உயர் வளர்ச்சி பாதையில் தமிழகம்: பொருளாதார வளர்ச்சி 8.16 சதவிகிதமாக இருக்கும்

0
163

உயர் வளர்ச்சி பாதையில் தமிழகம்: பொருளாதார வளர்ச்சி 8.16 சதவிகிதமாக இருக்கும்

சென்னை, பிப்.8– மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி 8.16 சதவிகிதமாக இருக்கும் என்றும் வருவாய் பற்றாக்குறை குறையும் என்றும் தமிழக சட்டசபையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

சட்டசபையில் 2019–20ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:–

பெருமை உடையவர்கள் மட்டுமே அளப்பரிய செயல்களை முறைப்படி செய்து முடிக்க முடியும் என்ற திருவள்ளுவரின் வாக்கினை மெய்யாக்கி; ‘மக்களால் நான் – மக்களுக்காகவே நான்’ என்று தமிழக மக்களின் நலனுக்காகவும், தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் தன்னை முழுமையாக அர்ப்பணித்து; ‘மக்கள் தொண்டே மகேசன் தொண்டு’ என்று தன்னலம் கருதாமல் அல்லும் பகலும் அயராது உழைத்து; தமிழக மக்களின் நெஞ்சங்களில் மறைந்தும் மறையாமல் என்றும் வாழ்பவர்; எங்கள் உள்ளங்களில் உணர்வின் ஊற்றாகவும் ஆற்றலின் தூண்டுகோலாகவும் எங்களை வழிநடத்தும் பேரொளியாகவும்; அவர் உழைப்பால் அமைத்துத் தந்த இந்த நல்லாட்சியின் காவல் தெய்வமாகவும்; விளங்கிவரும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா காட்டிய நல்வழியில், எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடித்து, வெற்றிகரமாக

அம்மாவின் ஆட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக தொடர்ந்து நடத்தி வருகிறார். அம்மாவின் அளப்பரிய பேராற்றலை எண்ணி வியந்து, எங்களை தொடர்ந்து வழிநடத்த வேண்டும் என வணங்கி, அவர் விட்டுச் சென்ற நற்பணிகளைத் தொடர,

2019-2020 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை இந்தப் பேரவையின் முன் சமர்ப்பிக்க விழைகிறேன்.

‘அமைதி, வளம், வளர்ச்சி’ என்ற மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வளர்ச்சி முழக்கத்தை அடிப்படைக் கொள்கையாகக் கொண்டு இந்த அரசு செயல்பட்டு வருகிறது. ஒரு நாடு வளமும், வளர்ச்சியும் அடைய வேண்டுமெனில் அங்கு சட்டத்தின் ஆட்சி நிலைபெற்று அமைதி நிலைநாட்டப்பட வேண்டும். இந்த அரசு அமைதியை நிலைநாட்டி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்து சமூகப் பொருளாதார வளர்ச்சியை பெருக்கி வருகிறது. பொருளாதார வளர்ச்சி மட்டும் பலதரப்பட்ட மக்கள் வளம் பெறுவதை உறுதி செய்யாது என்பதால்தான் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி, பொருளாதார வளர்ச்சியின் பயனை ஏழை எளிய மக்களும் நுகர இந்த அரசு வழிவகை செய்துவருகிறது. இதன் மூலம், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ‘எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்’ என்ற இலட்சியக் கனவை நிறைவேற்ற இந்த அரசு அரும்பாடுபட்டு வருகிறது.

சுகாதாரம், கல்வியில் உயர்தரமான சேவை

பொருளாதார வளர்ச்சியைப் பெருக்கி, கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்கி, வறுமையை ஒழிப்பதற்கான கடினமான சவாலை இந்த அரசு எதிர்கொண்டுள்ளது. அதனால்தான் முதன்மைத் துறையை ஊக்குவித்து, அதை வலுப்படுத்தும் அதே வேளையில், உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் கூடுதல் முதலீடுகளை ஈர்ப்பதற்கும் இந்த அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. திறன் மேம்பாடு, வறுமை ஒழிப்பு, நகர்ப்புர உட்கட்டமைப்பின் மேம்பாடு, சாலை, மின்சாரம், நீர்ப்பாசனம் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவது போன்ற பல்வேறு சவால்களையும் இந்த அரசு தொடர்ந்து திறம்பட கையாண்டு வருகிறது. அனைவரும் பயன்பெறத்தக்க வகையில், சுகாதாரம், கல்வி ஆகியவற்றில் உயர்தரமான சேவையைப் பெற்றிட உட்கட்டமைப்பு வசதிகளைத் தரம் உயர்த்துவதற்கு இந்த அரசு தொடர்ந்து முன்னுரிமை வழங்கி வருகிறது. நிதிநிலை மேலாண்மை வழுவாமல் இந்த சவால்களுக்குத் தீர்வு கண்டு, மக்களின் நலனை மேம்படுத்தும் வகையில் இந்த வரவு-செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் 51.86 சதவீதம் சேவைத் துறையின் பங்களிப்பு இருப்பதால் மாநிலப் பொருளாதாரம் சேவைத் துறையையே அதிகம் சார்ந்துள்ளது. சமச்சீரான வளர்ச்சி அடைந்து அதன் பலன் அனைவரையும் சமமாகச் சென்றடையும் வகையில் தொழில் துறை உள்ளிட்ட இரண்டாம் நிலை துறைக்கும், வேளாண் துறைக்கும் இந்த அரசு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறது. 2011-–2012 ஆம் ஆண்டில் மாநிலத்தில் 1,03,600 ரூபாயாக இருந்த தனி நபர் வருமானம் 2017–2018ஆம் ஆண்டில், நிலையான விலைகளின் அடிப்படையில், 1,42,267 ரூபாயாக உயர்ந்துள்ளது. 2017-–2018 ஆம் ஆண்டில், முன் மதிப்பீடுகளின்படி, நிலையான விலைகளின் அடிப்படையில், தேசியப் பொருளாதார வளர்ச்சி 7.20 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், அதே ஆண்டில் மாநிலப் பொருளாதார வளர்ச்சியானது 8.09சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 2018–-2019 ஆம் ஆண்டில் முதல்நிலை மதிப்பீடுகளின்படி, மாநிலப் பொருளாதார வளர்ச்சி 8.16 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், உயர் வளர்ச்சிப் பாதையில் மாநிலம் செல்ல வழிவகை ஏற்பட்டுள்ளது.

வறுமை, கல்வியறிவின்மை, வேலையின்மை, சுகாதாரக் குறியீடுகள் மற்றும் பாலின சமத்துவம் போன்ற குறியீடுகளில் 100 பிற்படுத்தப்பட்ட வட்டாரங்களில் சிறப்புக் கவனம் செலுத்தி மாநிலத்தில் சமச்சீரான வளர்ச்சியை அடைவதற்காக, மாநில சமச்சீர் வளர்ச்சி நிதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வரவு–செலவுத் திட்டத்தில், இந்நிதியத்திற்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று, ‘சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்திற்கு’, 2019–2020 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 75 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, தமிழ்நாடு புதுமை முயற்சிகள் திட்டத்திற்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வருவாய்ப் பற்றாக்குறை ரூ. 14,315 கோடியாக குறையும்

பதினான்காவது நிதிக்குழுவின் பரிந்துரைகளால், மாநிலங்களுக்கு இடையேயான மத்திய அரசின் நிதிப் பகிர்வில் தமிழ்நாட்டிற்கான பங்கு குறைந்துள்ளபோதும், ‘உதய்’ திட்டத்தையும், ஊதிய உயர்வையும் இந்த அரசு செயல்படுத்தியுள்ளது. 2017–2018ஆம் ஆண்டில் 9.07 சதவீதமாக இருந்த மாநிலத்தின் சொந்த வரி வருவாயின் வளர்ச்சி, 2018–2019ஆம் ஆண்டில் 14 சதவீதத்திற்கும் கூடுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரிவருவாயில் ஏற்பட்டுள்ள இந்த சாதகமான மாற்றத்தினால் 2018-–2019 ஆம் ஆண்டு திருத்த மதிப்பீட்டில் கணிக்கப்பட்ட வருவாய்ப் பற்றாக்குறை 19,319 கோடி ரூபாயிலிருந்து 2019–-2020 ஆம் ஆண்டில் வருவாய்ப் பற்றாக்குறை 14,315 கோடி ரூபாயாகக் குறையும் என கணிக்கப்பட்டுள்ளது. ‘உதய்’ திட்டம் மற்றும் ஊதிய உயர்வு போன்றவை ஏற்படுத்திய தாக்கம் வரும் காலத்தில் குறையும் என்பதாலும், சொந்த வரி வருவாயில் காணப்படும் உயர் வளர்ச்சியாலும், வரும் ஆண்டுகளில் வருவாய்ப் பற்றாக்குறை படிப்படியாகக் குறைய வாய்ப்புள்ளது. பொருட்கள் மற்றும் சேவைகள் வரி முறையை சிறப்பாகச் செயல்படுத்தும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடும் உள்ள நிலையில், பொருட்கள் மற்றும் சேவைகள் வரி முறையின் கீழ் கிடைக்கப்பெறும் வரி வருவாய்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தையும் பெற்றுள்ளது. எனினும், மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்கிணைந்த பொருட்கள் மற்றும் சேவைகள் வரி வருவாயில் 2017–2018 ஆம் ஆண்டில் மாநிலத்திற்கு கிடைக்க வேண்டிய 5,454 கோடி ரூபாய் அளவிலான பங்கையும், பொருட்கள் மற்றும் சேவைகள் வரியில் 455.16 கோடி ரூபாய் அளவிலான உறுதிசெய்யப்பட்ட இழப்பீட்டுத் தொகையும் மத்திய அரசிடமிருந்து தமிழ்நாட்டிற்கு இதுவரை கிடைக்கப் பெறவில்லை. இந்த நிலுவைத் தொகைகளை விடுவிப்பதில் மத்திய அரசு செய்யும் தாமதம் மாநிலத்தின் நிதிநிலையின் மீது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மாநிலத்தின் வருவாய்ச் செலவினங்கள் உயர்ந்து வருவதால், மூலதனச் செலவினங்களையும், உட்கட்டமைப்புத் திட்டங்களையும் அதிக அளவில் மேற்கொள்வதற்கு போதுமான நிதி ஆதாரங்கள் இல்லை. எனவே, உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கான கருத்துருவாக்கம் முதல் செயலாக்கம் வரை விரைந்து செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு உட்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் ஏற்படுத்தப்பட்டதுடன், இதற்கான நிதி ஆதாரங்களைத் திரட்டுவதற்காக தமிழ்நாடு உட்கட்டமைப்பு நிதி மேலாண்மைக் கழகமும் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு உட்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் 3,329 கி.மீ. நீளமுள்ள நெடுஞ்சாலைப் பணிகள், சில்லஹல்லா நீரேற்று புனல் மின் திட்டம் ஆகியவற்றிற்கான விரிவான திட்ட அறிக்கைகளை தயாரிப்பதற்காக முறையே 132.76 கோடி ரூபாயும், 21.83 கோடி ரூபாயும் அனுமதித்துள்ளதுடன், சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் மற்றும் அதிவேக மக்கள் திரள் போக்குவரத்தையும் சென்னை மெட்ரோ இரயிலையும் ஒருங்கிணைத்தல் போன்ற திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கைகளை தயாரிப்பதற்காகவும் நிதி உதவியை அளித்துள்ளது. சென்னை திறன்மிகு நகர நிறுவனம் மூலம் 660 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட உள்ள அறிவுசார் போக்குவரத்து அமைப்புத் திட்டத்தினை தமிழ்நாடு உட்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் உருவாக்கி, இத்திட்டத்திற்கு ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு முகமையின் நிதியுதவியையும் பெற்றுள்ளது.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.