உலகம் முழுவதிலும் வசூலில் தனி வரலாறு படைத்த கபாலி

0

ரஜினி நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘கபாலி’ படத்தின் முதல் நாள் வசூல் நிலவரத்தால் தயாரிப்பாளர் தாணு மகிழ்ச்சியில் இருக்கிறார்.

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கபாலி’. சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தை தாணு தயாரித்திருக்கிறார். உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி இருக்கிறது.

தமிழகத்தில் இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், வசூலையும் பெருமளவில் குவித்து வருகிறது.

இப்படத்தின் தயாரிப்பாளர் தாணு, “கடவுளின் அருளால் இந்தியளவில் மட்டுமன்றி உலகளவிலும் நல்ல வசூல் செய்து வருகிறது. இப்படத்துக்கு மொழி ஒரு தடையின்றி அனைத்து தரப்பு மக்களும் காண வருகிறார்கள்.

வசூல் ரீதியாக இப்படம் உலகளவில் பெரும் சாதனை செய்து வருகிறது. முதல் நாளில் சுமார் 100 கோடி அளவுக்கு வசூல் இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.

ஒரு இந்திய நடிகரின் படம் இந்தளவுக்கு சாதனை புரிந்திருப்பது இதுவே முதல் முறை. இது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்ற ஒரு நடிகரால் மட்டுமே முடியும். சமூக விரோத சக்திகள் செய்யும் நாசகர செயல்தான் திருட்டு டிவிடி. ஆனால் வசூல் பாதிப்படையவில்லை” என்று தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்காவில் 480 திரையரங்குகள், மலேசியாவில் 490 திரையரங்குகள், வளைகுடா நாடுகளில் சுமார் 500 திரையரங்குகள் என சுமார் 4000 திரையரங்குகளுக்கு அதிகமாக இப்படம் வெளியாகி இருக்கிறது.

உலகளவில் வசூல் நிலவரம்

முதல் நாள் தமிழகத்தில் மட்டும் சுமார் ரூ. 24.8 கோடி வசூல் செய்திருக்கிறது ‘கபாலி’. தமிழ் திரையுலகில் இதற்கு முன்பு வெளியான அனைத்து படங்களின் முதல் நாள் வசூலையும் முறியடித்திருக்கிறார்கள்.

உலக அளவில் ரூ.104 கோடி வசூல் செய்துள்ளது. இதில் இந்திய அளவில் மட்டும் ரூ.48 கோடி வசூல் செய்துள்ளது. இவை அனைத்துமே டிக்கெட் விற்பனை மூலமாக வந்த தொகையாகும். இவற்றில் இருந்து விநியோகஸ்தர்களுக்கான பணம் போக, தயாரிப்பாளருக்கான தொகை வரும்.

உலக வசூலில் இருந்து தோராயமாக தயாரிப்பாளருக்கு சுமார் ரூ.80 கோடி முதல் நாள் மட்டும் கிடைத்திருக்கும் என்கிறார்கள்.