“இந்த மேடையில் எனக்கு பழைய சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன” : உருக்கமாகப் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

0
186

“இந்த மேடையில் எனக்கு பழைய சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன” : உருக்கமாகப் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

“இந்த மேடையைப் பார்க்கும்போது எனது நினைவுகள் பின்னோக்கிச் செல்கின்றன.” என நெகிழ்ச்சிகரமாகப் பேசினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் “உங்களில் ஒருவன்” என்ற பெயரில் தன்வரலாற்று நூலை எழுதியுள்ளார். 1976ஆம் ஆண்டு வரை உள்ள 23 ஆண்டு கால நினைவுகள் இந்தப் புத்தகத்தின் முதல் பாகத்தில் இடம்பெற்றுள்ளன.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய நூலை வெளியிட்டார். இந்த நிகழ்வில் ஏற்புரையாற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “எனது அரசியல் வாழ்க்கையின் திருப்புமுனையாக இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது. இந்த மேடையைப் பார்க்கும்போது எனது நினைவுகள் பின்னோக்கிச் செல்கின்றன. 1975-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20-ஆம் நாள் எனக்கும் துர்க்காவுக்கும் திருமணம் நடந்தது. எனக்கு முன்னதாகவே, ‘அவரும் நானும்’ என்ற தலைப்பில் துர்க்கா தனது வாழ்க்கை வரலாற்றை எழுதி விட்டார்.

மணமக்களாகிய எங்களை வாழ்த்தி அன்றைய பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் அவர்கள் வாழ்த்துச் செய்தி அனுப்பி இருந்தார்கள். இன்று அவரது பெயரன் ராகுல் காந்தி அவர்கள் இந்த மேடையில் இருக்கிறார். பரூக் அப்துல்லா அவர்கள் வாழ்த்துச் செய்தி அனுப்பி இருந்தார்கள். இன்று அவரது மகன் உமர் அப்துல்லா இந்த மேடையில் இருக்கிறார். கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மாபெரும் தலைவரான – கேரளாவைச் சேர்ந்த ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் அவர்கள் வாழ்த்துச் செய்தி அனுப்பி இருந்தார்கள். இப்போது கேரளாவில் இருந்து மாண்புமிகு பினராயி விஜயன் அவர்கள் வந்துள்ளார்கள். நேரில் வந்து எங்களை வாழ்த்துவதற்காக பீகாரில் இருந்து பெருந்தலைவர் ஜெகஜீவன்ராம் அவர்கள் வந்திருந்தார்கள். இப்போது பீகாரில் இருந்து தேஜஸ்வீ வந்திருக்கிறார்.

அன்று எங்கள் திருமணமே, அகில இந்திய மாநாடு போல இருந்தது. இன்று இந்தப் புத்தக வெளியீட்டு விழாவும் அகில இந்திய மாநாடு போல அமைந்திருக்கிறது. தங்களது பல்வேறு அரசியல் பணிகளுக்கு மத்தியில் இங்கே வந்திருந்து – என்னைப் பெருமைப்படுத்திய ராகுல் காந்தி அவர்களுக்கும், மாண்புமிகு பினராயி விஜயன் அவர்களுக்கும், உமர் அப்துல்லா அவர்களுக்கும், தேஜஸ்வீ அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

I thank each and everyone of you for gracing this occasion with your presence. I have always dedicated myself to public life and I assure that I will remain so forever. Before concluding my speech, I wish to make an appeal, not just to the leaders on this stage, but to everyone who believes in secular values. Our Indian Union is facing a big threat from divisive forces. We all need to come together to defeat them and protect the founding principles of India.

தலைவர் கலைஞர் அவர்களின் புத்தக வெளியீட்டு விழாக்களில் பெரும்பாலும் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் இருப்பார்கள். இந்த மேடையிலும் வைரமுத்து அவர்கள் இருக்கிறார்கள். கலைஞர் அவர்கள் இல்லாமல் வைரமுத்துவின் புத்தக வெளியீட்டு விழாக்கள் இருக்காது. அந்த நன்றியின் அடையாளமாக – கலைஞரின் கவிதை அடையாளமாக – இங்கு வந்திருந்து வாழ்த்திய வைரமுத்து அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திராவிட இயக்கமும் திரையுலகமும் பிரிக்க முடியாதவை. அதேபோல் கோபாலபுரமும் கோடம்பாக்கமும் பிரிக்க முடியாதவை. தலைவர் தொடங்கி – இன்று உதயநிதி வரை அது தொடர்ந்து வருகிறது. கலையுலகின் பிரதிநிதியாக இனமான நடிகர் சத்யராஜ் அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி இருக்கிறார். அவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கழகத்தின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்களும் – பொருளாளர் டி.ஆர்.பாலு அவர்களும் எனது இரண்டு கரங்களாக இருந்து பங்களிப்பு செய்து வருகிறார்கள். எனது பள்ளி – கல்லூரிப் பருவ வயதில் அவர்களை நான் பார்த்தேன். இன்று நாங்கள் இணைந்து கழகத்தைக் காத்து வருகிறோம். கொள்கை சார்ந்த நட்புக்கு எவ்வளவு பலம் அதிகம் என்பதை பல்லாண்டுகால இந்த நட்பு காட்டி வருகிறது. இத்தகைய இலட்சோப லட்சம் உடன்பிறப்புகளால் ஆனதுதான் திராவிட முன்னேற்றக் கழகம் ஆகும். துரைமுருகன் அவர்களுக்கும் பாலு அவர்களுக்கும் நன்றி சொல்வது எனக்கு நானே நன்றி சொல்லிக் கொள்வது ஆகும்.

நாடாளுமன்றப் பணியாக இருந்தாலும், மக்கள் பணியாக இருந்தாலும், மகளிரணிப்பணியாக இருந்தாலும் அனைத்திலும் சிறப்பாகச் செயல்பட்டு வரும் அன்புத் தங்கை கனிமொழி, இவ்விழாவுக்கான வரவேற்புரை ஆற்றினார். அவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தின் அரசியல் தலைவர்கள் – அமைச்சர் பெருமக்கள் – எனது நெருங்கிய நண்பர்கள் – கழகத்தின் முன்னணியினர் – கலை உலகத்தைச் சேர்ந்தவர்கள் – சட்டமன்ற உறுப்பினர்கள் – நாடாளுமன்ற உறுப்பினர்கள் – அரசு அலுவலர்கள் – பத்திரிகையாளர்கள் – கழக உடன்பிறப்புகள் என அரங்கம் நிறைந்துள்ளது. உங்கள் அனைவருக்கும் தனித்தனி நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்களால் உருவாக்கப்பட்டவன் நான்.

உங்களால் வளர்த்தெடுக்கப்பட்டவன் நான்.

என்றும் உங்களில் ஒருவனே!” என உருக்கமாகப் பேசினார்.