ஊரடங்கு தேவை இல்லை: மருத்துவகுழு பரிந்துரை

0

ஊரடங்கு தேவை இல்லை: மருத்துவகுழு பரிந்துரை

எடப்பாடி பழனிசாமியுடன் இன்று மருத்துவ குழுவினர் ஆலோசனை

சென்னை, ஜூன் 29–

தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த தற்போது ஊரடங்கை நீட்டிக்குமாறு பரிந்துரை செய்யவில்லை என்று மருத்துவக் குழு விளக்கம் அளித்துள்ளது.

அமெரிக்காவில் இருந்து மருந்துகள் வந்துள்ளது. அந்த மருந்துகள் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது. அதேபோன்று கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் ஒரே மாதிரியான சிகிச்சை முறை கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் மருத்துவ குழுவினர் தெரிவித்தனர்.

நோய் பாதிப்பு அதிகரித்து வருவதை கண்டு யாரும் அச்சப்பட தேவை இல்லை. நோய் அறிகுறி இருப்பது தெரிய வந்தால் உடனே சென்று பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கூறினார்கள்.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசு உரிய நடவடிக்கை எடுப்பதற்கு, தேவையான ஆலோசனை மற்றும் பரிந்துரைகளை வழங்கும் வகையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் துணை இயக்குனர் பிரதீப் கவுர் தலைமையில் 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழு, தாங்கள் செய்த ஆய்வுகளின் அடிப்படையிலான முடிவுகளை, முதல் அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி அடுத்து செய்யவேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆய்வறிக்கையை அளித்து வருகிறது. அதன் அடிப்படையில் தமிழக அரசு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தமிழகத்தில் தற்போது 5-–ம் கட்ட ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர், மதுரை உள்ளிட்ட சில முக்கிய மாவட்டங்களிலும் ஊரடங்குக்குள் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு நாளை (செவ்வாய்க்கிழமை) நிறைவடைய உள்ளது. இந்த நிலையில் முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் இன்று ஆலோசனை நடத்தினார். சென்னையில் உள்ள தலைமைச்செயலகத்தில் காலை 10 மணிக்கு நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், மருத்துவ நிபுணர்கள் குழுவினர் தங்கள் ஆலோசனைகளை, எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் முக்கிய முடிவுகளை அனேகமாக இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் என்று தெரிகிறது.

முதலமைச்சருடன் ஆலோசனை நடத்திய பின்னர் மருத்துவக்குழுவினர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர் அப்போது அவர்கள் கூறியதாவது:–

கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு ஏழாவது முறையாக தமிழக முதல்வர் பழனிசாமியுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எங்கள் தரப்பில் சில பரிந்துரைகளை முன் வைத்துள்ளோம்.

தற்போது சென்னையில் நாள் ஒன்றுக்கு கொரோனா பரிசோதனை 10 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு கொரோனா பரிசோதனை 32 ஆயிரத்துக்கும் மேல் உள்ளது. அதிக அளவில் பரிசோதனை நடத்தினால் தான் நோயை கண்டுபிடித்து விரைவில் குணப்படுத்த முடியும்.

கொரோனாவைக் கட்டுப்படுத்த மேலும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரைக்கவில்லை. கொரோனாவுக்கு ஊரடங்கே தீர்வல்ல.

சென்னையைப் போலவே பிற மாவட்டங்களிலும் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளோம். திருச்சி, மதுரை, வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. எனவே பரிசோதனையை அதிகரிக்க வேண்டும்.

காய்ச்சல், சளி, இருமல், மூச்சு திணறல், தொண்டை வலி, வாசனை அறியாமை, நாவில் சுவை தெரியாமல் இருந்தால் உடனடியாக சென்று பரிசோதனை செய்ய வேண்டும். வீடு வீடாக சென்று சோதனை செய்ய வருகிறார்கள். அவர்களிடம் இதனை சொல்லி பரிசோதனை செய்து கொள்ளலாம்.

பயம் தேவை இல்லை

பாதிப்பு எண்ணிக்கை அதிகம் என்பதால் யாரும் அச்சப்பட தேவை இல்லை. பரிசோதனையில் அதிக அளவு நோய் கண்டுபிடித்திருக்கிறோம். எனவே மக்களின் ஒத்துழைப்பு மிக மிக அவசியம்.

ஆரம்பத்திலேயே இந்த நோயை கண்டுபிடித்து சிகிச்சை அளித்தால் இறப்பை குறைக்கலாம். சீக்கிரமாக மருத்துவமனை வந்தால் இறப்பு குறையும்.

ஊரடங்கு நீடிப்பு தேவை இல்லை

ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று நாங்கள் பரிந்துரை செய்யவில்லை. இது சரியான தீர்வு அல்ல. எப்போதுமே ஊரடங்கை அமுல்படுத்தி கொண்டிருக்க முடியாது. உலக சுகாதார நிறுவனம் மற்றும் மருத்துவ குழுவினர் சொல்லும் பரிந்துரைகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்.

சென்னையில் ஊரடங்கால் நோய் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

பஸ் போக்குவரத்தால் தொற்று அதிகமாகி உள்ளது. இதனை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். எங்கும் கூட்டம் சேர விடக்கூடாது.

கொரோனாவை கண்டு மக்கள் பயப்படுகிறார்கள். அச்சப்பட தேவை இல்லை. 80 சதவிகிதத்திற்கு மேல் லேசான அறிகுறி தான் தெரியும். எனவே உடனே சிகிச்சை பெற்று தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். பரிசோதனை செய்ய தாமதம் செய்தால் இது பரவும்.

ஆக்சிஜன் அளவு 94 சதவிகித்துக்கும் குறைவாக இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று மருத்துவ குழுவினர் கூறினார்கள்.

கோடாரி எடுத்து கொசுவை ஒழிப்பது போல

முழு ஊரடங்கு எந்த அளவு பலன் தந்திருக்கிறது என்று நிருபர்கள் கேட்டனர்.

ஊரடங்கு என்பது கோடாரியை எடுத்து கொசுவை ஒழிப்பது போல் ஆகும். முழு ஊரடங்கில் பயன் இருந்தாலும் 6 மாதம் நீடித்து கொண்டே இருக்க முடியும்? எனவே வேறு யுக்தியை கையாள வேண்டும் என்று சொல்லி இருக்கிறோம். சமூக பொருளாதாரத்தையும் பார்க்க வேண்டும். எனவே ஊரடங்கு நீட்டிப்பு என்பது சரியாக இருக்காது. மக்களிடம் நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தமிழகம் முழுவதும் 75 ஆயிரம் படுக்கைகள் உள்ளன.

சர்க்கரை நோய், அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தான் அதிகம் மரணம் அடைகிறார்கள் என்று மருத்துவ குழுவினர் கூறினார்கள்.

பாதிப்பு அதிகம் ஏன்?

ஊரடங்கு இருந்த போதிலும் பாதிப்பு எண்ணிக்கை அதிகம் இருப்பது ஏன் என்று நிருபர்கள் கேட்டனர்.

பரிசோதனைகள் அதிகம் செய்யப்படுவதால் தான் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக வருகிறது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் இறப்பு விகிதம் குறைவு. தமிழ்நாட்டில் தான் அதிக அளவு பரிசோதனை செய்கிறோம்.

அமெரிக்க மருந்துகள்

கொரோனா சிகிச்சைக்கு அமெரிக்காவில் இருந்து மருந்துகள் வந்துள்ளது. இது அனைத்து மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் மருத்துவ குழுவினர் தெரிவித்தனர்.

எடப்பாடி முடிவு அறிவிப்பார்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்திய மருத்துவ குழுவினர் பல்வேறு ஆலோசனை பரிந்துரைகளை வழங்கி இருக்கிறார்கள்.

இதன் அடிப்படையில் முதலமைச்சர் இன்று அல்லது நாளை ஊரடங்கு பற்றி அறிவிப்பார் என்று தெரிகிறது.

5-ம் கட்ட ஊரடங்கு நாளையுடன் நிறைவு

கொரோனா பரவுவதை தடுக்க தமிழகத்தில் 5 கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

முதல் கட்ட ஊரடங்கு மார்ச் 25ந்தேதி முதல் ஏப்ரல் 14ந்தேதி வரை (21 நாட்கள்).

2ம் கட்ட ஊரடங்கு ஏப்ரல் 15ந்தேதி முதல் மே 3ந்தேதி வரை (19 நாட்கள்).

3ம் கட்ட ஊரடங்கு மே 4ந்தேதி முதல் மே 17ந்தேதி வரை (14 நாட்கள்).

4ம் கட்ட ஊரடங்கு மே 18ந்தேதி முதல் மே 31ந்தேதி வரை (14 நாட்கள்).

5ம் கட்ட ஊரடங்கு ஜூன் 1ந்தேதி முதல் 30ந்தேதி வரை (31 நாட்கள்)

ஊரடங்குக்குள் ஊரடங்காக ஜூன் 19ந்தேதி முதல் 30ந்தேதி வரை (12 நாட்கள்) (சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள்). ஜூன் 24ந்தேதி முதல் 30-ந்தேதி வரை ( 7 நாட்கள்) (மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்).