இனி சிங்கார சென்னை அட்டையை MTC பேருந்திலும் பயன்படுத்தலாம்- திட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் சிவசங்கர்

0
84

இனி சிங்கார சென்னை அட்டையை MTC பேருந்திலும் பயன்படுத்தலாம்- திட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் சிவசங்கர்

சென்னையில் ஒரு இடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு செல்ல பேருந்து, மெட்ரோ, மின்சார ரயில் உள்ளிட்ட மூன்று போக்குவரத்து வசதிகள் உள்ளன. ஆனால் இது மூன்றிற்கும் மக்கள் தனி தனியாக டிக்கெட் எடுத்து வருகிறார்கள். மக்கள் தனித்தனியாக பயணச்சீட்டு பயன்படுத்தும் நிலையில் இவை அனைத்துக்கும் ஒரே பயணச்சீட்டை பயன்படுத்தும் முறையை கொண்டு வர தமிழ்நாடு அரசு முடிவு செய்து அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்காக சிங்காரச் சென்னை பயண அட்டை உருவாக்கப்பட்ட நிலையில், முதற்கட்டமாக இந்த பயண அட்டை மெட்ரோ ரயில்களில் பயணிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அடுத்ததாக மாநகர பேருந்துகளிலும் இந்த அட்டையை பயன்படுத்தும் திட்டத்தை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று அறிமுகப்படுத்தினார்.

இத்திட்டத்தின் முதற்கட்டமாக 50,000 அட்டைகள் SBI மூலம் கட்டணமின்றி வழங்கப்படுகிறது. இந்த சிங்கார சென்னை பயண அட்டை கோயம்பேடு, பிராட்வே, சென்ட்ரல் ரயில் நிலையம், தாம்பரம், பூந்தமல்லி திருவான்மியூர், செங்குன்றம், வேளச்சேரி, கிண்டி, ஆவடி, தியாகராயநகர், அம்பத்தூர் தொ.பே, அம்பத்தூர் ஓ.டி, அடையாறு, அய்யப்பன்தாங்கல், கிளாம்பாக்கம், வடபழனி, ஸ்ரீபெரும்புதூர், பெரம்பூர், சைதாப்பேட்டை ஆகிய பேருந்து நிலையங்களில் உள்ள மாநகர் போக்குவரத்துக் கழக பயணச்சீட்டு விற்பனை மையங்களின் வாயிலாக வழங்கப்பட உள்ளது.

கட்டணமின்றி வழங்கப்படும் அட்டைகளை, ரீசார்ஜ் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், ஆன்லைன் போர்ட்டல்கள், கைப்பேசி பயன்பாடுகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மாநகர் போக்குவரத்துக் கழக பயணச்சீட்டு விற்பனை மையங்கள் போன்ற பல்வேறு வழிகளில் இந்த அட்டையை எளிதாக ரீசார்ஜ் செய்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் இந்த சிங்கார சென்னை பயண அட்டையை பேருந்துகளில் நடத்துநர்களிடமும் ரீசார்ஜ் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.