இந்திய விமானப்படையில் தேஜஸ் இலகுரக போர் விமானங்கள் இணைப்பு

0

பெங்களூர்,ஜூலை.1–இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இலகு ரக போர் விமானமான ‘தேஜஸ்’ விமானங்களின் முதல் தொகுப்பு பெங்களூரில் உள்ள இந்திய விமானப்படையில் இன்று இணைக்கப்பட்டது.
இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மிகவும் எடை குறைந்த ‘தேஜஸ்’ என்ற போர் விமானத்தை அதிநவீன தொழில்நுட்பத்துடன் தயாரித்து வருகிறது. முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட இந்த தேஜஸ் போர் விமானம், உலகின் மிகவும் எடை குறைந்த போர் விமானங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
இந்திய விமானப்படையில் கடந்த ஆண்டு முறைப்படி சேர்க்கப்பட்ட தேஜஸ் போர் விமானங்களின் முதல் தொகுப்பு பெங்களூரில் உள்ள இந்திய விமானப்படையில் இன்று இணைக்கப்பட்டது. இந்த இணைப்பு தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ள ராணுவ மந்திரி மனோகர் பரிக்கர், ‘முற்றிலுமாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானங்கள் விமானப்படையில் இணைக்கப்பட்டுள்ள இந்த தருணம் நாட்டுக்கு பெருமிதமான தருணமாகும்.
நமது விமானப்படையின் பலத்தை தேஜஸ் புதிய உயரத்துக்கு கொண்டு செல்லும்’ என குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, பெங்களூர் விமானப்படை தளத்தில் தேஜஸ் போர் விமானங்களுக்கு இன்று ‘வாட்டர் ஸல்யூட்’ எனப்படும் வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று இணைக்கப்பட்ட இரண்டு தேஜஸ் போர் விமானங்களும் வானில் நடத்திய சாகச நிகழ்ச்சி பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.
இரண்டு ஆண்டுகள்வரை பெங்களூரில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் இந்த விமானங்கள் வைக்கப்பட்டிருக்கும். பின்னர், தமிழ்நாட்டில் உள்ள சூலூர் விமானப்படை தளத்துக்கு இவை அனுப்பி வைக்கப்படும் என தெரியவந்துள்ளது.