Asst. Election Officer, South India Artistes Association(Nadigar Sangam).

Below mentioned are the list of person who have filed their nomination papers today:

Gen.Secretary VISHAL, Vice-President POOCHI MURUGAN,  KARUNAS and 19 EC members
KUSHBOO, KOVAI SARALA, S.D.NANDHAA, PASUPATHI, HEMACHANDRAN, RAMANA, SONIYA, MANOBALA, VASUDEVAN, S.M.KALIMUTH, RATHNAPPA, JEROLD, JUNIOR BALAIYYA, LATHA SABHAPATHI, RAJESH, THALAPATHI DINESH, VIKKINESH, M.A.PRAKASH and SARAVANAN