இனி ரேஷன் கடைகளில் ரூ. 1000 வழங்கப்படாது; வீட்டுக்கே சென்று அளிக்க அரசு உத்தரவு

0

இனி ரேஷன் கடைகளில் ரூ. 1000 வழங்கப்படாது; வீட்டுக்கே சென்று அளிக்க அரசு உத்தரவு

கொரோனா பாதிப்பு நிவாரணமாக தமிழக அரசு அறிவித்த ஆயிரம் ரூபாய் வரும் ஏழாம் தேதி முதல் பயனாளிகளின் வீட்டுக்கே கொண்டு சேர்க்க அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால் மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட நிலையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் இலவச பொருட்கள் வழங்குவதாக முதல்வர் அறிவித்தார்.

நேற்று முதல் ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் பொருட்கள் வழங்கப்பட்ட நிலையில், பல்வேறு இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. டோக்கன் விநியோகித்து மக்களை கட்டுப்படுத்தினாலும், பணத்தைப் பெறும் ஆர்வத்தில் சிலர் தங்களது நேரத்திற்கு முன்பே வந்து காத்திருந்தனர்.

இந்த நிலையில், வரும் 7-ம் தேதி முதல் ஆயிரம் ரூபாய் பணத்தை பயனாளிகளின் வீட்டுக்கே கொண்டுபோய் சேர்க்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பணத்துடன் இலவச பொருட்களைப் பெறுவதற்கான டோக்கனை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

நாளை ஏற்கனவே டோக்கன் வழங்கப்பட்டவர்களுக்கு ரேஷன் கடையிலேயே பணம் மற்றும் பொருட்கள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாளை மறுநாள் விடுமுறை மற்றும் 6-ம் தேதியும் ஏற்கனவே டோக்கன் வழங்கப்பட்டவர்களுக்கு ரேஷன் கடையில் பணம் மற்றும் பொருட்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

7-ம் தேதி முதல் எக்காரணத்தைக் கொண்டும் ரேஷன் கடையில் பணம் விநியோகிக்கக் கூடாது என்றும், இலவச பொருட்களை மட்டுமே ரேஷன் கடையில் விநியோகிக்க வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.