இறையன்பு 35 ஆண்டுகள் ஐ.ஏ.எஸ். பணியை முடித்து இன்று ஓய்வு பெறுகிறார் : தமிழ்நாட்டின் 49-வது தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா
சென்னை, தமிழக அரசின் 48-வது தலைமை செயலாளராக இறையன்பு, தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதும் 7.5.2021 அன்று நியமிக்கப்பட்டார். 1988-ம் ஆண்டு பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர், ஐ.ஏ.எஸ். தேர்வில் இந்திய அளவில் 15-வது இடத்தையும், தமிழக அளவில் முதல் இடத்தையும் பிடித்தவர்.
1990-ம் ஆண்டு நாகப்பட்டினம் உதவி கலெக்டராக தனது ஐ.ஏ.எஸ். பணியை தொடங்கியவர். காஞ்சீபுரம் கலெக்டர், செய்தித்துறை, சுற்றுலாத்துறை என பல துறைகளில் செயலாளர், தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் முதன்மை செயலாளர், அண்ணா மேலாண்மை பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர் என பல முக்கிய பொறுப்புகளை அலங்கரித்தவர்.
எளிமைக்கும், நேர்மைக்கும் பெயர்பெற்றவர் இறையன்பு. ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சியாக இருந்தாலும் கூட சாதாரண உடையிலேயே பங்கேற்பவர். வெளியூர் ஆய்வுக்கு செல்லும்போது கூட தனது உடைமைகளை தானே எடுத்துச்சென்று பிற அதிகாரிகளுக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர். எந்த சூழ்நிலையிலும் நேர்மை தவறாமல் தனது கடமையை நிறைவேற்றி வந்தவர்.
ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் இவர் வித்தியாசமானவர். சமூக அக்கறை கொண்டவர். எளியோருடைய தேவைகளை நிறைவேற்றுவதற்காக அவர்களுடன் நெருங்கி பழகியவர்.
அதிகாரமிக்க பதவியில் இருந்தபோதும் கூட எந்தவித இறுமாப்பும் இல்லாமல் சாதாரண ஊழியர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை, சாமானியர்கள் முதல் செல்வாக்கு மிக்கவர்கள் வரை என அத்தனை பேரிடமும் மிக சாதாரணமாக பழகி தனது பணிக்காலத்தை நிறைவு செய்துள்ளார். தான் மட்டுமல்லாமல் தன்னை போன்று எளிமையாகவும், நேர்மையாகவும் பணியாற்றியவர்களை தட்டிக்கொடுக்க மறவாதவர்.
தனது பணிக்காலத்தில் நேர்மையாக செயல்பட்ட துப்புரவு பணியாளர்கள் முதல் ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் வரை என அத்தனை பேரையும் நேரில் வரவழைத்து அவர்களது நேர்மையை பாராட்டி பொன்னாடை அணிவித்து புத்தகங்களை பரிசாக வழங்கி உற்சாகமூட்டியவர்.
குறைகளை தீர்த்து வைத்தவர் சில நேரங்களில் மனுதாரர்கள் மனு கொடுத்துவிட்டு வீட்டுக்கு செல்வதற்குள் அவர்களுடைய குறைகளைத் தீர்த்து வைத்த பெருமைக்குரியவர்.
1963-ம் ஆண்டு ஜூன் மாதம் 16-ந் தேதி சேலம் மாவட்டத்தில் உள்ள காட்டூர் கிராமத்தில் வெங்கடாசலம்-பேபி சரோஜா தம்பதியருக்கு மகனாக பிறந்தார். நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்த இறையன்பு பள்ளி பருவத்திலேயே அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு தனது பயணத்தை தொடங்கினார்.
இவரது மூத்த சகோதரர் திருப்புகழ், குஜராத் மாநிலத்தில் பணியாற்றிய ஐ.ஏ.எஸ். அதிகாரி. பிரதமர் நரேந்திர மோடியின் நேரடி பாராட்டை பெற்றவர்.
பி.எஸ்சி. (வேளாண்மை) பட்டப்படிப்பை முடித்த இவர், வணிக மேலாண்மை, ஆங்கில இலக்கியம், தொழிலாளர் மேலாண்மை, உளவியல் பிரிவில் முதுகலை பட்டமும், வர்த்தக நிர்வாகம், ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் என பல பட்டங்களுக்கு சொந்தக்காரர் இறையன்பு.
பி.எஸ்சி. (வேளாண்மை) பட்டப்படிப்பில் பல்கலைக்கழக அளவில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றார். அரசு பணிகளுக்கு மத்தியிலும் இதுவரை 154 புத்தகங்களை எழுதி உள்ளார். எந்த நிலையிலும் அவப்பெயர் வந்து விடக்கூடாது என்பதில் கண்ணும், கருத்துமாக இருந்தவர்.
இதன் காரணமாக தலைமை செயலாளராக பொறுப்பேற்றதும் தான் இந்த பதவியில் இருக்கும் வரை தான் எழுதிய புத்தகங்களை அரசு நூலகங்களுக்கு வாங்கக்கூடாது என்றும், அரசு விழாக்களின் போது தான் எழுதிய புத்தகத்தை அன்பளிப்பாக தரக்கூடாது என்றும் கண்டிப்பான உத்தரவை பிறப்பித்தவர்.
தொழில்நுட்ப வளர்ச்சியை சுட்டிக்காட்டி ஊராட்சி பகுதிகளில் தண்டோரா மூலம் தெரிவிக்கப்படும் அறிவிப்புகளுக்கு எதிராக கருத்துகள் வெளியான போது, இனிமேல் தண்டோரா மூலம் எந்த அறிவிப்புகளும் மேற்கொள்ளக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்தார்.
சாதி பாகுபாடு காரணமாக சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தில் ஊராட்சிகளில் அந்தந்த ஊராட்சி தலைவர்கள் கொடியேற்ற மறுக்கப்படுவதை அறிந்து இதுபோன்ற நாட்களில் ஊராட்சி தலைவர்கள் கொடியேற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என கலெக்டர்களுக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்தவர்.
இத்தனை பெருமைக்குரிய ஐ.ஏ.எஸ். அதிகாரி இறையன்புவின் பணிக்காலம் எந்த காலத்திலும் மறக்க முடியாத ஒன்றாகவே இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
சிவதாஸ் மீனா IAS
ராஜஸ்தானை சேர்ந்தவர் சிவதாஸ் மீனா. ஜெய்ப்பூரில் உள்ள மாளவியா பிராந்திய பொறியியல் கல்லூரியில் சிவில் எஞ்சினியரிங் படித்த இவர், ஜப்பானில் சர்வதேச ஆய்வுகளில் முதுகலைப் பட்டம் பெற்றார். ராஜஸ்தானி, தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகள் தெரிந்திருக்கும் இவருக்கு, ஜப்பான் மொழியையும் கற்றுள்ளார்.
1989 ஆம் ஆண்டு ஐஏஎஸ் பேட்ச்சை சேர்ந்த இவர், 30 ஆண்டுகள் ஐஏஎஸ் பணி அனுபவம் கொண்டவர் ஆவார். தமிழக கேடரில் ஐஏஎஸ் அதிகாரியாக சிவதாஸ் மீனா பணியில் சேர்ந்த இவர், காஞ்சிபுரம் உதவி கலெக்டராக தனது பணியை துவங்கினார். பின்னர் கோவில்பட்டியில் உதவிக் கலெக்டர், வேலூரில் கூடுதல் கலெக்டர், மாவட்ட கலெக்டர் என தொடர்ந்து பதவி வகித்தார்.
ஊரக வளர்ச்சித் துறை, நில நிர்வாகத் துறை, போக்குவரத்துத் துறை என பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றினார். கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் முதன்மைச் செயலாளர் உள்பட பல முக்கிய பதவிகளை சிவ்தாஸ் மீனா வகித்து வந்த சிவதாஸ் மீனா, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 4 செயலாளர்களில் ஒருவராக இருந்தார்.
இதையடுத்து ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சேர்மனாக பணி புரிந்து வந்தார். இதைதொடர்ந்து கடந்த 2021-ம் ஆண்டு முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு சிவதாஸை தமிழ்நாட்டுக்கு மீண்டும் அழைத்து வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி சிவதாஸ் மீனாவை ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டதன் பேரில் மாநில அரசு பணிக்குத் திருப்பி அனுப்பியது. தற்போது நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக பணியாற்றி வரும் நிலையில், இவரை 49-வது தலைமைச் செயலாளராக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.