“உள்ளாட்சி அமைப்புகள் தான் மக்களாட்சியின் உயிர்நாடி.. மறந்துவிட வேண்டாம்”: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

0
121

“உள்ளாட்சி அமைப்புகள் தான் மக்களாட்சியின் உயிர்நாடி.. மறந்துவிட வேண்டாம்”: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நாமக்கல், தேசிய நெடுஞ்சாலை, பொம்மகுட்டையில் ‘நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது.

இம்மாநாட்டில் மாவட்ட செயலாளர்கள், மாநில அமைச்சர்கள், தி.மு.க நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள், நகர்ப்புற உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

மேலும் மாநாட்டைத் துவங்கி வைத்து பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை உரையாற்றினார். அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “இத்தகைய பொறுப்புக்கு பெண்களாகிய நீங்கள் வந்திருப்பீர்கள் என்பதை அறிவேன்.

எவ்வளவு கவனத்தோடு உழைத்து – இந்தப் பொறுப்புகளுக்கு நீங்கள் வந்தீர்களோ – அதே கவனத்தோடு நீங்கள் இந்தப் பொறுப்பையும் கவனிக்க வேண்டும் என்பதற்காகத் தான் உங்களை எல்லாம் இங்கே அழைத்திருக்கிறோம். நீங்கள் அமர்ந்திருக்கும் பொறுப்பு என்பது சாதாரணப் பொறுப்பு அல்ல.

அமைச்சர்களைப் போல- நாடாளுமன்ற உறுப்பினர்களைப் போல- சட்டமன்ற உறுப்பினர்களைப் போல – உயர்ந்த பொறுப்பா இது என்று நீங்கள் நினைக்கலாம். உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் தானே என்று நினைக்கலாம். உள்ளாட்சி அமைப்புகள் தான் மக்களாட்சியின் உயிர்நாடி என்பதை நீங்கள் மறந்துவிட வேண்டாம்.

* உலகச் சிந்தனையாளர்களில் ஒருவராகப் போற்றப்படும் தந்தை பெரியார் அவர்கள் – ஈரோடு நகராட்சித் தலைவராகத் தான் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார்.

*இந்தியாவின் மிக உயர்ந்த பதவிகளை எல்லாம் வகித்த மூதறிஞர் ராஜாஜி அவர்கள் சேலம் நகராட்சித் தலைவராகத் தான் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்து நல்ல பல திட்டங்களை உருவாக்கிக் கொடுத்த பெருந்தலைவர் காமராசர் அவர்கள் விருதுநகர் நகராட்சித் தலைவராகத் தான் முதலில் பொறுப்பு வகித்தார்.

* இந்த நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய பேரறிஞர் அண்ணா அவர்கள் முதன்முதலாக சென்னை மாநகராட்சி வார்டு தேர்தலில் தான் போட்டியிட்டார்.

* இன்றைக்கு முதலமைச்சராக உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கும் நான் சென்னை மாநகராட்சி மேயராகத்தான் முதலில் பொறுப்பு வகித்தேன்.

* உங்களுக்கு அமைச்சராக இருக்கிறாரே கே.என்.நேரு அவரும் லால்குடியில் நகராட்சித் தலைவராக இருந்தவர் தான். இதை எல்லாம் சொல்வதற்குக் காரணம் மக்கள் பணியில் முதல் படி என்பது உள்ளாட்சி அமைப்புகள் தான்.

இந்த உள்ளாட்சி அமைப்புகள் மூலமாகத் தான் மக்களுக்கு நேரடியாகத் தொண்டாற்றுவதற்கான பயிற்சியைப் பெற முடியும்.

அந்த வகையில் மக்களுக்குத் தொண்டாற்றுவதற்கான- மக்கள் தொண்டுக்கு பயிற்சி பெறுவதற்கான வாய்ப்பு உங்களுக்கு கிடைத்துள்ளது. அதற்கான பயிற்சிப் பாசறையைத் தான் நாமக்கல்லில் நடத்திக் கொண்டு இருக்கிறோம் நாமக்கல்லில் நடத்திக் கொண்டு இருக்கிறோம்.

கழகத்தைப் பொறுத்தவரை நின்றால் மாநாடு- நடந்தால் ஊர்வலம் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த வகையில் இதனை மாபெரும் மாநாடாக நகர்ப்புற நிர்வாகத்துறை அமைச்சர் சகோதரர் நேருவும் – மாவட்டக் கழகச் செயலாளர் தம்பி ராஜேஸ்குமாரும் ஏற்பாடு செய்துள்ளார்கள்.

தான் மட்டும் வெற்றி பெற வேண்டும் என்று இல்லாமல் – தன்னைப் போலவே மற்றவர்களும் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர் நேரு. அதனால் தான் இந்த மாநாடு வெற்றி மாநாடாக அமைவதற்கு அனைத்து வகையிலும் உழைத்து – ராஜேஸ்குமாரையும் சேர்த்து வெற்றி பெற வைத்துவிட்டார்.

இந்த மாநாட்டை எங்கு நடத்தலாம் என்று முடிவெடுத்தபோது- புதிதாக ஒருவருக்கு இந்த வாய்ப்பை வழங்க வேண்டும் என்று நினைத்தோம். நான் வைத்த தேர்வில் ராஜேஸ்குமார் பாஸ் ஆகிவிட்டார் என்பதை இந்த மாநாட்டில் உங்கள் அனைவரையும் சாட்சியாக வைத்து அறிவிக்கிறேன். முதல் மதிப்பெண் வாங்கிவிட்டார் ராஜேஸ்குமார். கே.என். நேரு போன்றவர்கள் ஒலிம்பிக்கை வென்றவர்கள். அதனால் அதைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை.

ராஜேஸ்குமார், ஸ்டேட் ப்ளேயராக வெற்றி பெற்றுவிட்டார். நேரு அவர்களின் வழிகாட்டுதல் இருந்தாலும் – முழுமையாக தன்னை ஒப்படைத்துக் கொண்டு ராஜேஸ்குமார் ஆற்றிய பணிகளை பாராட்டுகிறேன். ராஜேஸ்குமாரை பாராட்டுகிறேன் என்றால் அவருக்கு தோளோடு தோள் கொடுத்து உழைத்த அனைவரையும் பாராட்டுவதாகத் தான் அர்த்தம். அந்த வகையில் நாமக்கல் மாவட்ட நிர்வாகிகள் அனைவரையும் வாழ்த்துவதற்குக் கடமைப்பட்டிருக்கிறேன்.

வரலாற்றுப் புகழ் பெற்ற நாமக்கல் நகரத்தில் இந்த மாநாடு நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. எல்லா வளங்களும் எல்லா மாவட்டத்திற்கும் அமைவது இல்லை. அந்த வகையில் அனைத்து வளங்களையும் கொண்ட மாவட்டம் இது. இயற்கை வளமா? கிழக்குத் தொடர்ச்சி மலையில் கொல்லிமலைக்கு அருகில் இருக்கிறது! வரலாற்றுப் பெருமையா? ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக திப்புசுல்தான் போராடிய ஊர்!

தொழில் வளர்ச்சியா? இந்தியாவிலேயே தலைசிறந்த லாரி கட்டுமானம் முதல் கோழிமுட்டை தயாரிப்பு வரைக்கும் பேர் பெற்றது! விவசாயமா? சோளம், மரவள்ளிக்கிழங்கி, எள், கரும்பு, நெல்,வாழை, வெற்றிலை, பாக்கு, மக்காச்சோளம், துவரை, உளுந்து, ஆமணக்கு, தட்டைப்பயிறு, பருத்தி, நிலக்கடலை… என இங்கு விளையாத விளைபொருளே இல்லை! பிரமாண்டமா? இந்தியாவை வாரணாசியுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை -7 நாமக்கல் வழியாகச் செல்கிறது!

கல்வியா? நாமக்கல் பள்ளியை நோக்கி எல்லாப் பிள்ளைகளும் படிக்க வருகிறார்கள்! இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் இந்த நாமக்க்கல்லின் சிறப்பை! இத்தகைய சிறப்பு மிகு ஊரில் இந்த மாநாடு நடக்கிறது. இத்தகைய சிறப்புகள் கொண்ட பகுதியாக ஒவ்வொருவரும் தங்கள் பகுதியை மாற்றிக் காட்ட வேண்டும்.

ஒன்றிருந்தால் ஒன்று இல்லை என்பதாக இல்லாமல் – அனைத்தும் இருக்கும் ஊர்களாக தமிழ்நாட்டின் அனைத்து ஊர்களும் மாற வேண்டும். வளர வேண்டும். அது உங்கள் கையில் தான் இருக்கிறது. நாமக்கல் என்றாலே நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அவர்களது நினைவு தான் அனைவருக்கும் வரும்.

‘தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கோர் குணமுண்டு’ என்று பாடிய தமிழினக் கவிஞர் அவர். ‘கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது’ என்று பாடிய காந்தியக் கவிஞர் அவர். காங்கிரசு ஆட்சியில் மேலவை உறுப்பினராகவும் அரசவைக் கவிஞராகவும் அவர் இருந்தார். நாமக்கல் கவிஞருக்கும் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களுக்கு நல்ல நட்பு இருந்தது.

கலைஞர் அவர்கள் முதல் முறை முதல்வர் ஆனபோது நாமக்கல் கவிஞருக்கு மாதம் தோறும் அரசு நிதியை வழங்குவது என்று முடிவெடுத்து அறிவித்தார்கள். அப்போது முதல்வர் கலைஞருக்கு நாமக்கல் கவிஞர் அவர்கள் ஒரு கடிதம் அனுப்பினார்கள்.

அதில், ” நீங்கள் பெயரளவில் மட்டுமல்ல செயலிலும் கருணையின் நிதியே. தாங்கள் முதலமைச்சரானது முதல் கருணைமிக்க காரியங்களையே செய்திருக்கிறீர்கள்” என்று குறிப்பிட்டார்.” எனத் தெரிவித்துள்ளார்.