‘இந்து சமய அறநிலையத்துறையின் சாதனைகளை இவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை’ : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

0
230

‘இந்து சமய அறநிலையத்துறையின் சாதனைகளை இவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை’ : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (21.10.2024) சென்னை, திருவான்மியூர், அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில் திருமண மண்டபத்தில், இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் 31 இணைகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து விழாவில் ஆற்றிய உரை:-

நாம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்து நான் முதலமைச்சராக பொறுப்பேற்று, எந்தத் துறையின் சார்பில் அதிக நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறேன் என்றால், அது இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நடைபெறக்கூடிய நிகழ்ச்சிகள்தான். அதற்குக் காரணம் அந்தத் துறையின் அமைச்சர் சேகர்பாபு தான். அவர் எப்போதுமே என்னை விடமாட்டார். எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், அந்த நிகழ்ச்சிக்கு ஒரு முக்கியத்துவம் தந்து அது எல்லோராலும் பாராட்டப்படக்கூடிய வகையில் நடத்தக்கூடிய ஆற்றலை பெற்றவர் நம்முடைய சேகர்பாபு அவர்கள்.

நான் கலந்துகொண்டிருக்கக்கூடிய நிகழ்ச்சிகளை நேற்றுதான் ஒரு கணக்கெடுத்துப் பார்த்தேன். எந்த மாவட்டத்திற்கு அதிகம் சென்றிருக்கிறேன்; எந்தத் துறைக்கு அதிகம் சென்றிருக்கிறேன்; வெளி மாவட்டங்களுக்கு எத்தனை முறை நான் பயணம் செய்திருக்கிறேன். அதுபோல, முதலமைச்சரின் அலுவலகத்தில் இருக்கக்கூடிய வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாக எத்தனை நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறேன் என்று கணக்கெடுத்துப் பார்த்தேன். அனைத்து கணக்கிலும் முந்தியிருப்பது அறநிலையத் துறை தான். அந்த வகையில் இன்றைக்கு இந்த அறநிலையத் துறையின் சார்பில், மாண்புமிகு அமைச்சர் சேகர்பாபு அவர்களின் சீரிய முயற்சியோடு 31 இணையர்களுக்கு திருமணம் நடத்தி வைக்கக்கூடிய இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தும் ஒரு சிறப்பான வாய்ப்பினை பெற்றமைக்கு நான் மகிழ்ச்சியடைகிறேன். பெருமைப்படுகிறேன்.

இந்த அறநிலையத்துறை மட்டுமல்ல, அனைத்துத் துறைகளை எடுத்துக்கொண்டாலும் அதை சரிசமமாக நாங்கள் அதற்குரிய சிறப்பைத் தந்து முக்கியத்துவம் கொடுத்து அந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதுண்டு. இந்தத் துறையை பொறுத்தவரைக்கும், இரவு பகல் பாராமல் நம்முடைய செயல்வீரராக விளங்கிக் கொண்டிருக்கக்கூடிய சேகர்பாபு அவர்கள் அமைச்சராக கிடைத்திருக்கிறார்கள்.

நான் முதலில் இந்த 31 இணையர்களுக்கு உங்கள் அனைவரின் சார்பில் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். நான் ஒன்றை கவனித்துப் பார்த்தேன். அதாவது, ஒவ்வொன்றாக நான் சென்று நடத்தி வைத்தால் நேரமாகிவிடும் என்பதற்காக, நான் ஓரிடத்தில் இருக்கும்போது, அந்த தம்பதிகளை மட்டும் தனித்தனியாக இங்கே வரவழைத்து அவர்களுக்கு வாழ்த்துச் சொல்லக்கூடிய வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. எந்தவித குழப்பம் இருக்கக்கூடாது. நான் போகின்ற நேரத்தில் அவர்களுக்கு இடையூறு வந்துவிடக்கூடாது என்பதற்காக இந்த நிகழ்ச்சியை நம்முடைய சேகர்பாபு அவர்களும், இந்தத் துறையைச் சார்ந்த அதிகாரிகளும் ஏற்பாடு செய்திருக்கின்றனர்.

நீங்கள் மற்றொன்றையும் கவனித்துப் பார்க்கலாம். அதாவது ஒவ்வொரு ஜோடிகளும் வரும்போது, அவர்கள் கையில் ஒரு தட்டைக் கொடுத்திருக்கிறார்கள். அந்தத் தட்டை யாரிடத்தில் கொடுத்திருக்கிறார்கள் என்றால், மாப்பிள்ளையிடம் கொடுத்திருக்கிறார்கள். மாப்பிள்ளை தட்டு ஏந்தவேண்டும்; நான் குறைத்து பேச விரும்பவில்லை; விமர்சித்து பேச விரும்பவில்லை; அப்படிதான் பெண்களுக்குரிய தகுதியை, பெண்களுக்குரிய உரிமையை நாம் தந்து கொண்டிருக்கிறோம் என்பதற்கு இது ஒரு சாட்சி; இது ஒரு அடையாளம். அந்த வகையில், இந்த மணவிழா நிகழ்ச்சியில் உங்களோடு சேர்ந்து நானும் மணமக்களை வாழ்த்துவதற்கு கடமைப்பட்டிருக்கிறேன்.

கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த துறையின் சார்பில் பல்வேறு சாதனைகளை நம்முடைய அமைச்சராக இருக்கக்கூடிய சேகர்பாபு அவர்களின் முயற்சியோடு நாம் செய்து கொண்டிருக்கிறோம்.

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, கோயில்களை பழமை மாறாமல் புதுப்பிக்க மாநில அளவிலான ஒரு வல்லுநர் குழுவை அமைத்தோம். அவர்கள் வழங்கிய ஆலோசனைப்படி, தான் அந்தப்பணியை நாம் தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.

கடந்த மூன்றாண்டு காலத்தில், 2 ஆயிரத்து 226 திருக்கோவில்களில் திருப்பணிகள் முடித்து குடமுழுக்கு விழா சிறப்பாக நடத்தப்பட்டிருக்கிறது. இது மிகப்பெரிய சாதனையாகும்.

10 ஆயிரத்து 238 திருக்கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.

நன்கொடையாளர்கள் கொடுத்திருக்கக்கூடிய 1103 கோடி ரூபாய் நிதியின் மூலமாக 9163 பணிகள் திருக்கோவில்களில் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்த மூன்று வருட காலத்தில் 7 ஆயிரத்து 69 ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு 6 ஆயிரத்து 792 கோடி ரூபாய் ஆகும். இந்த சாதனையைப் பார்த்து பக்தர்கள் மகிழ்ச்சிப் பெருக்கோடு நம்முடைய அரசை மனதார பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு இலட்சத்து 74 ஆயிரத்து 894 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு எல்லைக்கற்கள் நடப்பட்டு, கோவில் சொத்துக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன.

நம்முடைய அரசு பொறுப்பேற்ற பிறகு எடுத்த சிறப்புத் திட்டங்களில் ஒன்று என்னவென்றால், 1000 ஆண்டு பழமையான திருக்கோவில்களை பாதுகாப்பது ஆகும். 426.62 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2774 கோவில்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 37 கோவில்களில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.

திருக்கோவில்களுக்கு ரூபாய் ஒரு இலட்சம் வழங்கி அதில் இருந்து கிடைக்கப் பெறும் வட்டித் தொகையில் வழிபாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. அந்த தொகையை 2 இலட்சமாக உயர்த்தியதும் நம்முடைய கழக அரசு தான். இத்திட்டத்தின்படி, 17 ஆயிரம் கோவில்களுக்கு முதலீட்டுத் தொகையாக 200 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்தோம். இந்த 17 ஆயிரம் கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை நமது அரசு தான் தொடங்கியது.

கழக அரசு பொறுப்பேற்ற பிறகு மலைக் கோவில்களிலும், அதிக அளவில் பக்தர்கள் வருகை தரும் திருக்கோவில்களிலும் பக்தர்களின் நலன் கருதி மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டன. 17 கோவில்களில் மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டு, 5 இலட்சத்து 98 ஆயிரம் பக்தர்கள் இது வரை பயனடைந்திருக்கிறார்கள்.

500 மூத்த குடிமக்கள் இராமேஸ்வரம், காசிக்கு ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள்.

1008 மூத்த குடிமக்கள் அறுபடை வீடுகளுக்கு ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்கள்.

1003 பக்தர்கள் ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களுக்கு ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்கள்.

1014 பக்தர்கள் புரட்டாசி மாதத்தில் வைணவ கோவில்களுக்கு ஆன்மிக பயணமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்கள்.

இரண்டு திருக்கோவில்களில் மட்டும் இருந்த நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்திற்கு ஒன்பது கோவில்களுக்கு விரிவுப்படுத்தியிருக்கிறோம்.

ஒரு வேளை அன்னதானம் வழங்கும் திட்டம் இப்போது 760 கோவில்களில் நடைபெற்று வருகிறது. இதன் மூலமாக தினந்தோறும் 92 ஆயிரம் பேர் இதனால் பசியாறுகிறார்கள்.

கடந்த ஆட்சியில், தங்க முதலீடு திட்டம் செயல்படாமல் இருந்தது. இது தொடர்பான நீதிமன்ற வழக்குகளை நாம் வென்று, ஓய்வு பெற்ற நீதிபதிகளின் கண்காணிப்பில் இத்திட்டத்தை செயல்படுத்திக்கொண்டு இருக்கிறோம். 257.22 கோடி ரூபாய் மதிப்பிலான 442 கிலோ சுத்த தங்கக் கட்டிகள் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 5.79 கோடி ரூபாய் ஆண்டுக்கு வட்டியாகக் கிடைக்கிறது. இதனை கோவில்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்தி வருகிறோம்.

இதெல்லாம் கொஞ்சம்தான். இப்படி ஏராளமான சாதனைகளை இந்து சமய அறநிலையத் துறை செய்து வருகிறது. இதைப்பற்றி சேகர்பாபுவிடம் கேட்டால், ஒரு புத்தகமாகவே போட்டு வழங்கிவிடுவார். அந்த அளவுக்கு திட்டங்களும், சாதனைகளும் நடந்து கொண்டிருக்கின்றன. அறநிலையத் துறையின் சிறப்பான செயல்பாட்டில் முக்கியமானது என்னவென்றால், கோவில் தொடர்பான வழக்குகளை எதிர்கொள்வது ஆகும். அதில் கண்ணுங்கருத்துமாக இருந்து வழக்கை நடத்தி தொடர்ந்து வெற்றி பெற்று கொண்டிருக்கிறோம். அதற்கு உதாரணமாக சொல்லவேண்டும் என்று சொன்னால்,

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் தொடர்பான வழக்கு 2006 முதல் நடந்து வந்தது. அதில் வெற்றிகரமான தீர்ப்பைப் பெற்று 24 அர்ச்சகர்கள் இன்றைக்கு நாம் நியமித்திருக்கிறோம்.

தமிழில் குடமுழுக்கு நடத்துவது குறித்து உடன்பாடான தீர்ப்பை பெற்றுள்ளோம்.

திருக்கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்தல் திட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அரசுக்கு சாதகமான தீர்ப்பு வந்துள்ளது.

திருக்கோவில்களில் நடைபெறும் திருப்பணிகளுக்கு அனுமதி வழங்க தடையாக இருந்த வழக்கில் இறுதித் தீர்ப்பை பெற்று திருப்பணிகளை தொடங்கினோம்.

1988 ஆம் ஆண்டு முதல் நடந்து கொண்டு வந்த திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோவில் குறித்த வழக்கை முடித்து வைத்து, குடமுழுக்கு விழா நடத்தி இருக்கிறோம்.

1995 முதல் நடந்து கொண்டு வந்த சிவகங்கை அருள்மிகு சுவர்ண மூர்த்தீஸ்வரர் கோவில் தேரோட்ட வழக்கையும் முடித்து தேரோட்டத்தை சிறப்பாக நடத்தி இருக்கிறோம்.

பொழிச்சலூர் அருள்மிகு அகத்தீஸ்வரர் கோவில் தொடர்பான வழக்கு 2003 முதல் நடைபெற்று வந்தது. அதில் சாதகமான தீர்ப்பை பெற்று கோவில் சொத்தை பாதுகாத்தோம்.

சிதம்பரம் அருள்மிகு சபாநாயகம் திருக்கோவில் கனகசபை மீது ஏறி வழிபாடு நடத்துவது குறித்து தொடரப்பட்ட வழக்கில் உடன்பாடான தீர்ப்பை பெற்றதால், பக்தர்கள் இப்போது தடையின்றி வழிபாடு செய்து வருகிறார்கள்.

செயல் அலுவலர் நியமனம், பணியாளர்கள் மாறுதல், கல்லூரிகள் தொடங்குதல், தங்கக் கட்டிகள் உருக்குதல், அறங்காவலர் குழு அமைத்தல், அறங்காவலரிடம் செங்கோல் வழங்க மறுத்தல் என பல்வேறு வழக்குகள் போடப்பட்டது. அதிலும் வெற்றிப் பெற்றிருக்கிறோம்.

திருச்செந்தூர், திருவட்டாறு, சங்கரன்கோவில், வடலூர், வேலூர், கந்தர்வகோட்டம், கள்ளக்குறிச்சி, தேக்கம்பட்டி, மயிலாப்பூர் என பல்வேறு ஊர் கோவில் வழக்குகளை முடிவுக்கு கொண்டு வந்து கோவில்களின் செயல்பாடுகளை தடங்கலின்றி செய்து வருகிறோம்.

இதையெல்லாம் உண்மையான பக்தர்கள் பாராட்டுகிறார்கள்; நன்றாக கவனியுங்கள் – உண்மையான பக்தர்கள் பாராட்டுகிறார்கள். பக்தியை தங்களது பகல் வேஷ அரசியலுக்கு பயன்படுத்தி வருபவர்களால் இதனை தாங்கிக் கொள்ள முடியவில்லை. தலைவர் கலைஞர் அவர்கள் பராசக்தி திரைப்படத்தில் ஒரு வசனத்தை வைத்திருப்பார்; கோயில்கள் கூடாது என்பது நம்முடைய கொள்கை அல்ல. கோயில்களை கொடியவர்களின் கூடாராமாக ஆக்கிவிடக்கூடாது என்பதுதான் நம்முடைய இலட்சியம் என்று சொன்னார்.

நம்முடைய சாதனைகளை தடுக்கத்தான் இப்படிப்பட்ட பல்வேறு வழக்குகள் போடப்பட்டு வருகிறது. ஆனால் அந்த வழக்குகளை எல்லாம் சட்டப்படி முறியடித்து நம்முடைய சாதனை பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறோம்.

ஒவ்வொரு முறையும் இந்த வழக்குகளில் வெற்றி பெற்று நேராக பார்த்தாலும் சரி, டெலிபோனில் பேசினாலும் சரி மகிழ்ச்சியோடு நம்முடைய சேகர்பாபு அவர்கள் அண்ணா, இந்த வழக்கில் வெற்றி பெற்றுவிட்டோம் என்று அவர் ஒவ்வொருமுறையும் சொல்கின்றபோது எனக்கு அளவு கடந்த மகிழ்ச்சி. ஆகவே, சரியான இடத்தில்தான் இந்தத் துறையை ஒப்படைத்திருக்கிறோம்; சரியான நபரை தான் நாம் தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்று அப்போது எனக்கு ஒரு பூரிப்பு வரும். என்னையே அறியாமல் ஒரு மகிழ்ச்சி வரும். சட்ட நுணுக்கங்களை அவர் விவரித்து சொல்லும்போது, இன்னும் சிறிது நாட்களில் அவரே ஒரு தேர்ந்த வழக்கறிஞராக மாறிவிடுவாரோ என்ற சந்தேகம் கூட வந்திருக்கிறது. அந்த அளவுக்கு அவர் ஊறிப்போயிருக்கிறார்.

அத்தனை மதங்களையும் சமமாக மதித்து, எல்லோருடைய உரிமைகளையும் காக்கின்ற அரசாக நம்முடைய அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது. அதனால்தான் இது திராவிட மாடல் அரசு என்று கம்பீரமாக சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

இத்தகையை சிறப்பான ஆட்சி காலத்தில், மணக்கோலம் பூண்டிருக்கக்கூடிய இந்த தம்பதியர்களை மனதார வாழ்த்துவதற்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். வாழ்க்கையில் அனைத்து நன்மைகளையும் பெற்று நீங்கள் சிறப்போடு வாழ்ந்திடவேண்டும்; அதேநேரத்தில், உங்களிடத்தில் நான் ஒரு அன்பான வேண்டுகோளை வைக்க விரும்புவது, இந்த தம்பதியர்கள் இன்றைக்கு மணவிழாவை முடித்திருக்கிறீர்கள்.

நீங்கள் மணவிழாவை முடித்து உங்களுடைய செல்வங்களை பெற்றுக்கொள்ள இருக்கிறீர்கள். முன்பெல்லாம் செல்வங்கள் என்று சொல்கின்றபோது 16 பெற்று பெறுவாழ்வோடு வாழவேண்டும் என்று சொல்வார்கள். 16 என்றால் 16 குழந்தைகள் அல்ல. 16 செல்வங்கள். அதனால், திரு. கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார். 16 செல்வங்கள் என்பது என்ன என்று கேட்டால், மாடு, மனை, மனைவி, மக்கள், கல்வி, கேள்வி, அறிவு, ஒழுக்கம், நிலம், நீர், வயது, வாகனம், பொன், பொருள், போகம், புகழ் – இதுதான் 16 செல்வங்கள். அந்த 16 செல்வங்களை பெற்று வாழுங்கள் என்று தான் அன்றைக்கு வாழ்த்தினார்கள். இப்போது யாரும் 16 செல்வங்களை பெற்று வாழுங்கள் என்று வாழ்த்துவது கிடையாது. அளவோடு பெற்று வளமோடு வாழுங்கள் என்றுதான் சொல்கிறோம்.

நம்முடைய மணமக்களை நான் அன்போடு கேட்டுக் கொள்ள விரும்புவது உங்களுக்கு பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு அழகான தமிழ்பெயர்களை சூட்டுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். அப்படிப்பட்ட உணர்வோடு உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டு வாழுங்கள்; வாழுங்கள்; வாழுங்கள்; பல்லாண்டு காலம் வாழுங்கள்; என்று வாழ்த்தி விடைபெறுகிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.